தமிழ் நாடு நாள் விழாவை கொண்டாடிய தோழர் பொழிலன் அவர்களை கைது செய்த காவல்துறையை கண்டிக்கின்றோம்!

தமிழ் நாடு நாள் விழாவை கொண்டாடிய தோழர் பொழிலன் அவர்களை கைது செய்த காவல்துறையை கண்டிக்கின்றோம்! – மே பதினேழு இயக்கம்

‘நவம்பர் 1’ தமிழ்நாடு நாள் அரசு விழாவாக கொண்டாடப்பட்டு வருகிறது. அப்படியாக இன்று தமிழ்நாடு நாள் விழாவை சிறப்பாக கொண்டாடிய தமிழக மக்கள் முன்னணியில் தலைவரும் பெரியாரிய உணர்வாளர்கள் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளருமான தோழர் பொழிலன் அவர்களை இன்று (01-11-20) பாவலரேறு தமிழ்க் களம் அரங்கில் வைத்து தமிழ்நாடு காவல்துறை கைது செய்துள்ளது. காவல்துறையின் இந்த அராஜக செயலை மே பதினேழு இயக்கம் வன்மையாக கண்டிக்கிறது!

மொழிவழி மாநிலமாக தமிழ்நாடு உருவாக்கப்பட்ட நாளான நவம்பர் 1’ஐ, தமிழ்நாடு நாளாக கொண்டாடப்பட வேண்டும் தமிழ்நாடு அரசே கடந்த 2019-ம் வருடம் ஆணை பிறப்பித்தது. நேற்று கூட முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் தமிழ்நாடு நாள் வாழ்த்துகளை அதிகாரப்பூர்வமாக தெரிவித்திருந்தார். தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலகமும் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு அரசு விழாவாக கொண்டாடப்படுகிறது. இப்படி அரசே கொண்டாடும் ஒரு விழாவை தோழர் பொழிலன் அவர்கள் கொண்டாடியது எவ்வகையில் தேசத்துரோகம் குற்றமாகும்?

பெரியாரிய உணர்வாளர்கள் கூட்டமைப்பு சார்பாக இவ்வாண்டு தமிழ்நாடு நாள் கொண்டாடப்படுவதை முன்னிட்டு தமிழ் நாடு கொடி உருவாக்கப்பட்டு அதனை தமிழ்நாடு அரசே அதிகாரப்பூர்வமாக ஏற்க வேண்டும் என்றும் முன்மொழியப்பட்டுள்ளது. கர்நாடக அரசு கரநாடக நாளை விடுமுறையுடன் கர்நாடக கொடியை ஏற்றி கொண்டாடி வருவதை போல, தமிழ்நாடு விழாவின் போதும் தமிழ்நாடு கொடியை ஏற்றி கொண்டாடுவதில் என்ன மாதிரியான சட்ட ஒழுங்கு பிரச்சனை ஏற்பட்டுவிடும் என்று தெரியவில்லை.

மாநிலங்கள் தனி கொடி வைத்துக்கொள்வதை இந்திய அரசியலமைப்புச் சட்டம் எந்த இடத்திலும் மறுக்கவில்லை. ஏற்கனவே பல மாநிலங்கள் தனிக்கொடி வைத்துள்ளன. கர்நாடகா அரசு கொடி ஏற்றி கர்நாடக நாளை கொண்டாடுவது எவ்விதத்திலும் அரசியலமைப்பு சட்டத்திற்கு எதிராக இல்லாத போது, தமிழ்நாட்டில் தமிழ்நாடு கொடி ஏற்றி தமிழ்நாடு விழாவை கொண்டாடுவது மட்டும் எவ்வகையில் அரசியலமைப்பு சட்டத்திற்கு எதிராக இருக்க முடியும்?

தமிழ்நாட்டின் அரசு விழாவை கொண்டாடப்படுவதை தமிழ்நாடு காவல்துறையே தடுக்கிறது என்றால், தமிழ்நாட்டின் காவல்துறை தமிழ்நாடு அரசின் கட்டுப்பாட்டில் செயல்படுகிறதா என்ற ஐயம் எழுகிறது. காவல்துறையின் தான்தோன்றித்தனமான இச்செயலை தமிழ்நாட்டின் ஜனநாயக சக்திகள் அனைத்தும் கண்டிக்க முன்வர வேண்டும். தமிழ்நாடு காவல்துறை கைது செய்த தோழர் பொழிலன் அவர்களை உடனடியாக விடுவிக்க வேண்டும். தமிழ்நாடு நாள் விழா கொண்டாடப்படுவதை தடுக்க முயற்சிக்கும் காவல்துறையினரை தமிழ்நாடு அரசு கட்டுப்படுத்த முன்வர வேண்டும் என மே பதினேழு இயக்கம் வலியுறுத்துகிறது.

மே பதினேழு இயக்கம்
9884072010

Leave a Reply