மனித உரிமை செயல்பாட்டாளர்கள் ஆனந்த் டெல்டும்டே, கெளதம் நவ்லாகா ஆகியோர் மீது ஊபா(UAPA) கருப்பு சட்டம் ஏவப்பட்டிருப்பது மோசமான அடக்குமுறை!
ஊபா கருப்பு சட்டத்தினை சட்ட நூலிலிருந்து நீக்கிட குரல்கொடுப்போம்!
– மே பதினேழு இயக்கம்
2018ம் ஆண்டு மகாராஷ்டிர மாநிலத்தில் ஒடுக்கப்பட்ட தலித் மக்கள் ஒன்றிணைந்து நடத்திய மாபெரும் பீமா கொரேகான் ஊர்வலத்தில் வன்முறை நடைபெற்றதாக கூறியும், அதனைத் தொடர்ந்து இந்தியாவின் முக்கியமான மனித உரிமை செயல்பாட்டாளர்கள் பலரை மாவோயிஸ்ட்களுடன் தொடர்புடையவர்கள் என்று பொய் வழக்கு போட்டும், Urban Naxal-கள் என்ற புதிய மோசமான வார்த்தை பிரயோகத்தினை புழக்கத்தில் கொண்டுவந்தும் அவர்கள் மீது ஊபா சட்டத்தினை ஏவினார்கள். அரசியல் செயல்பாட்டாளர்கள், எழுத்தாளர்கள் போன்றோரை ஒடுக்குவதற்காகவே Urban Naxal என்ற வார்த்தையினை அறிமுகப்படுத்தியது பாஜக அரசு.
அவர்களில் வழக்கறிஞர்கள் சுதா பரத்வாஜ், சுரேந்திரா காட்லிங் மற்றும் வெர்னான் கொன்சால்வேஸ், ஆங்கில பேராசிரியர் ஷோமா சென், ஊடகவியலாளர்கள் அருண் பெரேரா மற்றும் சுதிர் தவாலே, கவிஞர் வரவரராவ், சமூக செயல்பாட்டாளரும் ஆய்வாளருமான மகேஷ் ராவத், அரசியல் சிறைவாசிகளின் உரிமைகளுக்கான செயல்பாட்டாளர் ரோனா வில்சன் ஆகிய 9 செயல்பாட்டாளர்கள் கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கும் மேலாக ஊபா சட்டத்தின் மூலமாக சிறையில் அடைக்கப்பட்டிருக்கிறார்கள்
நம்பகத்தன்மையில்லாத கடிதங்களை ஆதாரங்கள் என்று காட்டுவது, வீடுகளுக்குள் டூப்ளிகேட் சாவியை போட்டு திறந்து சோதனை நடத்துவது, கல்வி நிலையத்திற்குள் அத்துமீறி சோதனை நடத்துவது என்று பயங்கரவாதிகளைப் போலவே ஆனந்த் டெல்டும்டேவும், கெளதம் நவ்லாகாவும் நடத்தப்பட்டனர்.
ஆனால் பீமா கொரேகான் நிகழ்வில் தாக்குதல் நடத்திய உண்மையான குற்றவாளிகளான மதவாத வலதுசாரி கும்பல் மீது இன்று வரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை.
ஆனந்த டெல்டும்டே தலித் மக்களின் உரிமைக்காக தொடர்ந்து எழுதி வந்த இந்தியாவின் மிக முக்கியமான எழுத்தாளரும், ஆய்வாளரும் ஆவார். IIT காரக்பூரில் பேராசிரியாக பணிபுரிந்தவர். கோவா இன்ஸ்டிடியூட் ஆஃப் மேனேஜ்மண்ட்-ல் மேலாண்மை பேராசிரியாக பணிபுரிந்து வருகிறார். புரட்சியாளர் அண்ணல் அம்பேத்கரின் பேத்தியை திருமணம் செய்தவரான இவர் அண்ணல் அம்பேத்கரின் 129வது பிறந்த நாளான நேற்று பொய்வழக்கில் கைது செய்யப்பட்டிருக்கிறார். அம்பேத்கரின் உண்மையான கொள்கைகளை நிலைநிறுத்த பேசுபவர்களுக்கும், எழுதுபவர்களுக்கும் இதுதான் நிலை என்று உணர்த்துவதற்காக செய்யப்பட்டதாகவே தெரிகிறது. 30 ஆய்வு நூல்களும், பல ஆராய்ச்சி கட்டுரைகளும் தொடர்ச்சியாக ஆனந்த் டெல்டும்டே வெளியிட்டு வெளிவந்திருக்கிறார்.
கெளதம் நவ்லாகா அவர்கள் பத்திரிக்கையாளராகவும், மனித உரிமைகள் செயல்பாட்டாளராகவும் இருந்து வருகிறார். இந்தியாவின் முக்கியமான அரசியல் பொருளாதாரா ஆய்வு இதழான Economic & Political Weekly இதழின் ஆசிரியர் குழுவின் ஆலோசகராகவும் இருந்து வருகிறார். People’s Union for Democratic Rights (PUDR) அமைப்பின் செயலராகவும் இருந்தவர்.
இப்படிப்பட்ட மிக முக்கியமான அரசியல் செயல்பாட்டாளர்களை ஊபா சட்டத்தில் அடைத்திருப்பதன் மூலமாக இந்தியா முழுதும் மனித உரிமைகளுக்காக, ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைகளுக்காக, பழங்குடி மக்களின் உரிமைக்காக, தேசிய இனங்களின் உரிமைக்காக செயல்படுகிற செயல்பாட்டாளர்களுக்கு எச்சரிக்கையினை பாசிச மோடி அரசு விடுத்திருக்கிறது. அரசின் கொள்கைகளை எதிர்ப்பவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது பயங்கரவாதப் பட்டம் கட்டி சிறையில் அடைக்கப்படுவர் என்ற அச்சுறுத்தல் வெளிப்படையாக விடப்பட்டிருக்கிறது.
குற்றச்சாட்டு விசாரிக்கப்படாமலேயே, நிரூபிக்கப்படாமலேயே நீண்ட காலத்திற்கு ஒருவரை சிறையில் அடைப்பதை ஊபா சட்டம் அனுமதிக்கிறது. இதனால்தான் இக்கருப்பு சட்டத்தினை நீக்க வேண்டும் என்று நாடு முழுதிலுமிருந்து மனித உரிமை ஆர்வலர்கள் குரல் எழுப்பி வருகின்றனர்.
தூத்துக்குடி படுகொலையை ஐ.நா மனித உரிமைகள் ஆணையத்தில் தூத்துக்குடி படுகொலையை பேசியதற்காக திருமுருகன் காந்தியை கைது செய்த போது, அவர் மீதும் ஊபா வழக்கு ஏவப்பட்டது. பின்னர் நீதிமன்றத்தினால் அந்த வழக்கு நிராகரிக்கப்பட்டு திருமுருகன் காந்தி விடுதலையானார். இப்படி அரசியல் செயல்பாட்டாளர்களை தொடர்ந்து குறிவைத்து இந்த கருப்பு சட்டம் ஏவப்பட்டு வருகிறது. இந்த ஊபா எனும் கருப்பு சட்டம் சட்ட புத்தகத்திலிருந்து நீக்கப்படாத வரை மக்கள் போராளிகள் அடக்குமுறைகளுக்கு உள்ளாவது தொடர்ந்து கொண்டே இருக்கும். இந்த சட்டத்தினை நீக்க குரலெழுப்புவது மிக முக்கியமானதாகும்.
மேலும் இந்தியா முழுதும் கொரோனா வைரஸ் தாக்குதல் தீவிரமடைந்து, ஒரு பேரிடரை எதிர் நோக்கியிருக்கிற இந்த சூழலிலும், மக்களை காப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வதை விடவும், அரசியல் செயல்பாட்டாளர்களை பழி வாங்குவதிலேயே மோடி அரசு குறியாக இருக்கிறது. கொரோனா வைரசை விட ஆபத்தனாவர்களாக ஜனநாயகவாதிகளையே மோடி அரசு பார்க்கிறது. எப்படியாவது ஜனநாயகத்தினை அழித்து பாசிசத்தினை நிலைநாட்டிவிட வேண்டும் என்று கங்கணம் கட்டிக் கொண்டு அலைகிறது. இந்தியாவிலேயே அதிகம் கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு உள்ளாகியிருக்கும் மகாராஷ்டிரா மாநிலத்திற்கு இவர்கள் சிறைக்கு அனுப்பப்படுகிறார்கள். சிறைகளில் கொரோனா பரவாமல் தடுப்பதற்காக பல்வேறு சிறைவாசிகளை விடுவிக்க கோரிக்கைகள் எழுந்து கொண்டிருக்கும் இந்த நேரத்தில் இந்த மனித உரிமையாளர்கள் சிறைக்கு அனுப்பப்பட்டுள்ளனர்.
சிறைக்கு செல்வதற்கு முன்பு ஆனந்த் டெல்டும்டே எழுதியுள்ள கடிதத்தில் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
”இதற்குப் பிறகு நான் உங்களிடம் எப்போது பேச முடியும் என்று எனக்கு தெரியவில்லை. ஆனால் உங்களுடைய முறை வருவதற்கு முன் நீங்கள் பேசிவிடுவீர்கள் என நம்புகிறேன்”
ஆம். இதுதான் உண்மையானதாக இருக்கிறது. ஆனந்த் டெல்டும்டே மீதும், கெளதம் நவ்லாகா மீதும், இதர செயல்பாட்டாளர்கள் மீதும் பாய்ந்த ஊபா கருப்பு சட்டம் உங்களது ஊரில் போராடும் மக்கள் மீதும் பாய்வதற்கு முன்னர், இந்த அடக்குமுறைகளுக்கு எதிராக நாம் பேசத் துவங்கிவிட வேண்டும்.
– ஆனந்த் டெல்டும்டே மற்றும் கெளதம் நவ்லாகா இருவரும் சிறையிலிருந்து உடனே விடுவிக்கப்பட வேண்டும்.
– இதற்கு முன்பு கைது கைது செய்யப்பட்ட 9 செயல்பாட்டாளர்களும் விடுவிக்கப்பட வேண்டும்.
– ஊபா சட்டம் நீக்கப்பட வேண்டும் என்று மே பதினேழு இயக்கம் வலியுறுத்துகிறது.
அனைவரும் இணைந்து இக்கோரிக்கைகளை வலுப்படுத்துங்கள்!
– மே பதினேழு இயக்கம்
9884072010