பெரியாரிய உணர்வாளர்கள் கூட்டமைப்பு நடத்திய திருக்குறள் மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்

பெரியாரிய உணர்வாளர்கள் கூட்டமைப்பு நடத்திய திருக்குறள் மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்:

தி.பி 2050 கடகம் 27 (2019, ஆகத்து 27)
காமராசர் அரங்கம், சென்னை
————————–

1. திருக்குறளை இயக்கப்படுத்திச் செயல்படுத்திடுவோம்!

தமிழினக் காப்பு நோக்கத்தில் எழுதப்பட்ட திருக்குறள் நூலை அடையாளம் கண்டு மீட்டெடுக்கவும், மக்களிடையே பரப்பல் செய்யவும் முயற்சிகள் மேற்கொண்ட எண்ணற்ற அறிஞர்கள், குமுகச் செயல்பாட்டாளர்கள் அனைவரையும் இம்மாநாடு நன்றியோடு நினைவு கூர்கிறது. மேலும் திருக்குறளை இயக்கப்படுத்திச் செயல்படுத்திட அறைகூவல் விடுத்த தந்தை பெரியார் உள்ளிட்ட அறிஞர் பெருமக்களின் நோக்கங்களைப் பெரியாரிய உணர்வாளர்கள் கூட்டமைப்பினர் ஒருங்கிணைந்து முன்னெடுத்துச் செல்வோம் என இம்மாநாட்டின் வழி சூளுரைக்கிறோம்.

2. தமிழ்நாட்டின் தேசிய நூலாகத் தமிழ்நாட்டு அரசு அறிவிக்க வேண்டும்!

தமிழையும், தமிழினத்தையும் உள்ளடக்கமாகச் சொல்லி, அவற்றை மீட்பதற்கான அழுத்தங்களைப் பதித்திருக்கிற திருக்குறளைத் தமிழ்நாட்டின் தேசிய நூலாகத் தமிழ்நாட்டு அரசு அறிவிக்க வேண்டுமென இம்மாநாடு வலியுறுத்துகிறது.

3. திருவள்ளுவரை உள்ளடக்கித் தமிழ்நாட்டின் இலச்சினையை மாற்றியமைக்க வேண்டும்!

சாதியற்ற, சமயங்களற்ற குமுகாயத்தை அறவழிப்பட்ட நிலையில் உருவாக்க வேண்டும் எனும் உள்ளடக்கத்தை மொழிந்த திருவள்ளுவரை உள்ளடக்கிக் காட்டக்கூடிய நிலையில் தமிழ்நாட்டின் இலச்சினை மாற்றியமைக்கப்பட வேண்டுமென இம்மாநாடு வலியுறுத்துகிறது.

4. குறள் விழா ஒன்றை பண்பாட்டு விழாவாகத் தமிழர்கள் முன்னெடுத்துக் கொண்டாட வேண்டும்!

திருக்குறளை சாதியற்ற, மத வேறுபாடுகளற்ற ஒரு புதிய சமுதாயத்தின் பண்பாட்டு அடையாளமாகக் காட்டும் நோக்கத்தில் ஆண்டுதோறும் வேனில் (மேழம் – சித்திரை – ஏப்பிரல்) முழு நிலவு நாளின் போது, தந்தை பெரியார் முன்னெடுத்து அறிவித்து நடைமுறைப்படுத்த விரும்பிய குறள் விழா ஒன்றைப் பெரிய அளவில் பண்பாட்டு விழாவாகத் தமிழர்கள் முன்னெடுத்துக் கொண்டாட வேண்டுமென்றும், தமிழ்நாட்டு அரசு அதை ஊக்கப்படுத்தி வளர்த்தெடுக்க வேண்டுமென்றும் இம்மாநாடு வலியுறுத்துகிறது.

5. தமிழர்களின் குடும்ப நடைமுறைகளை திருக்குறளை அடிப்படையாகக் கொண்டு அமைத்துக் கொள்ள வேண்டும்!

தமிழர்களின் குடும்ப வாழ்வியல் நடைமுறைகளைப் பிறப்பு முதல் இறப்பு வரையிலான பல்வேறு நிகழ்வுகளில், விழாக்களில் மேற்கொள்ளப்படுகின்ற நடைமுறைகள் யாவும் ஆரியச் சார்பானவையாகவும், சாதி, மத வேறுபாடுகளைத் தூண்டி வளர்ப்பனவாகவும், பெரும்பான்மை மக்களை இழிவுபடுத்துவனவாகவும் அமைந்திருக்கின்றன. இந் நிலையில் குழந்தைகள் பிறப்பு, தொட்டிலில் இடுவது, பெயர் வைப்பது, திருமணம், இறுதிச் சடங்கு நிகழ்வுகள் இப்படியான தமிழர்களின் விழாக்களெல்லாம் திருக்குறளை அடிப்படையாகக் கொண்டே, பகுத்தறிவுக் கண்ணோட்டத்தில் நடைமுறைகளை அமைத்துக் கொள்ள வேண்டுமென இம் மாநாடு வலியுறுத்துகிறது. தமிழார்வலர்கள், சமூக ஆர்வலர்கள் இவற்றிலெல்லாம் கவனம் செலுத்தி மக்களை நெறிப்படுத்துகிற வகையில் விழாக்களின் அமைப்பு முறைகளை பயிற்றுவிக்க வேண்டுமென இம்மாநாடு கோருகிறது.

6. வழிபாட்டிடங்கள் அனைத்திலும் திருக்குறள் அறிவகம் என்கிற பெயரில் நூலகம் அமைத்திட வேண்டும்!

ஏற்கனவே குன்றக்குடி அடிகளார் தொடங்கி, பலரும் வலியுறுத்தியும், நடைமுறைப்படுத்தியும் வந்த வகையில் தமிழ்நாட்டிலுள்ள கோயில்கள், கிறித்தவ, இசுலாமிய வழிபாட்டிடங்கள், புத்த, சமணம் உள்ளிட்ட பிற சமய மடங்களின் இடங்களிலெல்லாம் திருக்குறள் அறிவகம் என்கிற பெயரில் நூலகம், பயிற்றகம் போன்ற செயல்பாடுகளை மேற்கொள்ள வேண்டும் என்றும், அம் முயற்சிகளுக்கு அவர்களுக்குத் தமிழ்நாட்டு அரசு துணைநிற்க வேண்டும் என்றும் இம் மாநாடு வலியுறுத்துகிறது.
வள்ளுவர் கோட்டம், கன்னியாகுமரி ”திருவள்ளுவர் சிலை”, நம்பியூர் – “குறள் மாலை” உள்ளிட்ட திருக்குறளுக்கான எல்லா அமைப்புகளையும் தமிழ்நாட்டு அரசு தன் பொறுப்பில் ஏற்றுக் கொண்டு அவற்றையெல்லாம் பாதுகாப்பதும் சீரமைப்பதுமான கடமைகளைச் செவ்வனே மேற்கொள்ள வேண்டுமென இம்மாநாடு கேட்டுக் கொள்கிறது.

7. உலகத் திருக்குறள் மாநாட்டைத் தமிழ்நாட்டு அரசே நடத்த வேண்டும்!

உலகத் தமிழ் மாநாடு நடத்துவதுப்போல, ஆண்டுதோறும் உலகின் வெவ்வேறு இடங்களில் “உலகத் திருக்குறள் மாநாடு” நடத்த வேண்டுமென்றும், அதன்வழி திருக்குறளை உலகமெங்கும் பரப்பிட வேண்டுமென்றும் பரப்பிட வேண்டுமென்றும் தமிழ்நாட்டு அரசை இம் மாநாடு கேட்டுக் கொள்கிறது.

8. வன்மையாக கண்டிக்கிறது!

திருக்குறளை பார்ப்பனிய இந்து சனாதனத் தன்மை கொண்டதாய் அடையாளப்படுத்திடும் சிலரின் போக்குகளை இம் மாநாடு வன்மையாகக் கண்டிக்கிறது

Leave a Reply