பார்ப்பனர்கள் உள்ளிட்ட உயர்சாதியினருக்கு பொருளாதார அடிப்படையில் 10 % இட ஒதுக்கீடு என்பது OBC, SC/ST இடஒதுக்கீட்டினை அழிக்கும் சதியே

பார்ப்பனர்கள் உள்ளிட்ட உயர்சாதியினருக்கு பொருளாதார அடிப்படையில் 10 % இட ஒதுக்கீடு என்பது OBC, SC/ST இடஒதுக்கீட்டினை அழிக்கும் சதியே – மே பதினேழு இயக்கம்

ஆண்டுக்கு 8 லட்சம் வருமானத்திற்குள் உள்ள பார்ப்பனர்கள் மற்றும் உயர் சாதியினருக்கு 10 சதவீத இட ஒதுக்கீட்டினை பாஜக அரசு பாராளுமன்றத்தில் கொண்டுவந்திருக்கிறது. இதற்காக 124வது அரசியலமைப்புச் சாசன திருத்த மசோதாவினை கொண்டுவந்திருக்கிறது.

எதிர்க்கட்சியான காங்கிரசும் சேர்ந்து இந்த அநீதியான நடவடிக்கையை ஆதரித்திருக்கிறது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உள்ளிட்ட கட்சிகளும் பெரிய அளவிலான எதிர்ப்பினை பதிவு செய்யாமல், ஆதரித்துள்ள நிலையில் இந்த மசோதா பாராளுமன்றத்தின் இரண்டு அவைகளிலும் நிறைவேற்றப்பட்டுள்ளது. எந்த சமூக-பொருளாதார ஆய்வையும் மேற்கொள்ளாமல், உயர் சாதியின் ஆதிக்கத்தைக் காக்கும் நோக்குடன் நிறைவேற்றப்பட்டிருக்கும் இந்த மசோதாவினை இந்தியாவின் எதிர்கட்சிகள் ஒருசேர ஆதரித்திருப்பது ஒரு மோசமான முன்னுதாரணமாகும்.

சமூக நீதிக்கு சவக்குழி வெட்டிய நடவடிக்கையாகவே இந்த நடவடிக்கை அமைந்திருக்கிறது. நீட் தேர்வு எதிர்ப்பிலும், GST மசோதா எதிர்ப்பிலும் தமிழ்நாடு தனித்து விடப்பட்டதைப் போல, இந்த மசோதாவிலும் தமிழ்நாடு தனித்து விடப்பட்டிருக்கிறது. சமூக நீதி மண்ணான தமிழ்நாட்டின் கட்சிகள் மட்டுமே தனது எதிர்ப்பினை பதிவு செய்துள்ளன.

இட ஒதுக்கீடு என்பது வெறும் வறுமை ஒழிப்பு திட்டமல்ல என்பது இந்தியாவில் பலமுறை பேசப்பட்டிருக்கிறது. வறுமையை ஒழிப்பதற்காக பல்வேறு செயல்திட்டங்கள் இங்கே நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றன. அதற்காக புதிய திட்டங்களையும் இந்திய அரசு நினைத்தால் செயல்படுத்த முடியும். ஆனால் இட ஒதுக்கீடு என்பது சமூக ரீதியாக ஒடுக்கப்பட்ட ஒட்டுமொத்த சமூகத்தையும் உயர்த்தும் செயல்திட்டமாகும்.

சாதியால் காலம் காலமாக ஒடுக்கப்பட்டு வாய்ப்புகள் மறுக்கப்பட்ட சமூகங்களுக்கு, அதன் அடிப்படையிலேயே அனைத்து துறைகளிலும் வாய்ப்பினை வழங்குவது. இட ஒதுக்கீடு என்பது Socially and Educationally backward சமூகங்களுக்கானது என்றே அரசியல் சாசனத்தில் வரையறுக்கப்பட்டது. பொருளாதார ரீதியாக வழங்கப்பட வேண்டும் என்ற பரிந்துரை, இடஒதுக்கீடு கொண்டு வரப்பட்ட போதே விவாதத்திற்கு உள்ளாக்கப்பட்டு, அது சரியானதாக இருக்காது என்று அனைவராலும் நிராகரிக்கப்பட்ட ஒன்றாகும். நிராகரிக்கப்பட்ட திட்டத்தைத் தான் மோடி அரசு வஞ்சகமாக எந்த விவாதமுமின்றி மீண்டும் கொண்டுவந்திருக்கிறது. Socially backward என்பதுடன் Economically Weaker Sections என்பதை சேர்த்திருக்கிறார்கள்.

இதையே காரணம் காட்டி மொத்த இடஒதுக்கீடு முறையையும் இனி வரும் காலத்தில் அழித்திடுவதற்கான வேலையினை செய்துவிட முடியும். அதற்காகத் தான் இந்த சதியினை மோடி அரசு செய்திருக்கிறது. மக்கள் தொகையில் மிகச் சிறுபான்மையினராக இருந்து கொண்டு அரசின் அத்தனை துறைகளின் வேலைவாய்ப்புகளையும், அதிகாரத்தினையும் சுவைத்த பார்ப்பனர்கள் மற்றும் சில மேல்தட்டு உயர்சாதிகளின் அதிகாரத்தை உறுதிபடுத்தவே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. பெரியாரும், அம்பேத்கரும் தன் வாழ்நாள் முழுதும் போராடி நம் தலைமுறையினர் முன்னேறுவதற்கான இடஒதுக்கீட்டினை நமக்காக கொண்டுவந்தார்கள். தற்போது நம் எதிர்கால தலைமுறையினர் மீண்டும் பழங்கால வர்ணாசிரம கொடுமைக்குள் தள்ளப்பட இருக்கிறார்கள்.

OBC மற்றும் SC/ST மக்களின் கல்வி, வேலைவாய்ப்பு இரண்டினையும் மோடி அரசின் இந்த அரசியல் சாசன திருத்தம் கேள்விக்குள்ளாக்கி உள்ளது. 2.5 லட்சம் வருமானம் இருந்தாலே நம்மை வருமான வரி கட்ட சொல்கிற அரசு, 8 லட்சம் வரை சம்பாதிக்கிற பார்ப்பனர்களை ஏழைகள் என்கிறது. பார்ப்பனியத்திற்காகவும், மனுதர்ம ஏற்றத்தாழ்வு கோட்பாட்டினை நிலை நிறுத்துவதற்காகவும் எந்த எல்லைக்கும் செல்வதற்கு ஆர்.எஸ்.எஸ்-ம், பாஜகவும் தயாராக இருக்கிறது. தனது பதவிக்காலம் முடிவதற்குள் சமூகநீதியை குழிதோண்டி புதைத்துவிட வேண்டும் என்று பாஜக அரசு கங்கணம் கட்டிக் கொண்டு இறங்கியுள்ளது.

இடஒதுக்கீடு கொள்கைக்கு எதிராக உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்த போது, முதல் எதிர்ப்புக் குரல் தமிழ்நாட்டிலிருந்து பெரியாரிடமிருந்து எழுந்தது. வேறு எந்த மாநிலத்திற்கும் அப்போது அதன் அவசியம் புரியவில்லை. தமிழ்நாட்டின் எதிர்ப்புக் குரலே இந்தியா முழுதும் இருக்கிற உழைக்கும் மக்களுக்கு இட ஒதுக்கீட்டினை பெற்றுத்தந்தது. இன்று மீண்டும் அதே நிலை வந்திருக்கிறது. இப்போதும் இந்தியாவின் பிற மாநில மக்களுக்கு சமூக நீதி என்றால் என்ன என்று தெரியாத நிலையே இருக்கிறது. தமிழ்நாடு தான் இதற்கான வலுவான எதிர்ப்புக் குரலினை பதிவு செய்ய இயலும்.

இந்திய பாஜக அரசின் இந்த சட்டவிரோத அரசியல் சாசன திருத்தத்தினை மே பதினேழு இயக்கம் வன்மையாக கண்டிக்கிறது. இந்த திருத்தத்தினை உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என்றும், இல்லாவிட்டால் ஜனநாயக ரீதியான வலிமையான எதிர்ப்புப் போராட்டங்களின் மூலம் மத்திய அரசு மக்களிடமிருந்து அந்நியப்பட நேரிடும் என்பதனையும் தெரிவித்துக் கொள்கிறோம்.

– மே பதினேழு இயக்கம்
9884072010

Leave a Reply