யாழ் பல்கலைக்கழக முள்ளிவாய்க்கால் நினைவிடம் தகர்ப்பு! சர்வதேசத்தின் தோல்வியால் தமிழீழத்தில் தொடரும் தமிழினப்படுகொலை!! – மே பதினேழு இயக்கம்
தமிழீழ இனப்படுகொலையை நினைவுகூரும் வகையில் யாழ்ப்பாண பல்கலைக்கழக வளாகத்தில் வைக்கப்பற்றிருந்த முள்ளிவாய்க்கால் நினைவு சின்னத்தை, மாணவர்களின் கடும் எதிர்ப்பையும் மீறி இரவோடு இரவாக தகர்த்தெறிந்துள்ளது சிங்களப் பேரினவாத இலங்கை அரசு! ஒன்றரை லட்சம் தமிழர்கள் இனப்படுகொலை செய்யப்பட்டதற்கான நீதி வேண்டி சர்வதேச சமூகத்திடம் தமிழினம் போராடி வரும் வேளையில், மீண்டும் ஆட்சிக்கு வந்த தமிழீழ இனப்படுகொலையாளர்கள், சர்வதேசத்தின் பார்வையின் முன்னியிலையே தமிழர் மீதான அடக்குமுறையை தொடர்கின்றனர். தமிழீழ கோரிக்கையை வேரோடு அழிக்க வேண்டும் என்று சிங்களப் பேரினவாத இலங்கை அரசு முனைப்போடு இருப்பதையே யாழ் பல்கலைக்கழக நினைவிடம் தகர்ப்பு உறுதிபடுத்துகிறது!
தமிழீழ இனப்படுகொலையை நினைவுகூரும் விதமாக, யாழ்ப்பாண பல்கலைக்கழக வளாகத்தில் நிர்வாகத்திடம் அனுமதி பெற்று, கடந்த 2018 இனப்படுகொலை மாதத்திற்கு முன்னால் முள்ளிவாய்க்கால் நினைவிடம் ஒன்றை மாணவர்கள் கட்டியெழுப்பினர். கடந்த இரண்டு வருடங்களாக இனப்படுகொலை நாளில் இனப்படுகொலையில் கொல்லப்பட்ட தமிழர்களை நினைவு கூறும் விதமாக இலங்கை ராணுவத்தினரின் கடும் எதிர்ப்பையும் மீறி பல்கலைக்கழக மாணவர்கள் நினைவேந்தல் நிகழ்வை நடத்தினர். இது தொடரக்கூடாது என்று எண்ணம் கொண்டே, தற்போது அந்த நினைவிடம் தகர்க்கப்பட்டுள்ளது.
தமிழீழ இனப்படுகொலைக்கு பின்னர் தமிழர்களுக்கான நீதியை பெற்றுத்தருவதாக அமெரிக்கா, இந்தியா போன்ற நாடுகள் ஐ.நா. மனித உரிமை ஆணையத்தில் பொய்யாக நடித்துக்கொண்டிருந்த போது, தமிழினப்படுகொலையை நடத்தியதே அந்த நாடுகள் தான் என்று அம்பலப்படுத்தியதோடு, அந்நாடுகள் தமிழர்களுக்கு நீதியை பெற்றுத்தராமல் கைவிட்டுவிடும் என்று மே பதினேழு இயக்கம் எச்சரிக்கவும் செய்தது. தமிழர்களுக்கு நீதி பெற்றுத்தருவதாக கூறிய வழிமுறைகள் அனைத்தும் தற்போது தோல்வியடைந்த நிலையில் சர்வதேச சமூகம் தமிழர்களை கைவிட்டதன் விளைவையே இன்று யாழ் பல்கலைக்கழக முள்ளிவாய்க்கால் நினைவிடம் தகர்க்கப்பட்டதன் மூலம் அறிய முடிகிறது. குறிப்பாக, இந்தியாவின் வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் இலங்கை சென்று, தமிழர்களுக்கான தீர்வு இலங்கையின் அரசியலமைப்புக்கு உட்பட்டதாக இருக்கும் என்று கூறிய இரண்டாம் நாளில் இது அரங்கேறியுள்ளது.
தமிழீழ இனப்படுகொலை குற்றவாளிகளான ராஜபக்சே சகோதரர்கள் மீண்டும் ஆட்சி அமைக்க முடிந்ததே, சர்வதேச சமூகத்தின் தோல்வியாக பார்க்க முடிகிறது. இனப்படுகொலையாளிகள் தப்புவிக்கப்பட்டதன் விளைவாக, தமிழீழம் நாள்தோறும் இலங்கை அரசின் அடக்குமுறைக்குள்ளாக்கப்படுகிறது. தமிழீழ விடுதலைப் புலிகள் அழிக்கப்பட்டு 12 ஆண்டுகள் ஆன பின்பும், இலங்கை ராணுவம் தமிழீழ பகுதியிலிருந்து விலக்கிக்கொள்ளப்படாமல் இருக்கிறது. காணாமல் ஆக்கப்பட்டோரை கண்டுபிடிக்க கோரி நடைபெறும் ஜனநாயக போராட்டங்கள் கூட நசுக்கப்படுகின்றன. இத்தகைய சூழலில், யாழ் பல்கலைக்கழக முள்ளிவாய்க்கால் நினைவிடம் தகர்க்கப்பட்டது, தமிழர்கள் மீதான இனப்படுகொலை முற்றுபெறவில்லை என்பதையே உணர்த்துகிறது.
இனப்படுகொலைக்கான நீதியை பெற்று தருவதற்கு இந்தியா, மேற்குலகு மீது வைத்த நம்பிக்கையே தமிழர்கள் மீதான இனப்படுகொலை இன்றும் தொடர்வதற்கு காரணமாயிற்று. சிங்களப் பேரினவாதம் தமிழர்களை முற்றிலும் அழிக்கப்படும் வரை இது நிறுத்தப்பட போவதில்லை. தமிழர்கள் ஒருங்கிணைந்து தமிழர்களுக்கான அரசியல் அமைப்பு மீண்டும் கட்டமைப்பதன் மூலம் தமிழீழ கோரிக்கையை குறைந்தபட்சம் காப்பாற்ற முடியும். புலம்பெயர் தமிழர்கள் ஒருங்கிணைந்து போராட முன்வருவதன் மூலம் சர்வதேசத்தின் தோல்வியை உலகிற்கு உணர்த்துவதோடு, தமிழர்களுக்கான நீதியை பெறுவதற்கு சர்வதேச சமூகத்தை நிர்பந்திக்க முடியும்!
மே பதினேழு இயக்கம்
9884072010