இத்தேசம் பசித்தவனை உருவாக்கிக் கொண்டிருக்கிறது. பசி என்றால் என்னவென்று அறியாதவர்களை அரியணையில் வைத்திருக்கிறது.
பசி என்பது ‘ஒருவேளை’ அல்லது ‘ஒரு நாள் உணவை’ தவிர்ப்பதால் வரும் உணர்வு அல்ல.
‘பசி’ என்பதன் வலிமை யாருக்கு தெரியுமெனில், ‘இந்த வேளை’ எனக்கு உணவு இல்லை. அடுத்தவேளை உணவும் இல்லை, இன்று முழுதும் இதுதான் நிலை, நாளையும் இது மாறாது? நாளை இரவும் இதே பசியுடனே நான் உறங்கவேண்டும், அதற்கு அடுத்த நாளாவது உணவு கிடைக்குமா எனத் தெரியாது
, கொடுக்க வருவார்களா என்பதற்கும் வழி இல்லை, ‘நான் பசியில் இருக்கிறேன்’ என்பது என்னைச் சுற்றி வாழ்பவர்களுக்கு தெரியுமா எனத் தெரியாது, அவர்கள் அதை புரிந்து கொண்டார்களா என்பதும் தெரியாது, அவர்களது பார்வையில் நான் படுகிறேனா என்பது கூட எனக்கு தெரியாது. இந்தப் பசி எனக்கு நிரந்தரம் எனும் உணர்வு உறுதி செய்யப்படும் போது எழும் வலியே ‘பசி’. அந்த வலியே ‘பசி’.
‘பசியின் வலி அறியாதவர்கள்’ என்னைச் சுற்றி வாழும் பொழுது என்னுடைய பசியின் வலியை அவர்களால் எப்படி புரிந்து கொள்ள இயலும்?. ஆனால் என்னைச் சுற்றி சுற்றி உணவு இருக்கிறது. சமயத்தில் உணவின் வாசம் பசியை அதிகரிக்கிறது. அந்த உணவு எனக்கானதல்ல. அதை எனக்கு யாரும் கொடுக்கப் போவதில்லை. அதைச் சாப்பிடுபவர்களுக்கு நான் பசித்து கிடக்கிறேன் என்பது தெரியாது. எனக்கான உணவு எங்கேயிருக்கிறது என்பது தெரியாத பொழுது, எனக்கு எதிரில் உணவு அளவில்லாமல் கொட்டி வைத்திருப்பதை உணரும் பொழுது அந்த உணவை நான் வேட்டையாடாவிட்டால், பசி என்னை வேட்டையாடும்.
இந்நிலையில் உள்ள ஒரு மனிதனை உலகின் எந்த வலிமையான ராணுவமும் தடுத்து நிறுத்த முடியாது.
அவனது வேட்டை என்பது உணவிற்காக இருக்காது. உரிமை மட்டுமே அவனுடைய உணவை உறுதி செய்யுமென்பதை புரிந்து கொண்டவனிடமிருந்து தனது ‘க்ரீடத்தை’ எந்த அரசனும் காத்துக்கொள்ள முடியாது என்பதை வரலாறு சொல்லுகிறது.
இத்தேசம் பசித்தவனை உருவாக்கிக் கொண்டிருக்கிறது. பசி என்றால் என்னவென்று அறியாதவர்களை அரியணையில் வைத்திருக்கிறது.
பசித்தவனோடு நிற்போம்.
தோழர். திருமுருகன் காந்தி
ஒருங்கிணைப்பாளர்
மே17 இயக்கம்