தமிழீழ மக்களை இந்திய அமைதிப்படை கொல்வதை தடுக்க வலியுறுத்தி உண்ணாநோன்பு இருந்து உயிரை கொடையாகக் கொடுத்த அன்னை பூபதியின் 32ம் ஆண்டு வீரவணக்கம்.

தமிழீழ மக்களை இந்திய அமைதிப்படை கொல்வதை தடுக்க வலியுறுத்தி உண்ணாநோன்பு இருந்து உயிரை கொடையாகக் கொடுத்த அன்னை பூபதியின் 32ம் ஆண்டு வீரவணக்கம்.

1987 ஆம் ஆண்டு ஈழத்தமிழர்களுக்கு உரிய தீர்வை பெற்று தருகிறோம் என்கிற பெயரில் தமிழர்களிடம் கலந்து ஆலோசிக்காமல் இந்தியாவும் இலங்கையும் இணைந்து ‘இந்திய இலங்கை ஒப்பந்தத்தை’ போட்டார்கள். இந்த ஒப்பந்தத்தை மீறி தமிழர்களின் இராணுவமான விடுதலைப்புலிகளிடம் இருந்து ஆயுதங்களை பெற்று துரோக குழுக்களுக்கு அந்த ஆயுதங்களை இந்திய அரசு வழங்கியது. இந்தியாவின் இந்த துரோகத்தனத்தை உலக நாடுகளுக்கு அம்பலப்படுத்தத்தான் ஒரு சொட்டு நீர் அருந்தாமல் திலீபன் உண்ணா நோன்பிருந்து தனது உயிரைக் கொடுத்தார்.

இதன்பிறகும் திருந்தாத இந்திய அரசு தமிழீழ மக்களை கொலை செய்வதும், தமிழீழப் பெண்களை பாலியல் வன்புணர்வு செய்வதையும் தொடர்ச்சியாக செய்தது. தன் கண்முன்னே தனது தமிழீழ மக்கள் கொல்லப்படுவதை பார்த்த அன்னை பூபதி அவர்கள் 19.03.1988இல் தான் பிறந்த மட்டக்களப்பில் உண்ணா நோன்பை தொடங்கினார். அவர் வைத்த கோரிக்கைகள் இரண்டே இரண்டு தான்.

1. இந்திய அரசு தமிழர்களுக்கு எதிராக நடத்தும் இனப்படுகொலை போரை கைவிட வேண்டும்.

2. தமிழர்களின் பிரதிநிதியான விடுதலைப் புலிகளோடு பேச்சுவார்த்தை நடத்தவேண்டும்.

இந்த கோரிக்கையை இந்திய அரசு புறந்தள்ளியதோடு அன்னை பூபதியின் பட்டினிப் போராட்டத்தை கொச்சைப்படுத்தி அதை தடுத்து நிறுத்த பல முயற்சிகளை செய்தது. ஆனால் இந்தியாவின் துரோகத்தை உணர்ந்த தமிழீழ மக்கள் ஆயிரமாயிரமாய் அன்னை பூபதியின் உண்ணாவிரத பந்தலுக்கு அணிவகுத்தனர். 30 நாட்களுக்கு மேல் உண்ணாவிரதமிருந்த அன்னை பூபதி அவர்கள் இறுதியில் 19.04.1988 அன்று தன் உயிரை கொடையாக கொடுத்தார்.

இதன் பின்னர்தான் இந்திய அமைதிப்படையின் உண்மையான மூகம் சர்வதேச சமூகத்திற்கு தெரிந்தது.

தமிழீழ விடுதலைப் போராட்ட வரலாற்றில் ஆசியாவின் மிகப்பெரிய ராணுவத்தை எதிர்த்து தமிழர்கள் போரிட்டு வென்றார்கள் என்றால் அதற்கு மிக முக்கிய காரணம் அன்னை பூபதியின் இந்த ஈகம் தான்.

உலக வரலாற்றிலேயே உண்ணாநோன்பிருந்து இறந்து போன முதல் பெண் அன்னை பூபதி ஆவார்.இன்று அவருடைய 32ஆம் ஆண்டு நினைவு நாள்.

அவர் தனது இறப்புக்கு முன் பேசிய இறுதி உரையில் ‘தமிழீழ மக்களின் அடுத்த தலைமுறையாவது நிம்மதியாக வாழ வேண்டும் என்றார். தமிழீழ மக்கள் நிம்மதியாக வாழ வேண்டுமென்றால் ‘தமிழீழம்’ என்பதே ஒரே வழி. அதை நிறைவேற்றுவதே அன்னை பூபதி அவர்களுக்கு நாம் செலுத்தும் வீரவணக்கம் ஆகும்.

‘தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்’

மே17 இயக்கம்
9884072010

Leave a Reply