தமிழீழ இனப்படுகொலைக்கான நினைவேந்தலை அனுசரிக்கவிடாமல் தடுத்து மனிதநேய ஜனநாயகக் கட்சியின் தலைவர் சட்டமன்ற உறுப்பினர் தமிமுன் அன்சாரி அவர்களை கைது செய்த தமிழக அரசையும், காவல்துறையையும் வன்மையாக கண்டிக்கிறோம்.
தமிழீழ இனப்படுகொலைக்கான நினைவேந்தலை வீட்டிலிருந்து அனுசரிக்க அழைப்பு விடுத்த மே பதினேழு இயக்கத்தின் அழைப்பினை ஏற்று, சமூக இடைவெளியை முறையாக கடைபிடித்து பதாகை ஏந்தி முழக்கமிடும் நிகழ்வை மேற்கொள்ள தமிமுன் அன்சாரி அவர்கள் அழைப்பு விடுத்திருந்தார்.
திருவாரூர் மாவட்டம் கட்டிமேட்டில் நினைவேந்தலை மேற்கொள்ள விடாமல் தடுத்து, திருத்துறைப்பூண்டி காவல்துறையினர் அவரையும், அவரது கட்சி நிர்வாகிகளையும் கைது செய்திருக்கிறார்கள்.
தமிழ்நாடு சட்டமன்றத்தில் இனப்படுகொலைக்கு நீதி கோரும் தீர்மானம் 2013-ம் ஆண்டு நிறைவேற்றப்பட்டுள்ளது. ஆனால் சட்டமன்றத் தீர்மானத்தைக் கூட மதிக்காமல், ஒரு சட்டமன்ற உறுப்பினரை கைது செய்திருப்பது தமிழக அரசின் துரோகத்தினையே காட்டுகிறது.
கொல்லப்பட்ட மக்களுக்கு நினைவேந்துவதைக் கூட தடுக்கும் அரசு எப்படி மக்களுக்கான அரசாக இருக்க முடியும்?
நினைவேந்தல் நடத்தினால் குண்டர் சட்டம், வீட்டிலிருந்து நினைவேந்த முயன்றால் கைது என்று தொடர்ச்சியாக தமிழின துரோகப் போக்கினை தமிழக அரசு மேற்கொண்டு வருகிறது. இது எடப்பாடி அரசின் வன்மத்தினையே காட்டுகிறது.
சட்டமன்ற உறுப்பினர் தமிமுன் அன்சாரி அவர்கள் உடனடியாக விடுதலை செய்யப்பட்டு அவர் நினைவேந்தலை அனுசரிக்க அனுமதிக்கப்பட வேண்டும்.
தமிழக அரசின் தமிழர் விரோத அராஜகப் போக்கினை மே பதினேழு இயக்கம் வன்மையாக கண்டிக்கிறது.
– மே பதினேழு இயக்கம்
9884072010