தமிழர்களின் உழைப்பால் உருவான ICF-ன் வேலை வாய்ப்புகளை தட்டிப் பறித்து வட இந்தியாவிற்கு கொடுக்கும் பாஜக அரசு!

தமிழர்களின் உழைப்பால் உருவான ICF-ன் வேலை வாய்ப்புகளை தட்டிப் பறித்து வட இந்தியாவிற்கு கொடுக்கும் பாஜக அரசு!

ஏற்கனவே இயங்கிக் கொண்டிருக்கும் சென்னை-கொல்லம் ரயில் பாதையை, தற்போது தேர்தல் நேரத்தில் புதிதாக திறந்துவைப்பது போல் விழா நடத்தி மக்களை ஏமாற்றும் பாஜக அரசு, சத்தமே இல்லாமல் சென்னை ICF தொழிற்சாலையின் வளர்ச்சியினைப் பறிக்க ஆரம்பித்திருக்கிறது.

சென்னை ICF-ன் சொந்த தயாரிப்பான அதிவேக ரயிலை, தயாரிக்கும் பணியினை உத்திரப்பிரதேசத்தின் ரேபரேலிக்கு மாற்றியிருக்கிறது பாஜக அரசு. ”வந்தே பாரத் எக்ஸ்பிரஸ்” என்ற ஒரு அதிவேக நவீன ரயிலினை சமீபத்தில் மோடி துவக்கி வைத்தார் என்ற செய்தியை பார்த்திருப்பீர்கள். அந்த ரயில் தான் இந்தியாவின் முதல் சுயாதீன(Indigenous) எஞ்சின் இல்லாத அதிவேக ரயிலாகும். சென்னை ICF நிறுவனத்தினரின் மூன்று ஆண்டுகளாக கடுமையான உழைப்பின் பலனாக உருவாக்கப்பட்டதே TRAIN-18 என்று சொல்லப்படக் கூடிய அந்த ரயில். ரயில் பெட்டிகள் மற்றும் எஞ்சின்கள் தயாரிப்பில் இந்தியாவிலேயே சென்னை ICF தொழிற்சாலைதான் அதிநவீன தொழில்நுட்பங்களை கொண்டிருக்கிறது.

அந்த ரயிலுக்கான மாதிரியை உருவாக்குவது என்பதுடன் சேர்த்து, அதே மாதிரியில் அடுத்தடுத்த 10 ரயில்களை உருவாக்குவதற்கான ஒப்பந்தத்தினை சென்னை ICF நிறுவனமே பெற்றிருந்தது. முதல் ரயிலை ICF நிறுவனத்தினர் தங்கள் உழைப்பைக் கொடுத்து உருவாக்கியவுடன், திடீரென அவர்களிடமிருந்து அந்த ரயிலுக்கான தொழில்நுட்ப விளக்கத்தினை பறித்து, TRAIN-18 ரக ரயில்களை தயாரிக்கும் பணியினை உத்திரப்பிரதேசத்திற்கு மாற்றியுள்ளது ரயில்வே அமைச்சகம். உத்திரப்பிரதேசத்தில் ரேபரேலி பகுதியில் உள்ள Modern Coach Factory நிறுவனத்திற்கு அந்த ரயில் தயாரிப்பு பணிகளை வழங்கியிருக்கிறார்கள். இது ICF பணியாளர்கள் மத்தியில் அதிர்ச்சியினை ஏற்படுத்தியிருக்கிறது.

இந்த ரயிலை தயாரிப்பதற்கான எல்லா வசதியும் சென்னை ICF-ல் தான் இருக்கிறது என்றும், Modern Coach Factory-ல் அதற்கான எந்த கட்டமைப்பு வசதியோ, தொழில்நுட்ப ஆதாரங்களோ இல்லையென்றும் அதிகாரிகள் தெரிவிக்கிறார்கள். இந்த திட்டத்தை மாற்றுவதற்கான எந்த தொழில்நுட்ப அல்லது நிர்வாக சிக்கல் சார்ந்த விளக்கத்தையும் மத்திய அரசு இதுவரை அளிக்கவில்லை. இதனை எதிர்த்த சிலரையும் பணியிட மாற்றம் செய்திருக்கிறார்கள். இந்த ரயில் தயாரிப்புப் பணி சென்னை ICF-ல் நடைபெறும் பட்சத்தில் இங்கு தொழில்நுட்ப வசதியும், பணியாளர்களின் தேவையும், வருமானமும் அதிகரிக்கும். அதனை முறிக்கும் பணியினைத் தான் பாஜக அரசு செய்திருக்கிறது.

அவர்கள் இந்த தயாரிப்பைக் கொடுத்திருக்கிற ரேபரேலி பகுதி என்பது சோனியா காந்தி போட்டியிடக் கூடிய தொகுதியாகும். தனது அரசியல் போட்டிக்காக தமிழ்நாட்டின் தொழில்வளர்ச்சியில் பாஜக அரசு கைவைத்திருக்கிறது. முழுக்க முழுக்க அரசியல் லாபத்திற்காகவே இந்த இடமாறுதலை பாஜக அரசு செய்திருப்பதாகவே ICF பணியாளர்கள்தெரிவிக்கிறார்கள். ICF-ன் 12 தொழிற்சங்கங்களைச் சேர்ந்த அனைத்து பணியாளர்களும் இணைந்து கடந்த வாரம் இந்த இடமாற்றத்திற்கு எதிராக பெரிய போராட்டத்தினை நடத்தியிருக்கிறார்கள்.

கடந்த சில வாரங்களாக பாஜகவின் தமிழக தேர்தல் பொறுப்பாளரும், ரயில்வே அமைச்சருமான பியூஷ் கோயல், தமிழ்நாட்டில் புதிய புதிய ரயில் போக்குவரத்து திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டியிருக்கிறோம் என்று இல்லாத பெருமையை பேசிக் கொண்டிருக்கிறார். ஆனால் தமிழ்நாட்டிலிருந்து நயவஞ்சகமாக பறிக்கப்பட்ட TRAIN-18 தயாரிப்பைப் பற்றி பேசுவதில்லை.

தர்மபுரி-மொரப்பூர் ரயில் பாதைக்கு அடிக்கல் நாட்டிவிட்டதாக இப்போது பெருமை பேசிக் கொண்டிருக்கிறது பாஜக. கோவையிலிருந்து பொள்ளாச்சி வழியாக மதுரை செல்லக் கூடிய ரயிலை இயக்குவதற்கான திட்டம் என்று சொல்லி பல ஆண்டுகளுக்கு முன்பு அறிமுகப்படுத்தப்பட்டது. அந்த ரயில் திட்டமே இன்னும் இயக்கப்படவில்லை. இத்தனைக்கும் அந்த பாதை ப்ராட் கேஜ் என்று சொல்லப்படக் கூடிய அகலப் பாதையாக எப்போதோ மாற்றப்பட்டுவிட்டது. ஆனால் தர்மபுரி – மொரப்பூர் திட்டத்திற்கு இன்னும் இருப்புப் பாதைகள் கூட அமைக்கப்படவில்லை. அதற்கான ஆய்வுப் பணிகளை மேற்கொள்வதற்கே குறைந்தது 15 ஆண்டுகள் ஆகும். அந்த திட்டத்தினை தேர்தல் நேரத்தில் திட்டத்தை அறிவித்து விட்டு இப்போதே அதற்கு பெருமை பேச ஆரம்பித்துவிட்டார்கள்.

TRAIN-18 தயாரிப்புப் பணி சென்னை ICF தொழிற்சாலையிலிருந்து மாற்றப்படக் கூடாது என்று மே பதினேழு இயக்கம் வலியுறுத்துகிறது. ஸ்டெர்லைட்டை எதிர்த்தால் நம்மை தொழில் வளர்ச்சிக்கு எதிரானவர்கள் என்று சொல்லிவிட்டு, தமிழ்நாட்டின் தொழில் வளர்ச்சியினை சத்தமில்லாமல் பறித்துக் கொண்டிருக்கிறது மத்திய அரசு. தமிழர்களின் வேலை வாய்ப்பு மற்றும் வளர்ச்சியினை தொடர்ச்சியாக பறிக்கும் வேலையை செய்து வரும் பாஜக அரசினை மே பதினேழு இயக்கம் வன்மையாக கண்டிக்கிறது.

– மே பதினேழு இயக்கம்
9884072010

 

Leave a Reply