தமிழ்நாட்டிற்கான ஆக்சிஜனை ஆந்திரா, தெலுங்கானாவிற்கு தாரை வார்த்த மத்திய அரசு! மோடி அரசின் எதேச்சாதிகாரப் போக்கை வன்மையாக கண்டிக்கின்றோம்! – மே பதினேழு இயக்கம்
கொரானா நோய்த்தொற்றின் இரண்டாம் அலை இந்தியா முழுவதும் தீவிரம் அடைந்துள்ள நிலையில் மருத்துவத்திற்கான ஆக்ஸிஜன் தேவை அதிகரித்துள்ளது. இந்நிலையில், தமிழ்நாட்டின் தேவைக்கான ஆக்சிஜனில் சுமார் 45 மெட்ரிக் டன் ஆக்சிஜனை, தமிழ்நாடு அரசை கலந்தாலோசிக்காமலே ஆந்திரா, தெலுங்கானா மாநிலங்களுக்கு திருப்பிவிட்டுள்ளது பாஜக அரசு. இதனால் தமிழ்நாடு இக்கட்டான சூழலை எதிர்கொள்ள தள்ளப்பட்டுள்ளது. தனது நிர்வாக திறமையின்மையினால் தமிழ்நாட்டை பலிகடவாக்கும் மோடி அரசின் இந்த எதேச்சாதிகாரப் போக்கை வன்மையாக கண்டிக்கின்றோம்.
தமிழ்நாட்டை பொறுத்தவரை ஏப்ரல் மாத இறுதியில் தனது தேவையை சந்திப்பதற்கு தினமும் 465 மெட்ரிக் டன் ஆக்ஸிஜன் கையிருப்பு இருக்க வேண்டிய நிலையில், இப்போது வரை 200 மெட்ரிக் டன் ஆக்சிஜனை மட்டுமே மத்திய அரசு குறைத்து வழங்குகிறது. தமிழ்நாட்டிற்கான தேவையில் சுமார் 265 மெட்ரிக் டன் ஆக்ஸிஜனை மத்திய பிரதேசம், உத்திரப்பிரதேசம், டில்லி, மராட்டிய மாநிலங்களுக்கு கொடுத்து வருகிறது மோடி அரசு. இதனால் தமிழ்நாட்டில் ஆக்ஸிஜன் பற்றாக்குறை ஏற்படும் சூழல் உண்டாக்கியுள்ளது. இந்நிலையில் தமிழ்நாடு அரசை கலந்தாலோசிக்காமல் மேலும் 45 மெட்ரிக் டன் ஆக்சிஜனை மோடி அரசு களவாடியுள்ளது அதிர்ச்சியளிக்கிறது.
கொரான நோய்த்தொற்றில் தமிழ்நாடு ஒவ்வொரு நாளும் புதிய உச்சத்தை தொடும் நிலையில், தமிழ்நாட்டிற்கான ஆக்ஸிஜன் தேவையும் அதிகரித்துள்ளது. ஆந்திராவில் சுமார் 54,000 பேரும், தெலுங்கானாவில் சுமார் 43,000 பேரும் கொரான சிகிச்சையில் உள்ள போது, தமிழ்நாட்டில் சுமார் 80,000 பேர் சிகிச்சையில் உள்ளனர். ஆனால், தெலுங்கானாவிற்கு 350 மெட்ரிக் டன் ஆக்சிஜனை வழங்கும் மோடி அரசு, தமிழ்நாட்டிற்கு 200 மெட்ரிக் டன் மட்டுமே ஒதுக்கீடு செய்கிறது. இச்சூழலில், மோடி அரசின் நிர்வாகத் திறமையின்மையினால் ஏற்பட்ட இக்கட்டான நிலைக்கு, தமிழ்நாட்டிடமிருந்து ஆக்சிஜனை பறித்து ஆந்திரா, தெலுங்கானாவிற்கு அனுப்புவது, மற்ற மாநிலங்களின் தேவைக்காக தமிழ்நாட்டை பலிகொடுப்பதற்கு ஒப்பாகும்.
கொரானா நோய்த்தொற்றினை எதிர்கொள்ள ஒரு வருடத்திற்கும் மேலான காலம் இருந்தும், இந்திய அரசு தயாராகத காரணத்தினால் வடஇந்தியாவில் ஆக்ஸிஜன் கடும் பற்றாக்குறை ஏற்பட்டு மக்கள் சிகிச்சையிலேயே இறந்துவருகின்றனர். இதே காலகட்டத்தில் சுமார் 9300 மெட்ரிக் டன் ஆக்சிஜனை வெளிநாட்டிற்கு ஏற்றுமதி செய்துள்ளது மோடி அரசு. நோய்த்தொற்று காலத்தில் ஆக்ஸிஜன் தேவை குறித்த சரியான திட்டமிடல் இல்லாததையே இது காட்டுகிறது. தடுப்பூசி விசயத்திலும் இதே நிலைக்கு தள்ளியுள்ளது மோடி அரசு. இவை மோடி அரசின் கையாலாகாத தன்மையையே காட்டுகிறது.
அதேவேளை, மூடப்பட்ட தூத்துக்குடி ஸ்டெர்லைட் தாமிர உருக்காலை மூலம் நாளொன்றுக்கு 1000 டன் ஆக்ஸிஜன் உற்பத்தி செய்துத்தர முன்வருவதாக மத்திய, மாநில அரசுகளுக்கு வேதாந்தா நிறுவனம் கடிதம் எழுதியுள்ளது. தமிழ்நாட்டின் காபந்து முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்களும் ஆக்ஸிஜன் தேவையை சந்திக்க தொழிற்சாலைகளுக்கு தற்காலிக உரிமம் வழங்க தொழில் வளர்ச்சித் துறை அமைச்சகத்திற்கு அறிவுறுத்தியுள்ளார். இதன் பின்புலத்தில், ஆக்ஸிஜன் தட்டுப்பாட்டை காரணம் காட்டி மூடப்பட்ட ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறப்பதற்காக செயற்கையாக ஆக்ஸிஜன் தட்டுப்பாடு உருவாக்கப்படுகிறதோ என்று சந்தேகம் எழுகிறது.
தலைசிறந்த மருத்துவ கட்டமைப்பை கொண்ட தமிழ்நாடு, தனது தேவையை பூர்த்தி செய்துகொள்ளும் அளவிற்கு தற்சார்பாக இருப்பது ஒற்றை சர்வாதிக ஆட்சியை நோக்கி செல்லும் மோடி அரசிற்கு தடையாக உள்ளது. எனவே தமிழ்நாட்டை மருத்துவ கட்டமைப்பை சீரழிக்கும் முயற்சிகளில் ஒன்றாக இதனை பார்க்கமுடிக்கிறது. ஆட்சியின் இறுதி நாட்களில் இருக்கும் அதிமுக அரசு, தனது கூட்டணி கட்சியான பாஜகவின் மத்திய அரசு தமிழ்நாட்டின் ஆக்ஸிஜனை கொள்ளையடிப்பதை தடுக்க முன்வர வேண்டும். தமிழ்நாட்டிற்கு தேவையான ஆக்சிஜன் போதுமான அளவு கையிருப்பில் இருப்பதை தமிழ்நாடு அரசு உறுதி செய்ய வேண்டும். அதேவேளை, எந்த காரணத்திற்காகவும் ஸ்டெர்லைட் ஆலை மீண்டும் திறக்கப்படாது என்பதை உறுதி செய்ய வேண்டுமென மே பதினேழு இயக்கம் வலியுறுத்துகிறது.
மே பதினேழு இயக்கம்
9884072010