கார் சர்வீஸ் சென்டர்களில் வேலை செய்யும் தொழிலாளர்கள்:
சென்னையில் மட்டும் 400க்கும் அதிகமான கார் சர்வீஸ் செண்டர்கள் இருக்கிறது. இந்த கார் சர்வீஸ் செண்டர்களை பொருத்தவரை இந்த ஊரடங்கு காலத்தில் ஒவ்வொரு டீலரும் சம்பளம் கொடுக்கும் முறையில் மாறுபட்டும் , தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வேலை ஆரம்பித்தவுடன் தேவையான உதவிகளை சில கம்பெனிகள் செய்தும், சிலர் இதை வாய்ப்பாக பயன்படுத்தி கொண்டு தொழிலாளிகளை சுரண்டியும் வருகின்றனர். சென்னையில் கார் சர்வீஸ் செய்யும் ஒரு கம்பெனி அதன் சென்னை கிளை மொத்தத்திலும் சேர்த்து 300க்கும் மேற்ப்பட்ட தொழிலாளர்களை வேலையைவிட்டு அனுப்பி இருக்கின்றனர்..
இன்னும் சில சர்வீஸ் செண்டர்கள் லாக்டவுன் காலத்தில் கொடுக்க வேண்டிய சம்பளத்தில் basic salary மட்டும் தான் கொடுத்திருக்கிறது,லாக்டவுன் தளர்வு அறிவித்த பின் அரசு அறிவித்த 33% வேலை ஆட்களுடன் மே மாதம் 12,13 தேதிகளில் இருந்து கம்பெனி தொடர ஆரம்பித்தது. மே மாதம் மட்டும் குறைந்தது 10 முதல் 15 இலட்சம் வரை வருமானம் வந்துள்ளது. ஆனால் மே மாத சம்பளமாக 70% மட்டுமே தொழிலாளர்களுக்கு அளித்திருக்கிறார்கள்.
அதுபோக இந்த பேரிடரை பயன்படுத்திக்கொண்டு சர்வீஸ் செண்டர்கள் தொழிலாளர்களின் உரிமையை பல்வேறு வழிகளில் பறிக்கிறது. அதாவது முன்பு ஞாயிறுகளில் வேலை செய்தால் கூடுதல் ஒருநாள் சம்பளமாக குறைந்தபட்சம் 400ரூ (சர்வீஸ் செண்டர்களை பொறுத்து மாறும்) கொடுக்கப்பட்டு வந்தநிலையில், இப்போது அதற்கு பதிலாக அந்த வாரத்திலேயே ஒரு நாள் விடுப்பு வழங்கப்படுகிறது. இதைவிடக்கொடுமை வேலைநேரங்களில் தொழிலாளர்களுக்கு இரண்டு வேலை வழங்கிவந்த தேநீரை சிக்கனம் என்ற பெயரில் நிறுத்தியிருக்கிறார்கள்.
மேலும் சென்னையில் இயங்கும் பெரிய பெரிய கார் சர்வீஸ் செண்டர்களில் தொழிலாளர்கள் மாதம் முழுவதும் விடுப்பு எடுக்காமல் வர வேண்டுமென்று உத்தரவு போட்டிருக்கிறார்கள். அதோடு ஊக்கத்தொகை (incentive) கிடையாது என்றும் அறிவித்திருக்கிறார்கள். இதையெல்லாம் ஏன் என்று கேட்டால் வேலையை விட்டு நீக்குவது, என்ற அநீதியும் நடக்கிறது.
அடுத்த மிகப்பெரிய சிக்கல் என்பது இதுபோன்ற கார் சர்வீஸ் செண்டர்களில் அதிகம் பிளாஸ்டிக், மெட்டல் போன்றவற்றோடுதான் பணிசெய்ய வேண்டிய கட்டாயம் இருக்கிறது. ஆனால் மருத்துவர்கள் பிளாஸ்டிக் போன்ற பொருட்களில் சில மணிநேரம் கொரானா வைரஸ் உயிர் வாழும் என்று கூறுகின்றனர். இந்தநிலையில் கார் பயன்படுத்துபவர்கள் எந்த நிலையிலும் இங்கு வந்து தனது வாகனத்தை விட்டுவிட்டுச் செல்லலாம். ஆக வாகனத்தை (சுத்தம் செய்வதற்கு தனியாக பணம் வாங்கியும்)முழுவதுமாக சுத்தம் செய்யபடாத நிலையிலும் முறையான பாதுகாப்பு இல்லாமல் தொழிலாளர்களை வேலை செய்ய விடும் கொடுமையும் நடக்கிறது.
வாகனத்தை பழுது பார்ப்பவர் (மெக்கானிக்) பெரும்பாலும் ஏழை எளிய மக்களாகவே இருக்கும் போது தற்போதுவிலைவாசி உயர்ந்த நிலையிலும், அரசு கொரானாவை கட்டுபடுத்த போதிய முயற்சி எடுக்காத நிலையிலும் தொழிலாளர்களுக்கு முறையான பாதுகாப்பும் அளிக்காமல் அவர்களின் உழைப்பை சுரண்டுவது எவ்விதத்தில் நியாயம்.
ஆகவே, அரசு இந்த பேரிடர் காலங்களில் இவர்களின் பாதுகாப்பையும், அவர்களின் வாழ்வாதாரத்திற்கான உத்தரவாதத்தையும், அவர்களின் தொழிலாளர் உரிமையையும் உறுதி செய்ய வேண்டும்.
மே17 இயக்கம்
9884072010