கீனி மீனி: தமிழினப்படுகொலையில் ஈடுபட்ட பிரிட்டனின் தனியார் ராணுவம்
பாதுகாக்கப்பட்ட தகவல்களை குறைந்தது 20 ஆண்டுகளுக்கு பிறகு வெளியிடும் கொள்கையின் அடிப்படையில் புத்தாண்டின் போது பிரிட்டிஷ் அரசு வெளியிட்ட தரவுகளில், தமிழினப்படுகொலையில் ஈடுபட்ட கூலிப்படையினர் குறித்த தகவலும் வெளிவந்துள்ளது. பிரிட்டனை சேர்ந்த கீனி மீனி (Keenie Meenie Services) என்ற நிறுவனம் 1980களில் இலங்கை ராணுவத்திற்கு பயிற்சி அளிப்பது என்ற ஒப்பந்தமிட்டுருந்தாலும், விடுதலைப்புலிகளுக்கு எதிரான மற்றொரு ஆயுதக்குழுவாக அது செயல்பட்டது. இலங்கை ராணுவத்தினரோடு இணைந்து புலிகள் மட்டுமல்லாது பொதுமக்கள் மீதும் தாக்குதல் நடத்தி கொலை செய்தனர்.
இந்த கீனி மீனியை சேர்ந்த கூலிப்படையினர் ஈவு இரக்கமற்ற வகையில் செயல்பட்டுள்ளனர். அதில் ஒன்றாக, 1986 ஜூன் 7 அன்று, ஒரு பேருந்தில் பொதுமக்களோடு புலிகளும் செல்கின்றனர் என்ற சந்தேகத்தில், ஹெலிகாப்டரில் இருந்து அந்த பேருந்தை சரமாரியாக சுட்டனர். தப்பி ஓடிய குழந்தைகள் பெண்கள் என அனைவரையும் சுட்டுக்கொன்றனர்.
இந்த தகவல்களை இங்கிலாந்து அரசு தாமதமாக தற்போது வெளியிட்டுள்ளதால் இக்குற்ற சம்பவங்களில் ஈடுபட்ட பலர் போர்க்குற்ற விசாரணைகளில் இருந்து தப்பியுள்ளனர். கீனி மீனியின் அப்போதைய தலைவர் ஜிம் ஜான்சன், இலங்கைக்கான மேலாளர் பிரையன் பேட்டி (Brian Baty) ஆகியோர் விசாரிக்கப்படாமலே இறந்துவிட்டனர்.
இது குறித்த பல்வேறு தகவல்களை திரட்டிய இங்கிலாந்தை சேர்ந்த பில் மில்லர் (Phil Miller) அவர்கள், “Keenie Meenie: The British Mercenaries Who Got Away with War Crimes” என்ற புத்தகத்தை எழுதியுள்ளார். மேலும் அது குறித்த ஆவணப்படம் ஒன்றும் வெளிவர உள்ளது. பில் மில்லர் தமிழீழ இனப்படுகொலையில் ஈடுபட்ட இங்கிலாந்து அரசை தொடர்ந்து அம்பலப்படுத்தி வருகின்றவர். இவரது ஆய்வுகளை, “தமிழினப்படுகொலையில் இங்கிலாந்தின் பங்கு” என்னும் மே 17 இயக்கம் வெளியிட்ட புத்தகத்தில் எழுதியுள்ளோம். மேலும், 2018-இல் தோழர் திருமுருகன் காந்தி மீது UAPA வழக்கு பாய்ந்த போது, பில் மில்லர் அவர்கள் கண்டன அறிக்கை வெளியிட்டு ஆதரவளித்தவர்.
பில் மில்லர் வெளியிட்ட தகவல்களை கொண்டு கூலிப்படையினர் குறித்து விசாரிக்கும் ஐநாவின் சிறப்பு பிரிவுக்கு தமிழ் தகவல் நடுவம் (Tamil Information Centre) கடிதம் எழுத, ஐநாவின் 6 சிறப்பு அதிகாரிகள் பிரிட்டனின் வெளியுறவு அலுவலகத்திற்கு எழுதியுள்ளனர். இங்கிலாந்தின் மூத்த அரசு அதிகாரிகளின் நேரடி பங்கை குறிப்பிட்டு கேள்வியெழுப்பிய நிலையில், தற்போது பெருநகர காவல்துறை, தமிழர்களை கொன்ற இங்கிலாந்து கூலிப்படையினர் மீது விசாரணையை துவங்கியுள்ளது.
இந்த விசாரணைக்கு தேவையான ஆவணங்களை இங்கிலாந்து அரசு வழங்கி, விசாரணை முறையாக நடைபெற ஒத்துழைக்க வேண்டுமென நீதி வேண்டி போராடும் தமிழர்கள் உட்பட அனைவரும் விரும்புகின்றனர்.
மேலும் தகவல்கள்:
https://www.tamilguardian.com/content/british-police-open-war-crimes-investigation-%C2%A0uk-mercenaries%C2%A0-sri-lanka