ஈழத்தமிழர்கள் மற்றும் இசுலாமியர்களுக்கு எதிரான குடியுரிமை திருத்த மசோதாவை உடனடியாக மோடி அரசே கைவிடு!
சட்டவிரோதமாக இந்தியாவில் குடியேறியவர்களின் குடியுரிமையை நிர்ணயிக்கும் குடியுரிமை திருத்த மசோதாவை மக்களவையில் நேற்று (09-12-2019) நிறைவேற்றியுள்ளது பாஜக அரசு. இந்த பாராளுமன்றக் கூட்டத்திலிலேயே இதனை நிறைவேற்றி சட்டமாக்க தீவிரமாக செயல்பட்டு வருகிறது.
ஆப்கானிஸ்தான், வங்காளதேசம் மற்றும் பாகிஸ்தானிலிருந்து சட்டவிரோதமாக அகதிகளாக இந்தியாவுக்குள் வரும் இந்துக்கள், சீக்கியர்கள், புத்தம், ஜைனம், பார்சி மற்றும் கிருத்துவர்களுக்கு குடியுரிமை வழங்கும் சட்டத் திருத்தத்தை (The Citizenship Amendment Bill, 2019) பாராளுமன்ற மக்களவையில் நேற்று (09-12-2019) நிறைவேற்றியுள்ளது பாஜக அரசு. இதன்படி திசம்பர் 31, 2014க்கு முன் இந்த மூன்று நாடுகளிலிருந்து இந்தியாவுக்குள் வந்த குறிப்பிட்ட ஆறு மதத்தினர் இந்தியக் குடியுரிமை பெற தகுதியானவர்கள். இதில் ஈழத்தமிழர்கள் மற்றும் இசுலாமியர்கள் சேர்க்கப்படவில்லை. மதரீதியாக இந்த நாட்டைப் பிளவுபடுத்தும் பாஜகவின் தாய் அமைப்பான ஆர்.எஸ்.எஸின் கொள்கைத் திட்டத்தின் ஒன்றான இதனையே பிஜேபி அரசு நிறைவேற்றத் துடிக்கிறது.
அண்டை நாடுகளில் சிறுபான்மையினர் மதரீதியாக துன்புறுத்தப்படுவதால், அவர்களுக்கு குடியுரிமை வழங்குவதற்காக இந்த திருத்தத்தைக் கொண்டுவருவதாக சொல்லும் பாஜக அரசு, அண்டை நாடுகளான இலங்கை மற்றும் மியான்மரை சேர்க்காதது ஏன்? இந்த இரு நாடுகளிலும் மத ரீதியாக, இன ரீதியாக துன்புறுத்தப்பட்டு ஆயிரக்கணக்கானோர் நாட்டை விட்டு வெளியேறி இந்தியா உள்ளிட்ட நாடுகளில் அகதிகளாக அடைக்கலம் புகுந்தது உலகம் அறியும். இன்றும் தமிழ்நாட்டில் சுமார் 107 அகதிகள் முகாம்களில் கிட்டத்தட்ட 64,208 ஈழத்தமிழ் அகதிகளும், மேலும் 40,000 ஈழத்தமிழ் அகதிகள் முகாம்களில் இல்லாமலும் 30ஆண்டுகளுக்கும் மேலாக வாழ்ந்து வருகின்றனர். முகாம்களில் அவர்கள் சிறையை விட கொடுமையாக தங்க வைக்கப்பட்டுள்ளதும், அரசு அவர்களைக் குற்றவாளிகள் போல் நடத்துவதும் நடந்துவருகிறது. அவர்களின் வாழ்வாதாரத்துக்கு எந்த உதவியும் செய்யாத இந்திய அரசு, இப்போது ஈழத்தமிழ் அகதிகளைத் தவிர்த்துவிட்டு இந்த மசோதாவை நிறைவேற்றியுள்ளது. இது அப்பட்டமாக பாஜக மோடி அரசின் ஈழத்தமிழர் விரோதப் போக்கையே காட்டுகிறது.
இலங்கை பவுத்த-சிங்களப் பேரினவாத அரசு ஈழத்தில் இனப்படுகொலை செய்தது போலவே, மியான்மர் புத்தமத பேரினவாத அரசு செய்த இனப்படுகொலையின் காரணமாக பல்லாயிரக்கணக்கான ரோஹிங்கிய இசுலாமியர்கள் இந்தியாவில் அடைக்கலம் புகுந்துள்ளனர். மேலும் மதரீதியாக துன்புறுத்தலுக்கு உள்ளாகும் சியா, அஹமதியா முசுலிம்கள், நாத்திகவாதிகள், பத்திரிக்கையாளர்கள் இந்த மசோதாவில் தவிர்க்கப்பட்டுள்ளனர். இவர்களெல்லாம் பாஜகவின் தேர்தல் லாபத்துக்கு பயன்படாதவர்கள் எனக் கருதுவதால் தான் இத்தகைய பாகுபாடு.
இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் அடிநாதமான மதச்சார்பின்மை என்பதை அழிக்கத் துடிக்கும் ஆர்எஸ்எஸ் சங்பரிவார கும்பலின் கொள்கையை நிறைவேற்ற துடிக்கிறது, மக்கள் விரோத பாஜக அரசு.
இந்திய பாஜக மோடி அரசே!
அல்லலுறும் மக்களுக்கு விரோதமான குடியுரிமை திருத்த மசோதாவைத் திரும்பப்பெறு!
தமிழ்நாடு மற்றும் இந்தியாவில் உள்ள அனைத்து ஈழத்தமிழர் அகதி முகாம்களையும் இழுத்து மூடு!
பல ஆண்டுகளாக இந்தியாவில் வாழும் ஈழத்தமிழர்களுக்கு இந்தியக் குடியுரிமை வழங்கிடு!
ஈழத்தமிழர்கள் கண்ணியமாக வாழ வழிவகை செய்!
மே பதினேழு இயக்கம்