வைகோ அவர்களுக்கு தேசத்துரோக வழக்கின் மீது வழங்கப்பட்டுள்ள தண்டனை ஜனநாயக விரோதமானது – மே பதினேழு இயக்கம்
கடந்த 2009ம் ஆண்டு “குற்றம் சாட்டுகிறேன்” எனும் புத்தக வெளியீட்டு நிகழ்வில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ அவர்கள் விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாகப் பேசியதாகவும், தமிழீழ இனப்படுகொலையை சுட்டிக்காட்டி இந்திய அரசுக்கு எதிராகப் பேசியதாகவும் அவர் மீது பிரிவு 124-A ன் கீழ் தேசத்துரோக வழக்கு பதிவு செய்யப்பட்டது. தற்போது அந்த வழக்கின் மீதான தீர்ப்பில் வைகோ அவர்களுக்கு 1 ஆண்டு சிறைதண்டனையும், 10,000 ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.
124-A என்பது ஆங்கிலேயர் ஆட்சியில் இந்திய விடுதலைக்காக போராடுபவர்களை ஒடுக்குவதற்காக கொண்டு வந்த கருப்பு சட்டம். தேசத்தந்தை என்ற அளவிற்கு போற்றப்படக்கூடிய மகாத்மா காந்தி அவர்களே, இந்த தேசத் துரோக சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டிருக்கிறார். இப்பிரிவு நீக்கப்பட வேண்டியதன் அவசியத்தை காந்தி பல முறை பேசி இருக்கிறார். சுதந்திரப் போராட்ட வீரர் வ.உ.சி மீதும் இப்பிரிவு போடப்பட்டது. இந்த கருப்புச் சட்டம் இன்று வரை நீக்கப்படாமல் தொடர்ந்து கொண்டே இருக்கிறது.
யாரெல்லாம் அரசின் தவறான கொள்கைகளை எதிர்த்து பேசுகிறார்களோ, போராடுகிறார்களோ அவர்கள் மீதெல்லாம் இப்பிரிவு ஏவப்படுகிறது.
பிரிவு 124-A என்பது கருத்துச் சுதந்திரத்திற்கும், ஜனநாயகத்திற்கும் எதிரானதாக இருப்பதாகக் கூறி அப்பிரிவினை, இந்திய குற்றவியல் சட்டத்திலிருந்து நீக்க வேண்டும் என்று ‘சட்ட ஆணையம்’ பரிந்துரை செய்திருக்கிறது. ஆனால் அதனைப் பற்றி துளியும் கருத்தில் கொள்ளாமல் 124-A ன் கீழ் பதியப்பட்ட வழக்கில் வைகோவிற்கு தண்டனை அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழீழ இனப்படுகொலையில் இந்திய அரசு இலங்கைக்கு ஆதரவாக செயல்பட்டதை இலங்கையினுடைய முன்னாள் பாதுகாப்பு செயலர் கோத்தபாய ராஜபக்சே இலங்கையின் பாராளுமன்றத்திலேயே பேசி இருக்கிறார். அதை மறுத்து இந்திய அரசு பேசவில்லை. ஆனால் அதைப் பேசியதற்காக வைகோவிற்கு 10 ஆண்டுகள் கழித்து தண்டனை வழங்கப்படுகிறது. மேலும் விடுதலைப் புலிகள் அமைப்பினைக் குறித்து யாரும் பேசக் கூடாது என்பது போல கருத்துரிமையின் கழுத்து நெறிக்கப்படுகிறது.
வைகோ அவர்கள் மீதான இந்த தண்டனை என்பது ஜனநாயகத்திற்கு விரோதமானது. இது குறித்து அனைத்து ஜனநாயக சக்திகளும் குரலெழுப்ப வேண்டும். இது வைகோ அவர்களோடு நிற்கப்போவதில்லை. நம்மைப் போன்ற அனைத்து ஜனநாயக சக்திகளின் குரல்வளையையும் பிரிவு 124-A நெறிக்கும். பிரிவு 124-A என்ற கருப்பு சட்டம் முழுமையாக நீக்கப்பட வேண்டும். அனைவரும் குரலெழுப்புவோம்.
– மே பதினேழு இயக்கம்
9884072010