தொல்லியல் அறிஞர், மானுடவியலாளர், பண்பாட்டு ஆய்வாளர், சங்க இலக்கியத்தில் புலமை பெற்றவர், நாட்டார் வழக்காற்றியல் அறிஞர் என பன்முகத்தன்மை கொண்ட ஆளுமை ஐயா.பேரா.தொ.பரமசிவன் அவர்கள் நம்மை விட்டுப்பிரிந்தார்.
திராவிடஇயக்கப் பேராளுமை, பண்பாட்டு ஆய்வாளர், தமிழறிஞர், அரசியல் செயற்பாட்டாளர் என நீளும் அவரது ஆளுமை தமிழினத்தின் சிந்தனைச் செழுமைக்கு பெரும்பங்காற்றியது.
மார்க்சிய-பெரியாரிய பார்வையுடன் தமிழின சிக்கல்களை அணுகி ஆய்ந்தவர்.
திராவிட இயக்கச் சிந்தனையின் தளத்தை மேலும் விரிவடைந்த செயல்தளத்திற்கு நகர்த்திய பணியில் பெரும்பங்காற்றியவர். அனைத்து தோழமைகளையும் எளிமையுடன், இனிமையுடன், நம்பிக்கையுணர்வுடன் அணுகியவர். தனது விரிந்த அறிவை தமிழின மேன்மைக்கு அர்ப்பணித்தவர்.
மே17 இயக்கத்தின் துவக்க காலத்திலிருந்து ஆதரித்து வழிகாட்டியவர். ஈழத்தமிழருக்கான மே 17 இயக்கத்தின் முதல் நினைவேந்தலை பாளையங்கோட்டையில் நடத்தியபோது அங்கு வந்து ஈழத் தமிழர்களுக்கான நினைவுச்சுடரை ஏற்றி எழுச்சியுரை நிகழ்த்தியவர். தொடர்ந்து இளம்தோழர்களை உற்சாகமூட்டி வளர்த்தெடுத்தவர் என அவரது பங்களிப்பின் பட்டியல் நீளமானது.
பெரியாரை தமிழ்ச்சமூகத்தில் இருந்து அப்புறப்படுத்தும் வேலைகள் நடக்கும் போதெல்லாம் அதற்கு எதிராக சமர் புரிந்தவர். அப்படிப்பட்டவர் அவரது நினைவு நாளிலேயே மறைந்துவிட்டார்.
தமிழ்ச்சமூகத்திற்கு ஐயா ஆற்றிய அளப்பரிய பணிகளை கருத்தில் கொண்டு, ஐயா தொ.ப. அவர்களின் இறுதி சடங்கை தமிழ் நாடு அரசு தானாக முன்வந்து அரசு மரியாதையுடன் நடத்த வேண்டுமென மே 17 இயக்கம் வலியுறுத்துகிறது.
ஐயாவிற்கு மே17 இயக்கத் தோழமைகளின் புகழ் வணக்கம்.