தந்தை பெரியாரின் சிலைக்கு மரியாதை செலுத்திய காவலர்கள் தண்டிக்கப்பட்டதற்கு வன்மையான கண்டனங்கள்!

தந்தை பெரியாரின் சிலைக்கு மரியாதை செலுத்திய காவலர்கள் தண்டிக்கப்பட்டதற்கு வன்மையான கண்டனங்கள்! – மே பதினேழு இயக்கம்

கடலூரில் தந்தை பெரியாரின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய மூன்று காவலர்களை தண்டிக்கும் வகையில் கள்ளக்குறிச்சிக்கு பணியிடமாற்றம் செய்து மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ஸ்ரீ அபினவ் உத்தரவிட்டுள்ளார். கடலூர் மாவட்ட கண்காணிப்பாளரின் இந்த செயலை மே பதினேழு இயக்கம் வன்மையாக கண்டிக்கிறது.

தமிழ்ச் சமூகத்தின் முன்னேற்றத்திற்காக தன் இறுதிகாலம் வரை போராடியவர் தந்தை பெரியார். தந்தை பெரியார் சாதி, மதம், இனம், மொழி கடந்து அனைத்து தரப்பு மக்களாலும் போற்றப்படக்கூடியவர். அவருக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்துவது என்பது பெருமைக்குரிய செயலாகும். ஆனால், கடலூர் மாவட்ட கண்காணிப்பாளருக்கு இது எந்த வகையில் குற்றச்செயலாக தெரிந்தது என்று தெரியவில்லை.

தந்தை பெரியாரை மக்களிடமிருந்து அந்நியப்படுத்தும் வேலையை ஆர்எஸ்எஸ்-பாஜக கூட்டம் செய்துவருகிறது. அதன்படி, பெரியார் சிலைகளை உடைப்பதும், அவமரியாதை செய்வதும் காவி கும்பலால் தொடர்ந்து நிகழ்த்தப்பட்டு வருகிறது. இதனை காரணம் காட்டி ஆட்சி அதிகாரத்தில் இருக்கும் காவி கூட்டம், பெரியார் சிலைக்கு கூண்டு வைத்து வருகிறது. இதனை தமிழர்கள் அனைவரும் கடுமையாக எதிர்த்து, சிலை அவமதிப்பில் ஈடுபடும் தமிழர் விரோத இந்துத்துவ கும்பல் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், சிலைக்கு வைக்கப்பட்ட கூண்டினை நீக்க வேண்டும் என்றும் போராடி வருகின்றனர். இந்த சூழலில் பெரியார் சிலைக்கு மாலை அணிவிப்பதே குற்றச்செயலாக காட்டும் வகையில் கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளரின் செயல் உள்ளது.

காவல்துறையினர் சமூகத்தில் ஒருவராக தனிப்பட்ட முறையில் குறிப்பிட்ட மதத்தை பின்பற்றுபவராக இருப்பதும், சீருடையில் கோவிலுக்கு செல்வதும், விரதம் இருப்பதும், காலணி அணியாமல் தாடி வளர்த்து கொள்வதும் எந்த வகையில் குற்றமில்லையோ, அந்த வகையில் சாதி மதத்திற்கு அப்பாற்பட்ட தமிழர்களால் போற்றப்படும் தந்தை பெரியாரின் சிலைக்கு மாலை அணிவிப்பதும் மரியாதை செலுத்துவதும் குற்றமில்லை. தந்தை பெரியாரின் பிறந்த நாளை அரசு விழாவாக கொண்டாடப்படுகிற போது, தந்தை பெரியாரின் சிலைக்கு மரியாதை செலுத்துவது குற்றச்செயல் என்று நடவடிக்கை எடுத்தால், அது தமிழ்நாடு அரசிற்கு எதிரான செயலாகும்.

வேறு மாநிலத்தை சேர்ந்தவர்கள் தமிழ்நாட்டின் குடிமைப் பணிகளில் பணியமர்த்தப்படும் போது, தமிழ்நாட்டின் சமூகவியலை அறிந்துகொண்டவராக இருக்க வேண்டும். ஆனால் ஆர்எஸ்எஸ் கூட்டம் அவர்களை தமிழர்களுக்கு எதிரானவர்களாக பயிற்றுவித்து, தமிழ்நாட்டில் பணியமர்த்துவதையே முதன்மை பணியாக செய்துவருகின்றனர். இந்தாண்டு குடிமைப் பணிக்கு தேர்ந்தெடுக்கப்பட்டவர்களில் ஏறக்குறைய 61% பேர் ஆர்எஸ்எஸ் பயிற்சி முகாமிலிருந்து வெளிவந்தவர்கள் என்பதை நினைவுகூற வேண்டும்.

கடலூர் மாவட்ட கண்காணிப்பாளரின் இந்த செயல் மேற்கூறிய பின்னணியில் பார்க்கப்பட வேண்டியதாக உள்ளது. பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்துவது குற்றச்செயல் அல்ல, மாறாக அதனை குற்றச்செயலாக கருதி தண்டித்த மாவட்ட கண்காணிப்பாளரின் செயலே குற்றமாகும்.

ஆகவே, தண்டிக்கப்பட்ட 3 காவலர்களின் பணியிட மாற்றம் இரத்து செய்யப்பட்டு மீண்டும் அதே இடத்தில் பணியில் அமர்த்தப்பட வேண்டும் என்றும், தவறிழைத்த மாவட்ட கண்காணிப்பாளர் ஸ்ரீ அபினவ் பொதுவெளியில் மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும், தவறும் பட்சத்தில் அவர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என தமிழக அரசை மே பதினேழு இயக்கம் வலியுறுத்துகிறது.

மேலும், தந்தை பெரியாரை மக்களிடமிருந்து அந்நியப்படுத்தும் எந்த செயலையும் தமிழ்நாடு அரசு அனுமதிக்கக் கூடாது என்றும், தமிழ்நாட்டில் பணியமர்த்தப்படும் குடிமைப்பணியாளர்கள் தமிழ்ச்சமூகத்தை, தமிழர்களை புரிந்தவர்களாக இருக்க வேண்டும் என்பதை தமிழ்நாடு அரசு உறுதி செய்ய வேண்டும்.

மே பதினேழு இயக்கம்
9884072010

Leave a Reply