ஆனந்தபுரம் போரில் உயிர்நீத்த ஈகியருக்கு 11ஆம் ஆண்டு வீரவணக்கம்

ஆனந்தபுரம் போரில் உயிர்நீத்த ஈகியருக்கு 11ஆம் ஆண்டு வீரவணக்கம் – மே17 இயக்கம்

உலகெங்கும் அடக்குமுறைக்கு உள்ளாக்கப்படும் இனங்கள் அதிலிருந்து மீண்டு சுதந்திர காற்றை சுவாசிக்க விடுதலை போராட்டங்களை முன்னெடுக்கிறது. அப்படித்தான் தமிழீழ மக்களும் சிங்கள இனவெறி அரசால் தங்களது அடிப்படை உரிமைகள் மறுக்கப்படுவதை எதிர்த்து விடுதலை போராட்டத்தை முன்னெடுத்தனர்.
தமிழர்களின் 60 ஆண்டுகால இந்த போராட்டம் 2009 இல் மிக மோசமான பின்னடைவை சந்தித்தது. இந்தியா அமெரிக்கா உள்ளிட்ட பல்வேறு நாடுகள் இனவெறி இலங்கைக்கு அனைத்து உதவிகளையும் செய்ததால் தமிழர்கள் கொத்து கொத்தாக இனப்படுகொலை செய்யப்பட்டனர்.

இந்த போரில் இதே ஏப்ரல் 04ஆம் தேதி 2009 அன்று (04.04.2009) புதுக்குடியிருப்பு ஆனந்தபுரம் பகுதியில் இலங்கை அரசு அறிவித்த பாதுகாப்பு வளையத்தில் தமிழர்கள் கூட்டமாக இருப்பதை இந்தியா கொடுத்த ரேடார் வழியாக அறிந்த இனப்படுகொலை இலங்கை அரசு. அங்கு உலகம் தடை செய்த இராசாயண குண்டுகளை முதன்முதலில் தமிழர்கள் மீது போட்டது. இந்த இராசாயண குண்டின் வீரியம் தாக்கமுடியாமல் தமிழர்கள் சில நிமிடங்களில் பல்லாயிரம் பேர் கருகி செத்தார்கள்.

இந்நிலைமை தடுக்கவும், இலங்கை இனவெறி இராணுவம் மேலும் முன்னேறி வந்துவிடாமல் இருக்கவும் சாவு வரும் என்பதை அறிந்தே தமிழர்களின் இராணுவமான விடுதலை புலிகள் இனப்படுகொலை இலங்கை அரசை எதிர்த்து பாதுகாப்பு வளையத்திற்கு வெளியில் அரணமைத்து போரிட்டார்கள்.

தமிழர்களை காக்கும் இந்த போரில் தான் விடுதலை புலிகளின் மிகமுக்கியமான தளபதிகளான ஒயாத அலைகள் 2, ஒயாத அலைகள் 3 போன்ற நடவடிக்கையின் போது இலங்கை அரசை பின்னங்கால் பிடறியில் அடிபட ஓடவைத்த பிரிகேடியர் தீபன், பிரிகேடியர் ஆதவன் என்ற கடாபி, பிரிகேடியர் மணிவண்ணன் போன்றோரும். தமிழீழப்பெண்களின் வீரத்தை உலகத்திற்குக் காட்டிய விடுதலை புலிகளின் மகளிர் படையணிகளின் மூத்த தளபதிகளான 2ஆம் லெப்டினல் மாலதி படையணியின் சிறப்புத் தளபதியான பிரிகேடியர் விதுசா, மேஜர் துர்கா போன்றோரும் வீரமரணம் அடைந்தனர்.

இந்த போரே இறுதி கட்ட போரின் திசைவழியை மாற்றியது. விடுதலை புலிகளின் மிகமுக்கிய தளபதிகள் பலரும், தமிழீழ மக்களும் உலகம் தடை செய்த இராசாயண குண்டுகளால் கொடூரமாக இலங்கை அரசால் இனப்படுகொலை செய்யப்பட்ட ஆனந்தபுரம் தாக்குதல் நிகழ்ந்த நாள் இன்று. இந்த போரில் தமிழீழநாட்டிற்காக தன்னுயிரை ஈந்த ஈகியருக்காக 11 ஆம் ஆண்டு வீரவணக்கத்தை செலுத்தும் இதேவேளையில் அவர்களின் நோக்கமான தமிழீழ விடுதலையை வென்றெடுப்போம் என்ற உறுதிமொழியை ஏற்போம். அதுவே அவர்களுக்கு நாம் செய்யும் உண்மையான வீரவணக்கமாகும்.

’தமிழரின் தாகம், தமிழீழத் தாயகம்’

மே 17 இயக்கம்
9884072010

Leave a Reply