பாஜகவின் அழுத்தத்தினால் நேற்று (01-01-2020) நெல்லை கண்ணன் அவர்கள் கைது செய்யப்பட்டதை அடுத்து, தமிழக வாழ்வுரிமை கூட்டமைப்பு சார்பாக ஆலோசனை கூட்டமும் தொடர்ந்து பத்திரிக்கையாளர் சந்திப்பும் இன்று (02-01-2020) சென்னை நிருபர்கள் சங்கத்தில் நடைபெற்றது. எந்த உள்நோக்கமும் இல்லாமல் வட்டாரப் பேச்சு வழக்கில் நெல்லை கண்ணன் அவர்கள் பேசிய ஒரு விடயத்திற்கு, பாஜக தலைவர்கள் உள்நோக்கம் கற்பித்ததோடு அதனை பெரிதுபடுத்தி தமிழக அரசு அவரை கைது செய்யும் அளவிற்கு கொண்டு சென்றது மிகவும் கண்டனத்திற்கு உரியது என்றும், தமிழக அரசு அவரை உடனடியாக விடுவிக்க வேண்டுமென வலியுறுத்தப்பட்டது.
அதேவேளை, தொடர்ச்சியாக மதம், சாதி, மொழி, இனம் அடிப்படையில் மக்களிடையே பாகுபாட்டை உண்டாக்கி கலவரத்தை தூண்டுகிற விதத்தில் பேசி வரும் எச்.ராஜா போன்ற ஆர்.எஸ்.எஸ்.-பாஜக தலைவர்களை பல்வேறு புகார்கள், வழக்குகளுக்கு பின்னரும் கைது செய்யாமல் இருப்பது உள்நோக்கம் கொண்டது. எனவே, நெல்லை கண்ணன் அவர்களை விடுவிப்பதோடு மட்டுமல்லாமல், கலவரத்தை தூண்டும் வகையில் வெறுப்பு பேச்சை பேசிவரும் ஆர்.எஸ்.எஸ்.-பாஜக தலைவர்களை கைது செய்யப்பட வேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்டது.
மேலும், சென்னை மெரினா கடற்கரையில் போராட்டம் செய்ய தடை என்று அரசு அறிவித்திருக்கும் நிலையில், நெல்லை கண்ணன் அவர்களை கைது செய்ய கோரி மெரினா கடற்கரையில் பாஜகவினர் போராட்டம் நடத்தியதில் மென்மையான போக்கை காவல்துறை கடைபிடித்துள்ளது. அப்படியென்றால் மெரினா கடற்கரை போராட்ட களத்திற்காக மீண்டும் திறந்துவிடப்பட்டுள்ளதா என்ற கேள்வியும் முன்வைக்கப்பட்டது. நெல்லை கண்ணன் அவர்களது விடுதலை மற்றும் பாஜக தலைவர்கள் மீதான கைது நடவடிக்கை மேற்கொள்ளாவிட்டால், தமிழக வாழ்வுரிமை கூட்டமைப்பு சார்பாக மெரினா கடற்கரையில் போராட்டம் நடத்தப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது.
கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர், தமிழக வாழ்வுரிமை கட்சியின் தலைவர் வேல்முருகன் அவர்கள் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் முனைவர் தொல்.திருமாவளவன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன், மதிமுக பொதுச்செயலாளர் மல்லை சத்யா, SDPI கட்சியின் தேசிய தலைவர் தெஹ்லான் பாகவி மற்றும் மாநில தலைவர் நெல்லை முபாரக், மனிதநேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லா, திராவிடர் விடுதலை கழக தலைவர் கொளத்தூர் மணி, தந்தை பெரியார் திராவிடர் கழகத்தின் சென்னை மாவட்ட பொறுப்பாளர் குமரன், திராவிட இயக்கத் தமிழர் பேரவை தலைவர் சுப வீரபாண்டியன், தமிழ்த்தேசிய விடுதலை இயக்கத்தின் தோழர் தியாகு, இயக்குநர் கௌதமன் உள்ளிட்ட பல்வேறு தலைவர்கள் பங்கேற்றனர். மே பதினேழு இயக்கத்தின் சார்பாக ஒருங்கிணைப்பாளர்கள் திருமுருகன் காந்தி மற்றும் பிரவீன் குமார் ஆகியோர் பங்கேற்றனர்.