விதிகளை மீறி இயங்கி தூத்துக்குடியை மாசுபடுத்தி வந்த ஸ்டெர்லைட் ஆலையை மூடக் கோரி கடந்த 2018ம் ஆண்டு தூத்துக்குடி குமரெட்டியாபுரத்தில் 100 நாட்களுக்கு மேலாக தொடர் போராட்டம் நடைபெற்றது. இப்போராட்டத்திற்கு நேரில் சென்று ஆதரவளித்த மே பதினேழு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் தோழர் திருமுருகன் காந்தி மற்றும் போராட்ட ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் பாத்திமா பாபு உள்ளிட்டோர் மீது வழக்கு பதியப்பட்டிருந்தது.
பின்னர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்ட அப்பாவி மக்கள் மீது துப்பாக்கி சூடு நடத்தி ஸ்னோலின் உள்ளிட்ட 14 பேரை சுட்டுக் கொன்றதை ஐ.நா.வின் மனித உரிமை ஆணையத்தில் மே பதினேழு இயக்கம் பதிவு செய்தது. இதன் காரணமாக தோழர் திருமுருகன் காந்தி நாடு திரும்பும் போது அவரை கைது செய்த தமிழ்நாடு காவல்துறை, அவரை தூத்துக்குடி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுத்தியது. அப்போது சிறைப்படுத்த மறுத்த நீதிபதி பின்னர் பிணை வழங்கினார்.
தோழர் திருமுருகன் காந்தி மீதான வழக்குகள் பின்னர் சிபிசிஐடிக்கு மாற்றப்பட்ட போது, குமரெட்டியாபுரம் போராட்ட வழக்கு கோவில்பட்டிக்கு மாற்றப்பட்டது. அந்த வழக்கில் நேரில் ஆஜராக சம்மன் அனுப்பப்பட்டிருந்த நிலையில், தோழர் திருமுருகன் காந்தி இன்று (23-12-20) கோவில்பட்டி நீதிமன்றத்தில் நேரில் ஆஜரானார். அப்போது அதே வழக்கில் உள்ள தோழர்கள் பேரா.பாத்திமாபாபு, ராஜா, ரீகன், மகேஸ் மற்றும் வழக்கறிஞர்.அதிசயக்குமார் ஆகியோர் உடனிருந்தனர்.