போலி பல்கலைக்கழகங்களின் சொர்க்கமாக மாறும் உத்திரபிரதேசம்!
பல்கலைக்கழக மானியக் குழு (UGC) இன்று (07-10-2020) வெளியிடப்பட்டுள்ள அறிவிக்கையில், இந்தியாவில் 24 பல்கலைக்கழகங்கள் போலியானவை என்று தெரிவித்துள்ளன. அவற்றில் பெரும்பாலானவை உத்திரபிரதேசம் மாநிலத்தில் செயல்படுகின்றன. அதற்கு அடுத்தப்படியாக டில்லியில் அதிகளவு போலி பல்கலைக்கழகங்கள் செயல்படுகின்றன.
பல்கலைக்கழக மானியக் குழு சட்டத்தின்படி, UGC வரையறைக்குள் வரும் பல்கலைக்கழகங்கள் மட்டுமே பட்டம் வழங்க முடியும். அங்கீகரிக்கப்படாத நிறுவனங்கள் பல்கலைக்கழகம் என்று அழைத்துக்கொள்ளவும், பட்டம் வழங்கவும் தடை செய்யப்பட்டுள்ளனர். அந்த வகையில் இந்தியா முழுக்க 24 நிறுவனங்களை போலி என பட்டியலிட்டு, அவை பட்டம் வழங்குவதற்கு தடை செய்யப்பட்டுள்ளன என பொது அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
இந்த 24 போலி பல்கலைக்கழகங்களில் 8 உத்திரபிரதேசத்தில் செயல்படுகின்றன. மேலும் ஒன்று வழக்கில் உள்ளது. அதே போல் டில்லியை சேர்ந்த 7 பல்கலைக்கழகங்கள் போலியானவை என்று கூறி பட்டம் வழங்க தடை செய்யப்பட்டுள்ளன. இவ்வாறு பெரும்பாலான போலி பல்கலைக்கழகங்கள் உத்திரபிரதேசத்தை மையமாக கொண்டு செயல்படுவது, அந்த மாநிலம் எந்தளவிற்கு தரமான கல்வியை அளிக்க முற்படுகிறது என்பதையே காட்டுகிறது.
ஊழலை மையமாக கொண்டு செயல்படும் வடமாநில அரசு, அரசியல் செல்வாக்கை பயன்படுத்தி கல்வியை வியாபாரமாக்க முயலும் நபர்களிடம் கையூட்டு பெற்றுக்கொண்டு, இது மாதிரியான போலி பல்கலைக்கழகங்களை செயல்பட அனுமதிகிறது. இவை மாணவர்களின் எதிர்காலத்தையே கேள்விக்குறியாக்குகின்றன. இப்படியானபல்கலைகழகங்களில் பயின்று போலி பட்டம் பெரும் பலர் தான் இன்று, மத்திய அரசின் வேலைவாய்ப்புகளில் இந்தியா முழுக்க நிரப்பபடுகின்றனர். தமிழக அரசின் வேலைவாய்ப்புகளில் தமிழே தெரியாத வடஇந்தியர்கள் அதிகளவில் சேர்க்கப்படுவது குறித்து நீதிமன்றம் கூட கேள்வியெழுப்பியுள்ளதை நினைவுகூற வேண்டும்.
இந்தி மொழி பாடத்தில் கூட ஏறைக்குறைய 50% பேர் தேர்வு அடையாமல் செல்லும் மாநிலம் தான் இன்று நீட் தேர்வில் முன்னிலையில் உள்ளது. அப்படியான சூழலை கொண்ட மாநிலம் தான் போலி பட்டதாரிகளையும் உருவாக்குகிறது. ஆனால், இவர்கள் தான் தகுதி, திறமை என்று தமிழ்நாட்டை பார்த்து கேள்வி கேட்கிறார்கள். இவர்கள் உருவாக்கும் சட்டங்கள் கல்வியில் முன்னேறிய தமிழ்நாட்டை நாசப்படுத்தும் என்பதே உண்மை.