சென்னை ஐஐடியில் (Indian Institute of Technology) மனிதவியல் மற்றும் சமூக அறிவியல் துறையில் முதலாம் ஆண்டு படித்து வந்த மாணவி பாத்திமா லத்தீஃப் 9-11-2019 அன்று தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டிருக்கிறார்.
அவர் தற்கொலைக்கு காரணமாக சுதர்சன் பத்மநாபன், மிலிந்த் பிராமே, ஹேமசந்திரன் காரா ஆகிய மூன்று பேராசிரியர்களின் பெயரை தன் செல்போனில் பதிவேற்றி வைத்திருக்கிறார்.
மத ரீதியாக தான் பாகுபாட்டுக்கு உள்ளாக்கப்படுவதாக அவர் ஏற்கனவே பல முறை சொல்லியதாக அவரது பெற்றோர் தெரிவித்திருக்கிறார்கள்.
அவர் நிறைய மதிப்பெண் எடுக்கிற மாணவி என்றும், ஆனால் ஐஐடி நிர்வாகமும், காவல்துறையும், அவர் மதிப்பெண் குறைவாக பெற்றதால் தற்கொலை செய்து கொண்டதாக பொய்யை சொல்லி மடைமாற்ற முயல்வதாக மாணவியின் குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.
இந்தியாவின் மிக உயர்ந்த நவீன கல்விக் கூடாமாக பிரதானப்படுத்தப்படும் ஐஐடி-க்குள் இப்படி சாதி-மத ஆதிக்கம் நிரம்பி வழிவதென்பது அவமானகரமானதாகும்.
மாணவியின் மரணத்திற்கு காரணமாக பேராசிரியர் பத்மநாபன் உள்ளிட்ட மூவரும் விசாரணைக்குள்ளாக்கப்பட்டு பணி நீக்கம் செய்யப்பட்டு, கைது செய்யப்பட வேண்டும்.
கடந்த ஆண்டு ஐஐடி வளாகங்களில் 6 மாணவர்கள் தற்கொலை செய்து கொண்டதாக தெரிகிறது. சாதி ரீதியான பாகுபாட்டினாலும் மாணவர்கள் தற்கொலை செய்து கொள்வது இன்னும் தொடர்ந்து வருவது ஏற்கவே முடியாத செயலாகும்.
ஐஐடி-க்குள் ஒடுக்கப்பட்ட மற்றும் பிற்படுத்தப்பட்ட (SC/ST & OBC) மாணவர்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட இடங்கள் முறையாக நிரப்பப்படுகிறதா என்பது கண்காணிக்கப்பட வேண்டும்.
ஐஐடி என்பது அனைத்து மக்களின் வரிப்பணத்தில் நடத்தப்படுகிற கல்விக்கூடம். ஆனால் ஐஐடி-யின் பேராசிரியர் பணியிடங்களில் பெரும்பான்மையினர் (70 சதவீதத்துக்கும் மேல்) உயர் சாதி மற்றும் பார்ப்பனிய பின்புலத்திலிருந்து வந்தவர்களாகவுமே இருக்கிறார்கள். இது களையப்பட்டு இட ஒதுக்கீடு முறை ஐஐடி பேராசிரியர் பணிகளுக்கு அமல்படுத்தப்படும்போது மட்டுமே இந்த பாகுபாடுகள் நிற்கும்.
சாதி ரீதியான அல்லது மத ரீதியான ஆதிக்கத்தை நுழைக்க முற்படுகிற ஐஐடி பேராசிரியர்கள் கடுமையான தண்டனைக்கு உள்ளாக்கப்பட வேண்டும்.
மாணவி பாத்திமா லத்தீஃப் மரணத்திற்கு நீதி வேண்டும். இனி ஒரு மாணவர் ஐஐடி-க்குள் தற்கொலை செய்து கொள்வது தடுக்கப்பட வேண்டும்.
மூன்று பேராசிரியர்களும் உடனடியாக விசாரணைக்கு உள்ளாக்கப்பட்டு தண்டிக்கப்பட வேண்டும்.
ஐஐடி-களில் நடைபெறும் சமூக நீதி மறுப்பினைக் கேள்விக்குள்ளாக்கும் அனைத்துக் கட்சி மற்றும் இயக்கங்களை உள்ளடக்கிய வேலைத்திட்டங்களுடனான கூட்டியக்கத்தையும் மே பதினேழு இயக்கம் கோருகிறது.
– மே பதினேழு இயக்கம்
9884072010