இந்திய அரசு இந்த கொரோனா பேரிடரை பயன்படுத்தி மாநில உரிமைகளைப் பறிக்கும் போக்கைக் தொடர்ச்சியாக செய்து வருகிறது. இதனை கண்டித்து எதிர்வரும் 9-5-2020 -ஆம் நாள் பெரியாரிய உணர்வாளர்கள் கூட்டமைப்பு நடத்தும் இணையவழி போராட்டத்தில் மே17 இயக்கம் பங்கேற்கிறது.
– – – – – – – – – – – – – – – – – – – – – – – – – – – – – – –
2 – 5 – 2020 -அன்று இணையவழி நடைபெற்ற பெரியாரிய உணர்வாளர்கள் கூட்டமைப்பின் நடுவக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள்:
கொரானா நோய்த்தொற்று உலகையே ஆட்டிப்படைத்துக் கொண்டிருக்கிற நெருக்கடிச் சூழலில், எரிகிற வீட்டில் பறிப்பது ஊதியம் எனக் கொள்ளை அடிக்கிற கொடூரனைப் போல இந்திய அரசு மொழித் தேச மாநில உரிமைகளையெல்லாம் பறித்துக் கொண்டு போவதைப் பெரியாரிய உணர்வாளர்கள் கூட்டமைப்பு வன்மையாகக் கண்டிக்கிறது.
இவ்வகையில் எல்லாம் இந்திய அரசின் மாநில உரிமைகளைப் பறிக்கும் போக்கைக் கண்டித்து எதிர்வரும் 9-5-2020 -ஆம் நாள்
`பறிக்காதே! பறிக்காதே!
மாநில உரிமைகளைப் பறிக்காதே!!
கொரானா தாக்கிடும்
சந்தடி சாக்கில்
மாநில நலன்களை அழிக்காதே!
இந்திய அரசே! மோடி அரசே!
மாநில உரிமைகளை விழுங்காதே!’
– என்கிற முழக்கங்களை வலியுறுத்திப் பெரியாரிய உணர்வாளர்கள் கூட்டமைப்பு இணையவழியில் ஆர்ப்பரித்து முழக்கமிடத் திட்டமிட்டிருக்கிறது..
அம் முழக்கங்களைத் தமிழகத்தின் பட்டி தொட்டி எங்கும் முழங்க வைக்கவும், அதற்கு அனைத்து கட்சிகளிடமிருந்தும், அனைத்து இயக்கங்களிடமிருந்தும் ஒருங்கிணைந்த ஆதரவைக் கூட்டமைப்பு கோருகிறது…
(கொரானா தொற்று அறியப்பட்டு ஊரடங்கு அறிவிப்பு செய்யப்பட்ட மார்ச்சு 22 – ஆம் நாள் தொடங்கி இந்த ஒன்றரை மாதத்திற்குள் இந்திய அரசு பறித்திருக்கும் மாநில உரிமைகளின் பட்டியல்…
· நாடாளுமன்ற உறுப்பினர்களின் இரண்டு ஆண்டுகளுக்கான தொகுதி நல்கைத் தொகையை அவர்களின் ஒப்புதல் இல்லாமலேயே மோடி அரசு பறித்துக் கொண்டது..
· மேலும் நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஒரு மாதச் சம்பளத்தையும் அவர்களின் இசைவைப் பெறாமலேயே எடுத்துக்கொண்டது..
· மாநில முதலமைச்சர்கள் நிவாரண நிதிக்குக் கொடுக்கப்படும் நன்கொடைகளுக்கு இதுநாள்வரை அளித்துவந்த வரிச்சலுகையை நீக்கிவிட்டு, இந்தியத் தலைமை அமைச்சர் (பிரதமர்) நிவாரண நிதிக்குக் கொடுக்கும் தொகைக்கு மட்டுமே அந்த வரிச்சலுகை உண்டு என அறிவித்து அனைவரையும் அதற்குக் கொடுக்க வலியுறுத்துவது…
· 1949 தொடங்கி இப்போதுவரை தலைமை அமைச்சர் (பிரதமர்) நிவாரண நிதிக்கு அளிக்கப்பட்டு வரும் தொகையை இனி, ‘பிஎம் கேர் பண்ட்’ எனும் தனிக் கணக்குக்கே அனுப்ப வேண்டும் என்று அறிவித்துள்ளது.. அப்புதியக் கணக்கில் உள்ள விளக்கம் தகவல் உரிமை சட்டத்தின்வழி எவரும் அறிந்துகொள்ள முடியாதாம்..
· தனி அதிகாரம் படைத்திருக்கும் காவிரி நீர் உரிமை ஆணையத்தை ‘ ஜல் சக்தி’ என்கிற இந்திய அரசு நிறுவனத்திற்குள் அடக்கி, தமிழகத்தின் காவிரி உரிமைகளை முற்றாகப் பறித்திருக்கிறது .
· தமிழக அரசு சீனாவில் இருந்து நேரடியாகப் பெற இருந்த விரைவு ஆய்வுக் கருவிகளை (ராப்பிட்கிட்) இந்திய அரசு சூழ்ச்சிக்குப் பறித்துக் கொண்டது மட்டுமல்லாமல், அதைத் தமிழகத்திற்கு அதிகப்படியான விலைக்கு விற்றதோடு, இனி வெளிநாடுகளில் இருந்து எந்தப் பொருளை வாங்குவது என்றாலும் இந்திய அரசின் இசைவோடேயே வாங்க வேண்டும் என்பதாக இதுநாள் வரைக்கும் இருந்த மாநில உரிமையை பறித்துக் கொண்டது..
· ஒவ்வொரு மாநிலத்திற்குள்ளும் மாநில அரசுக்கு அப்பாற்பட்டுக் கொரானா நிலைமையைத் தாங்களே தங்கள் கட்டுப்பாட்டில் அறியவேண்டும் என்பதற்காக இந்திய அரசு, ஒரு மருத்துவக் குழுவை எல்லா மாநிலத்திற்குள்ளும் அனுப்பி கவனிக்கச் சொல்லி தன் அதிகாரத்தின் கீழ் ஆய்வு செய்து வருகிறது…
· இதுவரை உழவர்களுக்கும் எளிய ஏழை மக்களுக்கும் அளிக்கப்பட்டு வரும் மின்சார மானியங்களை நிறுத்திவிட்டு, அதை விலைக்கு மட்டுமே கொடுக்க வேண்டும் என்பதும், பின்னர் அதை மானியமாக வங்கியில் போடுவதுமான அதிகாரம் கொண்ட நடைமுறையை நேரடியாக இந்தியஅரசு அதன் கையில் எடுத்துக்கொள்ளத் திட்டமிட்டுள்ளது.. தமிழக அரசிடம் இருக்கும் மின்சாரத்துறையை இந்திய அரசு பறித்துக் கொள்ளும் நோக்கமே அந்த நடைமுறைக்குள் இருக்கிறது..
· கரோனா காலத்தை மாநிலங்கள் அளவில் நீட்டிப்பு செய்வது என்பதைக்கூட இந்திய அரசே தன் விருப்பத்திற்கு அறிவிக்கிறது, இது மாநில அரசின் அதிகாரத்தை முற்றிலுமாக சிதைப்பதாகவே உள்ளது..
· உழவர்களுக்குத் தனி அட்டை வழங்குவதன்வழி, உழவு நிலங்களுக்கும், விளைச்சல் பொருள்களுக்குமான முழு ஆய்வையும் இந்திய அரசு தன் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுசெல்வதுடன், உழவு நில வருவாயையும், விளைச்சல் வருவாயையும் ஜிஎஸ்டி வழிக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுசெல்லத் திட்டமிட்டிருக்கிறது.
· கடுமையான பொருளியல் நெருக்கடிகள் வாழ்வியல் நெருக்கடிகளுக்குள் இருந்து கொண்டிருக்கக்கூடிய மக்களிடமிருந்து ஜிஎஸ்டி வரியையோ, நெடுஞ்சாலை சுங்கச்சாவடி வரியையோ நீக்காமல் தொடர்ந்து மக்களைச் சுரண்டுவதன்மூலம் தன் அதிகாரத்தை நிறுவுகிறது
· பள்ளி, கல்லூரிகளைத் திறப்பது குறித்தான அதிகாரம் இதுநாள் வரை மாநில அரசுகளிடம் இருந்துவருவதை இந்தியப் பல்கலைக்கழக மானியக் குழு தன் அதிகாரத்தைக் கொண்டு தானாக அறிவிக்கிறது..
· ஊடகங்களின் உரிமைகளை கட்டுப்படுத்தி இந்திய அரசுக்கு எதிரான எல்லா வகை செய்திகளையும் வெளியிடாத படி தடுத்து வைத்திருக்கிறது..அதற்கு மாறாகச் செய்தி வெளியிடுவோரைத் தண்டிக்கிறது..
· இந்திய அரசைப் பற்றியோ, தலைமை அமைச்சர் மோடியைப் பற்றியோ எந்த வகைத் திறனாய்வையும் எவரும் ஊடகவழி செய்தாலும் அவர்களை உடனே சிறைப் படுத்துகிறது..
· மாநில அரசின் அதிகாரத்திற்கு உட்பட்ட மதுக்கடைகளை நிலையாக மூடுவதோ அல்லது திறப்பதோ, திறப்பது என்றால் எப்போது திறப்பது என்பது குறித்தோகூட மாநில அரசுகள் முடிவெடுக்காமல் அதிலும் இந்திய மோடி அரசு தலையிட்டு மாநில உரிமைகளைப் பறிக்கிறது..
2. மாநில உரிமைகளைப் பறித்திடும் வகையில் இந்திய மோடி அரசு செய்துவரும், மேற்படி சூழ்ச்சிகளுக்குத் தமிழகத்தில் எவ்வகையிலும் இடம் கொடுக்காமல் தடை செய்திட வேண்டும் எனத் தமிழக அரசை பெரியாரிய உணர்வாளர்கள் கூட்டமைப்பு கட்டாயப்படுத்துகிறது.. காவிரி உரிமையில் சிறிதும் விட்டுக்கொடுக்காமல் ஜல்சக்தி நிறுவனத்திலிருந்து காவிரி ஆணையத்தை முழுமையாக விடுவித்திட தமிழக அரசு வலியுறுத்திப் போராடியாகவேண்டும் என்று கூட்டமைப்பு வலியுறுத்துகிறது.
3. மும்பைப் பெரு நகரத்தை உருவாக்குவதில் முழுப்பொறுப்பு கொண்ட தாராவி பகுதி வாழ் தமிழர்களுக்கு எவ்வகை அடிப்படைப் பாதுகாப்பையும் மராட்டிய அரசு முறைப்படி செய்து தருவதாக அறியமுடியவில்லை..
எனவே உடனடியாக மராட்டிய அரசு தாராவி தமிழர்களுக்கு அனைத்து உதவிகளையும் செய்யவேண்டுமெனப் பெரியாரிய உணர்வாளர்கள் கூட்டமைப்பு கேட்டுக்கொள்கிறது.. தமிழக அரசு உடனடியாக மராட்டிய அரசோடு தொடர்பு கொண்டு ஆவன செய்ய வேண்டும் என வலியுறுத்துகிறது..
4. இந்த நெருக்கடியான சூழலில் மதவெறியையும், சாதி வெறியையும் தூண்டும் படியான நிகழ்வுகள் சில ஆங்காங்கே நடைபெற்று வருவதைப் பெரியாரிய உணர்வாளர்கள் கூட்டமைப்பு கடுமையாகக் கண்டிக்கிறது..
தமிழக அரசு அவற்றிலெல்லாம் தலையிட்டு எவ்வகை வெறித்தனங்களுக்கும் இடம் கொடுக்காத படி நடவடிக்கை எடுக்க வேண்டுமெனப் பெரியாரிய உணர்வாளர்கள் கூட்டமைப்பு வலியுறுத்துகிறது.