முகிலன் எங்கே எனக் கேட்டு காவல்துறை அனுமதியுடன் ஆர்ப்பாட்டம் நடத்தியதற்கும், 350 தீவிரவாதிகள் பலி என்ற பாஜக அரசின் பொய்யை அம்பலப்படுத்தி ஊடகங்களுக்கு பேட்டி கொடுத்ததற்கும் திருமுருகன் காந்தி அவர்களின் மீது தமிழக அரசின் காவல்துறை தற்போது வழக்குகளை பதிந்திருக்கிறது.
தேர்தல் நெருங்கிய நேரத்திலிருந்து இன்று வரை திருமுருகன் காந்தி மீது இதுவரை 5 வழக்குகள் போடப்பட்டுள்ளன. திருமுருகன் காந்தி சிறை உணவின் தாக்கத்தின் காரணமாக உடல்நிலை சரியில்லாமல் கடந்த மூன்று வாரங்களுக்கும் மேலாக தொடர் சிகிச்சை பெற்று வரும் இந்த நேரத்தில் இந்த வழக்குகளை பதிந்திருக்கிறார்கள்.
பேசினாலே வழக்கு என்ற மிக மோசமான கருத்துரிமையற்ற சூழலை மத்திய பாஜக அரசும், மாநில எடப்பாடி அரசும் இணைந்து உருவாக்கி வைத்திருக்கிறது.
பொள்ளாச்சி பாலியல் குற்றவாளிகளின் மாஃபியா வலைப்பின்னலைக் கண்டுபிடிக்காமல் காப்பாற்றும் இந்த அரசு, மக்கள் போராளிகள் மீது மட்டுமே அடக்குமுறைகளை ஏவி வருகிறது.
முகிலனைக் காணாமல் ஆக்கியது யார் என்ற கேள்விக்கு பதில் சொல்லாமல் தப்பி ஓடும் அரசு, எங்கே என்று கேள்வி கேட்பவர்கள் மீது வழக்குகளை பதிகிறது.
350 தீவிரவாதிகள் பலி என்ற மோடி அரசின் பொய்களை அம்பலப்படுத்தியதற்கு திருமுருகன் காந்தி மீது வழக்குகளைப் போடூவிர்கள் என்றால், மோடி அரசு சொன்னது பொய் என்று இன்று உலகின் பல்வேறு முக்கிய ஊடகங்கள் வெளிப்படுத்திவிட்டன. முன்னாள் இந்திய ராணுவ அதிகாரிகளும் இதே கேள்விகளை எழுப்பியுள்ளனர். பொய் சொன்ன மோடி அரசின் அதிகாரிகள் மீது யார் வழக்கு போடுவது?
ஒரு ஜனநாயக நாட்டில் எல்லா துறைகளையும் போல ராணுவமும் கேள்விக்கு உள்ளாக்கப்பட வேண்டும் என்றும், ராணுவத்தை கேள்வி எழுப்பவே கூடாது என்பது பாசிசமே ஆகும் என்று இந்திய ராணுவத்தின் முன்னாள் லெப்டினன்ட் ஜெனரல் எச்.எஸ்.பனாக் தெரிவித்துள்ளார். மோடி அரசின் பொய்யைக் காப்பாற்றுவதற்காக அவர் மீதும் இந்த அரசு வழக்கு போடப் போகிறதா?
ஐந்து வழக்குகளின் விவரங்கள்:
1. கடந்த ஆண்டு 29 ஏப்ரல் 2018 அன்று காவிரி உரிமைக்காக தமிழர் வாழ்வுரிமைக் கூட்டமைப்பு சார்பாக சேப்பாக்கத்தில் நடைபெற்ற போராட்டத்தில் பேசியதற்கு தற்போது கிட்டத்தட்ட ஒரு வருடம் கழித்து தோழர் வேல்முருகன் மற்றும் திருமுருகன் காந்தி உள்ளிட்டோர் மீது 153, 153A(i)(a)(b), 505(i)(b)(c) உள்ளிட்ட பிரிவுகளில் வழக்கு பதிந்திருக்கிறார்கள்.
2. காவிரி உரிமைக்காக 2 மே 2018 அன்று மே பதினேழு இயக்கத்தால் முன்னெடுக்கப்பட்டு தமிழர் வாழ்வுரிமைக் கூட்டமைப்பு தலைவர்கள் பங்கேற்ற கண்டன ஆர்ப்பாட்டத்திற்காக தற்போது திருமுருகன் காந்தி, வேல்முருகன் உள்ளிட்டோர் மீது பிரிவு 153, 153A(i)(a)(b), 505(i)(b)(c) ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்திருக்கிறார்கள்.
3. சேலம் சிறுமி ராஜலட்சுமி படுகொலை செய்யப்பட்ட போது நடைபெற்ற உண்ணாவிரதப் போராட்டம் ஒன்றில் பங்கேற்றுப் பேசியதற்காக திருமுருகன் காந்தி மீது வழக்கினைப் பதிவு செய்திருக்கிறார்கள்.
4. முகிலன் எங்கே என்ற கேள்வியெழுப்பி காவல்துறை அனுமதியுடன் ஆர்ப்பாட்டம் நடத்தி பேசியதற்காக மே பதினேழு இயக்க ஒருங்கிணைப்பாளர்கள் திருமுருகன் காந்தி, அருள்முருகன், தமிழர் விடியல் கட்சி ஒருங்கிணைப்பாளர் டைசன், மார்க்சியப் பெரியாரியப் பொதுவுடமைக் கட்சி தோழர் பெரியசாமி ஆகிய 4 பேர் மீது 153 A(1)(a)(b) r/w 505(i)(b)(c) ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்திருக்கிறார்கள்.
5. 350 பாகிஸ்தான் தீவிரவாதிகளைக் கொன்றுவிட்டதாக ஆதாரமற்ற பொய்யான தகவலை மோடி அரசு பரப்புகிறது என்பதை அம்பலப்படுத்தி ஊடகங்களுக்கு பேட்டி கொடுத்ததற்காக பிரிவு 153 A(1)(a), 505(1)(b) ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குகளை பதிவு செய்திருக்கிறார்கள்.
வழக்குகள், அடக்குமுறைகள், உடல்நலனை சீர்குலைக்கும் சூழ்ச்சி இவை எல்லாவற்றையும் கடந்து மே பதினேழு இயக்கம் உறுதியுடன் பாசிச பாஜகவையும், அதற்கு எடுபிடியைப் போன்று செயல்படும் எடப்பாடி அரசையும் எதிர்த்து நிற்கும்.
– மே பதினேழு இயக்கம்
9884072010