மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் ஒன்றியத்துக்குட்பட்ட மறவபட்டி கிராமத்தில் பிளேடால் முதுகில் கிழிக்கப்பட்ட ஒடுக்கப்பட்ட சமூக மாணவன் சரவணக்குமார் மற்றும் குடும்பத்தினரை மருத்துவமனையில் மே பதினேழு இயக்கத் தோழர்கள் சந்தித்து ஆறுதல் தெரிவித்தனர்.
இங்குள்ள ஒடுக்கப்பட்ட சமூக மக்கள் தொடர்ச்சியாக சாதிய ரீதியாக பல்வேறு கொடுமையினை அனுபவித்து வந்திருக்கின்றனர். ஆதிக்க சாதியினரின் பகுதிக்குள் செருப்பு அணிந்து செல்லக்கூட அனுமதி மறுக்கப்பட்டு சில ஆண்டுகளுக்கு முன்பு தான் பல்வேறு பிரச்சனைகளுக்கு பிறகு இத்தடை நீக்கப்பட்டுள்ளதாக அப்பகுதியைச் சேர்ந்தவர்கள் தெரிவித்தார்கள்.
அந்த ஊரைச்சார்ந்த அனைவரும் பாலமேடு அரசுப்பள்ளியில் ஒன்றாகவே படிக்க சென்று வருகின்றனர். இந்நிலையில் தான் கடந்த 11/10/2019 அன்று சரவணக்குமார் என்ற ஒடுக்கப்பட்ட அருந்ததிய சமூகத்து மாணவனை, உடன் படிக்கும் ஆதிக்கசாதியை சேர்ந்த சக மாணவன் சாதிய ரீதியில் திட்டி முதுகில் பிளேடினை வைத்து தாக்கியுள்ளான்.
சாதிப்பெருமையை மாணவர்கள் மனதில் விதைத்து சாதிவெறியைத் தூண்டும் வேலையினை பல்வேறு சாதிய அமைப்புகளும் செய்து வருகின்றன. கடந்த தலைமுறையோடு சாதி என்ற கொடூரத்தினை ஒழித்துவிட வேண்டும் என ஜனநாயக விரும்பிகள் அனைவரும் உழைத்துக் கொண்டிருக்கும்போது சாதிய அமைப்புகள் அடுத்த தலைமுறைகள் மாணவர்களிடம் சாதிவெறியை விதைத்துக் கொண்டிருக்கிறார்கள். அத்தகைய சாதிய அமைப்புகள் மீது அரசு கடுமையான நடவடிக்கையினை எடுக்க வேண்டும். அடுத்த தலைமுறை மாணவர்கள் மனதில் சாதிவெறி எனும் நஞ்சு விதைக்கப்படுவது தடுத்து நிறுத்தப்பட்டாக வேண்டும்.
இந்து மதத்தின் கொடிய நோயான இந்துத்துவ சாதிய மனப்பான்மை கிராமங்களை தாண்டி பள்ளி மாணவர்களின் பள்ளிக்கூடம் வரை நீண்டுள்ளதையும், தீண்டாமை ஒரு பெருங்குற்றம் என்பது இன்னமும் வெறும் வாசகங்களாக பள்ளிக்கூட புத்தகங்களில் மட்டுமே உள்ளன என்பதையுமே இக்கொடிய சம்பவம் காட்டுகிறது.
பாதிக்கப்பட்ட மாணவனுக்கும், ஒடுக்கப்பட்ட மக்களுக்கும் பக்கபலமாக இருப்பது தமிழர்கள் ஒவ்வொருவரின் கடமை ஆகும்.
அதே நேரத்தில் சமூகத்தில் புரையோடியிருக்கும் இந்துத்துவ-சாதிய மனப்பான்மையினை ஒருங்கிணைந்த சமூக நடவடிக்கையின் மூலமே நீக்க முடியும். அதற்கான நடவடிக்கைகளை அரசானது பள்ளிகளிலும் பெற்றோர் தங்களது வீட்டிலும் தொடங்க வேண்டும்.
– மே பதினேழு இயக்கம்
9884072010