தஞ்சை பெரிய கோயில் குடமுழுக்கை தமிழிலே நடத்திடுக
தமிழர்களுக்குரிய கோயிலில் தமிழ் மொழியிலே வழிபாடு நடத்திட, குடமுழக்கு செய்திட உரிமையில்லாத நிலையில் தான் தமிழ்த்தேசிய இனம் இருக்கிறது. ஆரிய- வைதீக பண்பாட்டின் மேலாதிக்கத்தின் காரணமாக தமிழர்களின் வழிபாட்டு உரிமையும், மொழி உரிமையும் பறிக்கப்பட்டிருக்கிறது.
இந்நிலையில் ஆயிரமாண்டு பழைமையுடைய, தமிழர் கட்டிட கலைக்கு மகுடமாக விளங்கும் தஞ்சை பெரிய கோயிலின் குடமுழக்கு விழாவை ‘ஆகமத்தை (?)’ காரணம் காட்டி தமிழ் மொழியில் நடத்தாமல் அல்லது வடமொழியான சமஸ்கிருதத்தோடு சேர்ந்து நடத்துவது அநீதியிலும் அநீதியாகும்.
(தமிழ்) ஆகமம் குறித்து எதையுமே அறியாமல் சமஸ்கிருத வழி குடமுழக்கு எனும் தமிழர் விரோத செயலுக்கு தமிழக அரசு துணைபோவது வன்மையாக கண்டிக்கதக்கது. அனைத்து சாதியினரையும் அர்ச்சகராக்குவது குறித்து முடிவெடுப்பதற்காக நியமிக்கப்பட்ட நீதியரசர் ஏ.கே. ராஜன் தலைமையிலான குழு,’ஆகமம் மெட்ராஸ் மாகாணமாகயிருந்த தென்னிந்திய நிலப்பகுதி கோயில்களுக்கே உரியதென்றும், மிகக் குறிப்பாக தமிழ்நாடு கோயில்களுக்கே உரியதென்றும் அவை வடநாட்டில் கடைப்பிடிக்கப்படுவதில்லை என குறிப்பிட்டு, ஆகம முறைப்படி தமிழில் பூசை செய்வதே சரியானதென்று கூறியதோடில்லாமல் வடமொழி சமஸ்கிருதத்தில் பூசைகள் செய்வது ஆகமத்திற்கு எதிரானது’ என்று சமர்பித்த அறிக்கை தமிழ்நாடு அரசிதழில் வெளியிடப்பட்டிருக்கிறது.
ஆகமம் என்பது கோயில் நிர்மானித்தல், சிலை வார்த்து நிறுவுதல் தொடர்பான தொழில்நுட்ப அறிவிலிருந்து உருவானதாகும். சமூக ரீதியாக பார்த்தாலும் சமஸ்கிருத தொடர்புடைய, உடலுழைப்பை விலக்கிய பார்ப்பனர்கள் ஆகம உருவாக்கத்தில் பங்கேற்றிருப்பது சாத்தியமற்றதாகும்.
தமிழ்நாடு அரசிதழில் வெளியிடப்பட்ட அரசால் நியமிக்கப்பட்ட அறிஞர் குழு சமர்பித்த அறிக்கையின்படியும், சமூக- வரலாற்றுச் சான்றுகளின்படியும் ஆகமத்திற்கு தொடர்பில்லாத வடமொழி சமஸ்கிருதத்தை ஆகமத்தின் பேரில் தமிழர்கள் மேல் திணிப்பதற்கு இனியும் அணுமதிக்க முடியாது.
ஒரு நாளில் செய்ய வேண்டிய பூசைகளாக ஆகமம் அணுமதிக்கும் நித்திய பூசைகளை கடந்து தட்சனை தருகின்ற ஒவ்வொருவருக்காகவும் நடத்தப்படும் அர்ச்சனைகள் ஆகம மீறலாகும். அதே போல் ஆகமம் குறிப்பிடும் கோயில் நடை சாத்தும், திறக்கும் நேரம் சரிவர கடைபிடிக்காமல் பக்தர்கள் தரும் சன்மானத்திற்காக நடை சாத்தும் நேரத்தைக் கடந்தும், நடை திறக்கும் நேரத்திற்கு முன்னரும் கோயில் நடை திறக்கப்படும் ஆகம விதிமீறல்கள் நடந்து கொண்டு தான் இருக்கிறது.
உடலுழைப்பு இல்லாமல் பொருளீட்டுவதற்காக வைதீக பார்ப்பன சமூகம் பல்வேறு ஆகம விதிமீறில்களை நிகழ்த்திக் கொண்டே ‘ஆகம விரோதத்தை ஆகமமென’ திரித்துக் கூறி தமிழையும், தமிழர்களையும் இழிவுப்படுத்தும் தீண்டாமை பேதத்திற்கு தமிழ்நாடு அரசே துணைபோவது மன்னிக்க முடியாத குற்றம் மட்டுமின்றி, குடிமக்கள் விரோதமாகும்.
எனவே தஞ்சை பெரியகோயில் குடமுழக்கு தமிழிலேதான் நடத்திட வேண்டும்!
மே17இயக்கம்
9884072010