தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் போட்டித்தேர்வில் மொழிப்பாடத்தை நீக்கியது தமிழர்களின் வேலைவாய்ப்புரிமையை நசுக்கும் நீண்டகால திட்டத்தின் மற்றுமொரு செயல் – மே பதினேழு இயக்கம்
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம்(TNPSC) குரூப் 2 பணிகளுக்காக வெளியிட்ட அறிவிக்கையில் மொழிப்பாடம் நீக்கப்பட்டு, பொது அறிவு பகுதி அதிகப்படுத்தப்பட்டது அதிர்ச்சியளிக்கக் கூடியதாக இருந்தது. பின்னர் இது குறித்து விளக்கமளித்த TNPSC, குரூப் 2 மற்றும் குரூப் 2A இணைக்கப்பட்டு, இரண்டடுக்கு தேர்வு முறை அறிமுகப்படுத்தப்படுகிறது என்றது. மேலும் மொழிப்பாடம் நீக்கப்பட்டாலும் 2 அலகுகள் (Units) தமிழ்மொழி பாடத்தில், குறிப்பாக திருக்குறள் குறித்த கேள்விகள் இடம்பெறும் என்று விளக்கமளித்துள்ளது.
ஏற்கனவே தமிழ் அல்லது ஆங்கில மொழிப்பாடம் என்ற வகையில் 100 கேள்விகளுக்கு 150 மதிப்பெண்கள் அடிப்படையில் பாதியளவு மொழிக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டது. குறிப்பாக தமிழர்கள் தமிழ் மொழிப்பாடப் பிரிவை தேர்ந்தெடுத்து ஆங்கில மொழிப்பாட பிரிவில் தேர்வெழுதும் வெளிமாநிலத்தவரை காட்டிலும் சிறப்பாக தேர்வெழுதி கிட்டத்தட்ட அனைத்து பணியிடங்களையும் பெற்று வந்துள்ளனர்.
தற்போதைய மாற்றத்தால், மொழியறிவின் முக்கியத்துவம் முற்றிலும் குறைக்கப்பட்டுள்ளது. இதனால் தமிழக அரசு பணிகளுக்கு தமிழர்களின் முக்கியத்துவம் குறைக்கப்பட்டு, தமிழர்களை வேறு மாநிலத்தவர்களுக்கு இணையாக கருதப்படும் சூழல் உருவாகியுள்ளது. போட்டித்தேர்வில் தமிழ்மொழிப்பாட கேள்விகள் இருக்கும் என்று TNPSC விளக்கமளித்தாலும், ஏற்கனவே இருந்தது போன்று 150 மதிப்பெண்களுக்கு கேட்கப்படும் என்று எந்த உத்திரவாதமும் இல்லை. வெறும் 10, 5 மதிப்பெண்களுக்கு கேட்கப்பட்டு, காலப்போக்கில் தமிழ் மொழி குறித்தான கேள்விகள் இடம்பெறாமல் போகக்கூட வாய்ப்புகள் உள்ளன.
கடந்த 2017 நவம்பர் மாதம் வெளிமாநிலத்தவர்களும் TNPSC போட்டித் தேர்வில் கலந்துக்கொள்ளலாம் என்ற அறிவிப்பு வந்த போதே மே பதினேழு இயக்கம் அதனை கடுமையாக எதிர்த்தது. ஆளும் அதிமுக அரசு தனது அதிகாரவெறியினை தக்கவைத்துக்கொள்ள, தமிழர்களுக்கு எதிரான மத்திய பாஜக அரசின் மிராட்டல்களுக்கு பணிந்து தமிழக அரசுப்பணிகளில் வெளிமாநிலத்தவர்களை அனுமதிக்கிறது என்று அப்போதே எச்சரித்தது. இன்றும் அந்த சூழ்நிலை மாறிவிடவில்லை என்பதையே தற்போதைய மொழிப்பாடம் நீக்க அறிவிப்பு உணர்த்துகிறது.
ஏற்கனவே இரயில்வே, தபால்துறை, வங்கிகள் போன்ற மத்திய அரசின் வேலைவாய்ப்புகளில் தமிழர்கள் முற்றிலும் புறக்கணிக்கப்பட்டு வரும் நிலையில், TNPSC மட்டுமே தமிழர்களின் ஒரே வாய்ப்பாக அமைந்துள்ளது. கிட்டத்தட்ட 2 கோடி தமிழர்கள் தகுதியான வேலைவாய்ப்ப்பை எதிர்பார்த்து காத்திருக்கும் நிலையில், TNPSC-யின் வெளிமாநிலத்தாரும் பங்கேற்க வாய்ப்பளித்ததும், மொழிப்பாடம் நீக்கம் குறித்த தற்போதைய அறிவிப்பும் தமிழர்களை, தமிழக அரசின் வேலைவாய்ப்புகளிலேயே புறக்கக்கணிக்கும் ஆபத்தான நிலைக்கு தள்ளியுள்ளது.
தென்னிந்தியாவில் மாநிலங்கள் வரையறை செய்யப்பட்டதற்கான அடிப்படை மொழி வழியான சமூக கட்டமைப்பாகும். தங்கள் மாநில மொழி வழி மக்கள் தங்களுக்குரிய அடிப்படை உரிமைகளை தங்கள் தாய்மொழி அடிப்படையிலேயே பெறுகின்றனர். தாய்மொழி என்பது மாநில குடியுரிமைக்கான அடிப்படையாகவும் அமைகிறது. இவ்வகையிலேயே இவர்கள் மண்ணின் மைந்தர்களாவதோடு தாய்மொழிக்கல்வி, தாய்மொழி வழியாகவே வேலை வாய்ப்புரிமை அடைகின்றனர். இந்த மொழி வழி தேர்வின் மூலமாகவே தம்மக்களுக்கான அரசு பணியாளர்களாகி சேவை செய்கின்றனர். தாய்மொழி அறிவை பெற்ற அதிகாரிகள் அல்லது பணியாளர்களாலேயே அம்மக்களுக்கான பணியை சிறப்பாகவும், உரிய முறையிலும் செய்ய இயலுமென்பதாலேயே தாய்மொழி தேர்வு என்பது அவசியமாகிறது. அதுவும் குறிப்பாக மாநில அரசு வேலை வாய்ப்பில் இந்த மொழி வழி தேர்வு முறையே அடிப்படை தகுதியாக அமைய முடியும். அத்தகைய முக்கிய காரணியான தாய்மொழி பங்கேற்பை தேர்வு முறையில் குறைப்பது, அல்லது நீக்குவது என்பது மாநில உரிமையை அழிப்பது மட்டுமல்ல, மண்ணின் மைந்தர்களுக்கு இழைக்கப்படும் அநீதியாகும். சொந்த மண்ணில் அந்நிய ஆதிக்கத்திற்கே இது வகை கோளும்.
ஒரே நாடு ஒரே மொழி என்று கூட்டாட்சி தத்துவத்திற்கு எதிராக இந்துத்துவ நாட்டை கட்டமைக்க முயலும் ஆர்எஸ்எஸ்-பாஜகவிற்கு, மொழிவழியிலான மாநிலங்களின் தாய்மொழி தடையாக உள்ளது. வேதமொழியாக கருதும் சமஸ்கிருதத்தின் மக்களுக்கான எளிய வடிவமாக இந்தியை, இந்தியாவின் ஒற்றை மொழியாக மாற்றவே மும்மொழி திட்டத்தை முன்வைக்கிறது. புதிய கல்விக்கொள்கையின் மூலம் இந்தியை திணிக்க, மும்மொழிக் கொள்கைகையை முன்வைப்பதோடு மீண்டும் குலகல்வி முறையை கொண்டுவரவே முயற்சிக்கிறது. நீட் தேர்வு, கல்லூரிகளில் பகவத் கீதை போன்றவை மூலம், தேசிய இனங்களின் தனித்துவமிக்க பண்பாட்டை சிதைத்து, இந்துத்துவத்தை ஒற்றை பண்பாடாக மாற்ற முயல்கிறது.
தமிழகம் இதுவரை கடைபிடித்து வரும் இருமொழிக்கொள்கையே, தமிழகத்தை பாதுகாக்கும் அரணாக இருந்து வந்துள்ளது. இந்திய அரசியலமைப்புச் சட்டமும் மாநிலங்கள் தங்கள் தாய்மொழியை பாதுகாக்கும் உரிமைகளை வழங்கியுள்ளன. இந்தி பேசாத மாநிலங்களில் இந்தி திணிக்கப்படமாட்டாது என்றும் இந்திய ஒன்றிய அரசு உறுதியளித்துள்ளது. எனவே, சீர்திருத்தம் என்ற பெயரில் கல்வி, மருத்துவம், வேலைவாய்ப்புகள் என்று அனைத்தையும் தனது கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவந்து, இந்தியை திணிப்பதோடு மாநில மொழிகளின் முக்கியத்துவத்தையும் குறைக்கிறது. TNPSC தேர்வில் மொழிப்பாட நீக்கம் என்பது இத்தகைய பின்னணி உடையதே.
மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகங்கள் மூலமாக பணி நியமனங்கள் நடைபெற்ற போது, தமிழகத்தின் அனைத்து பிரிவினரும் சமமாக தேர்வு பெற்று வந்தனர். தேர்வாணையம் என்ற ஒன்று அமைக்கப்பட்ட போதே சம்வாய்ப்பு மறுக்கப்பட்டு தரம்பிரித்தல் நடைபெறுகிறது. தகுதித்தேர்வு என்பதே சமூக நீதிக்கு எதிரானதாக இருக்கும் போது, தகுதித்தேர்வு நடத்துவதற்கென்றே தேர்வாணையம் அமைக்கப்பட்டு, இன்று அது தமிழர்களுக்கே வேலைவாய்ப்பை மறுக்கும் செயலில் ஈடுபடுகிறது. மொழிவழி மாநில கட்டமைப்பின் அடிப்படையான மாநில மொழியின் மீது பாஜக அரசு கைவைப்பதன் மூலம் வெறுமாநிலத்தவர்களின் குடியேற்றத்தை ஊக்குவிக்கிறது.
TNPSC-யின் இந்த அறிவிப்பையும், தமிழக அரசின் போக்கையும் மே பதினேழு இயக்கம் வன்மையாக கண்டிக்கிறது. தற்போதைய அறிவிப்பை திரும்பப் பெற்று, மீண்டும் மொழிப்பாடத்திற்கு முக்கியத்துவம் அளிக்கும் பழைய முறையை தொடர வேண்டுமென வலியுறுத்துகிறது. மேலும், வெளிமாநிலத்தார் போட்டித்தேர்வில் பங்கேற்பதை தடுக்கும் வகையிலும், தமிழர்களுக்கே முன்னுரிமை அளிக்கும் வகையிலும், அதிலும் தமிழ்மொழியை ஒரு பாடமாக பயின்றவர்களுக்கு குறிப்பாக தமிழ்வழியில் பயின்றோர்க்கு வேலைவாய்ப்புகளில் முன்னுரிமை அளிக்கும் திட்டத்தை வகுத்து செயல்படுத்த வேண்டும் என்று தமிழக அரசை மே பதினேழு இயக்கம் வலியுறுத்துகிறது.
மே பதினேழு இயக்கம்
9884072010