2018ம் ஆண்டில் மே பதினேழு இயக்கம் கடந்த வந்த பாதைகளின் தொகுப்பை இங்கு அளிக்கிறோம். ஒவ்வொரு புகைப்படத்தின் அந்த நிகழ்வு குறித்தான விவரங்களை அளித்திருக்கிறோம்.
தந்தை பெரியார் நினைவு நாளை முன்னிட்டு காவி-பாசிச பயங்கரவாதத்தை வீழ்த்தி, தமிழின உரிமைகளை மீட்கும் நோக்குடன் அனைத்து பெரியாரிய இயக்கங்களும், உணர்வாளர்களும் இணைந்து மாபெரும் கருஞ்சட்டைப் பேரணி மற்றும் மாநாட்டினை திருச்சியில் டிசம்பர் 23 அன்று நடத்தினர். பெரியாரிய உணர்வாளர்கள் கூட்டமைப்பு சார்பில் நடைபெற்ற இந்த பேரணியில் 160க்கும் மேற்பட்ட அமைப்புகளைச் சேர்ந்த பல்லாயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர். திருச்சி மாநகர் கருப்பு சட்டையும், கருப்புக் கொடிகளுமாய் காட்சியளித்தது. பெண்கள், இளைஞர்கள், குழந்தைகள், தொழிலாளர்கள், தமிழ் உணர்வாளர்கள் என அனைவரும் ஒன்று திரண்டு மிக வலிமையான பேரணியினை நிகழ்த்திக் காட்டினர். தேர்தலில் பங்கேற்காத இயக்கங்கள் ஒன்றிணைந்து மாபெரும் மக்கள் திரள் பேரணியினை நடத்திக் காட்டியிருப்பது மிக முக்கியமான நிகழ்வாக மாறியிருக்கிறது. மேலும் இப்பேரணியில் சாதி ஆணவப் படுகொலைகளை தடுக்க தனிச்சட்டம் இயற்ற வேண்டும் என்றும், ஸ்டெர்லைட் படுகொலைகளுக்கு நீதி வேண்டும் என்றும், தமிழ்நாட்டை சுரண்டி கார்ப்பரேட்டுகளுக்கு தாரை வார்க்கும் மீத்தேன்/ஹைட்ரோகார்பன், நியூட்ரினோ போன்ற மக்கள் விரோதத் திட்டங்களை கைவிட வேண்டும் என்றும், ஏழு நிரபராதித் தமிழர்களை உடனே விடுதலை செய்ய வேண்டும் என்றும் கோரிக்கைகளை உள்ளடக்கிய பதாகைகளை ஏந்தி வந்தனர். காவி எங்கள் நிறமல்ல, கருப்பே எங்கள் நிறமடா என்றும், காவி பயங்கரவாதிகளுக்கு பெரியார் மண்ணில் இடமில்லை என்றும், சாதி ஒழிப்போம் என்றும் முழக்கங்கள் ஆர்ப்பரித்தன.
நெல்லையில் “தமிழினம் காப்போம்” பொதுக்கூட்டம் (15-12-18)
தந்தைப் பெரியாரின் பிறந்தநாளை முன்னிட்டு நெல்லையில் நடத்தப்படவிருந்த பொதுக்கூட்டதிற்கு காவல்துறை அனுமதி மறுக்க, நீதிமன்றம் சென்று அனுமதி பெற்று, “தமிழினம் காப்போம்” என்ற பெயரில் 15-12-2018 அன்று பாளையங்கோட்டை சித்த மருத்துவ கல்லுரி அருகில் பொதுக்கூட்டம் நடத்தப்பட்டது. நூற்றுக்கணக்கான பொதுமக்கள் பங்கேற்ற இந்த பொதுக்கூட்டம், கஜாப் புயலை தேசியப் பேரிடராக அறிவிக்க வேண்டும், ஏழு நிரபராதித் தமிழர்களை உடனடியாக விடுவிக்க வேண்டும், சாதிய ஆணவப் படுகொலைகளுக்கு எதிராக தனிச்சட்டம் இயன்ற கோரிக்கைகளை முன்னிறுத்தி நடத்தப்பட்டது.
அம்பேத்கர் நினைவு நாள் பொதுக்கூட்டம்-அம்பத்தூர்(9
அம்பேத்கர் நினைவு நாளையொட்டி “தமிழினம் காப்போம்” என்ற தலைப்பில் மே பதினேழு இயக்கம் சார்பில் உரிமை முழக்கப் பொதுக்கூட்டம் சென்னை அம்பத்தூரில் 09-டிசம்பர்-2018 அன்று நடைபெற்றது. கஜா புயலை தேசியப் பேரிடராக அறிவி! ஏழு தமிழரை உடனே விடுதலை செய்! சாதி ஆணவப் படுகொலைகளை தடுக்க தனிச்சட்டம் இயற்று! என மூன்று கோரிக்கைகளை முன்வைத்து இந்த பொதுக்கூட்டம் நடத்தப்பட்டது.
கருஞ்சட்டை பேரணி குறித்தான பத்திரிக்கையாளர் சந்திப்பு
ஓசூர் நந்தீஷ்-சுவாதி ஆணவப்படுகொலையைக் கண்டித்து சேலத்தில் ஆர்ப்பாட்டம் (24-11-2018)
ஓசூர் நந்தீஷ்-சுவாதி சாதி ஆணவப் படுகொலை செய்யப்பட்டதைக் கண்டித்தும், சாதி ஆணவப் படுகொலைகளை தடுத்திட தனிச்சட்டம் இயற்ற வலியுறுத்தியும், தேனி ராகவி, சேலம் ராஜலட்சுமி, தர்மபுரி சவுமியா என பெண் குழந்தைகள் மீதான பாலியல் தாக்குதல்களைக் கண்டித்தும் சேலத்தில் நவம்பர் 24 அன்று கண்டன ஆர்ப்பாட்டம் மே பதினேழு இயக்கத்தின் சார்பில் நடைபெற்றது.
கஜா புயல் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மே பதினேழு இயக்கம் சார்பில் மருத்துவ முகாம் நடத்தப்பட்டது.
கஜா புயல் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மே பதினேழு இயக்கம் சார்பில் தொடர் நிவாரண மற்றும் சீரமைப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டன.
தந்தை பெரியாரின் 140 வது பிறந்த நாளை முன்னிட்டு, மயிலாப்பூரில் மே பதினேழு இயக்கத்தின் சார்பில் தமிழின உரிமை மீட்பு பொதுக்கூட்டம் நடத்தப்பட்டது.
தோழர் திருமுருகன் காந்தி விடுதலை (02-10-2018)
55 நாட்களாக சிறையில் இருந்த மே பதினேழு இயக்க ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி இன்று மாலை மணியளவில் வேலூர் சிறையிலிருந்து விடுதலையானார். விடுதலையாகி வெளியில் வந்த அவர் வேலூரில் உள்ள பெரியார் மற்றும் அம்பேத்கர் சிலைகளுக்கு மாலை அணிவித்தார். SDPI, தமுமுக, மனிதநேய மக்கள் கட்சி, மனிதநேய ஜனநாயக கட்சி, தமிழ் புலிகள் கட்சி, தமிழர் விடியல் கட்சி உள்ளிட்ட அமைப்புகளை சேர்ந்த தோழர்கள் வரவேற்றனர்.
தந்தை பெரியார் பிறந்த நாளையொட்டி (17-9-2018) தமிழகம் முழுதும் உள்ள பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து மே பதினேழு இயக்கத் தோழர்கள் கொண்டாடினர்.
பெரியார் சிலைக்கு மாலை அணிவித்ததற்கு திருமுருகன் காந்தி மீது தேசத் துரோக வழக்கு போடுவாய் என்றால் அந்த தவறை மீண்டும் மீண்டும் செய்வோம் என்றும் தெரிவித்தனர்.
திருமுருகன் காந்தி விடுதலை கோரி மாபெரும் பொதுக்கூட்டம்(08-9-18)
மே பதினேழு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் தோழர் திருமுருகன் காந்தியை விடுதலை செய்ய வலியுறுத்தியும், UAPA எனும் கருப்பு சட்டத்தினை ஒழித்திட வலியுறுத்தியும் அரசு அடக்குமுறைக்கு எதிரான மாபெரும் பொதுக்கூட்டம் மே பதினேழு இயக்கம் சார்பில் 08-09-18 அன்று தி.நகர் முத்துரங்கன் சாலையில் நடத்தப்பட்டது.
திருமுருகன் காந்தி பெங்களூர் விமான நிலையத்தில் கைது (08-08-2018)
தூத்துக்குடி படுகொலைக்கு நீதி கேட்டு ஐ.நா மனித உரிமைகள் ஆணையத்தில் பேசிவிட்டு திரும்பிய போது பெங்களூர் விமான நிலையத்தில் வைத்து திருமுருகன் காந்தி கைது செய்யப்பட்டார்.
நீதிமன்றத்தால் விடுவிக்கப்பட்ட பின்னரும் மீண்டும் நீதிமன்ற வாசலிலேயே கைது செய்யப்பட்டு பல்வேறு பொய்வழக்குகளின் கீழ் சிறை வைக்கப்பட்டார்.
அவர் மீது UAPA எனும் கருப்பு சட்டமும் போடப்பட்டு, நீதிமன்றத்தால் ரத்து செய்யப்பட்டது.
நேற்று தமிழீழம்! இன்று தமிழ்நாடு?- பெங்களூர் கருத்தரங்கம் (08-7-2018)
நேற்று தமிழீழம்! இன்று தமிழ்நாடு? என்ன செய்யப் போகிறோம் நாம்? என்ற தலைப்பிலான அரங்கக் கூட்டம் பெங்களூரில் 08-7-2018 அன்று மே பதினேழு இயக்கம் சார்பில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் தமிழ்நாட்டினை சூழ்ந்திருக்கும் பல்வேறு சிக்கல்கள் பிரச்சினைகள் குறித்தும், எதிர்கொள்ளவிருக்கும் எதிர்கால சிக்கல்கள் குறித்தும் பேசப்பட்டது. பெங்களூரைச் சேர்ந்த தமிழ் உணர்வாளர்களும், இளைஞர்களும் இக்கூட்டத்தில் பங்கேற்றனர்.
தூத்துக்குடி படுகொலைக்கு நீதி கேட்டு ஜெர்மனியில் கருத்தரங்கம் (01-7-18)
தூத்துக்குடி படுகொலைக்கு நீதி கேட்டு சர்வதேச மனித உரிமைகள் செயல்பாட்டாளர்களை ஒருங்கிணைத்து ஜெர்மனியில் கருத்தரங்கினை மே பதினேழு இயக்கம் நடத்தியது.
தூத்துக்குடி படுகொலைக்கு நீதி கோரி ஐ.நா மனித உரிமை ஆணையத்தில் ஜூன் மாதத்தில் நடைபெற்ற கூட்டத்தொடரில் மே பதினேழு இயக்க ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி உரையாற்றினார்.
2018ம் ஆண்டில் சென்னை, மதுரை, கோவை, கரூர் புத்தகக் கண்காட்சிகளில் மே பதினேழு இயக்கம் பங்கெடுத்தது.
வேல்முருகன் கைதைக் கண்டித்தும், ஸ்டெர்லைட் ஆலையை மூடக் கோரியும் திண்டுக்கல்லில் நடைபெற்ற ஆர்ப்பாட்டம்
தோழர் வேல்முருகனுக்காக மதுரையில் ஆர்ப்பாட்டம் (29-5-2018)
தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் அவர்களை விடுதலை செய்ய வலியுறுத்தியும், ஸ்டெர்லைட் ஆலையை அகற்ற வலியுறுத்தியும், தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் மற்றும் காவல்துறை அதிகாரிகள் மீது கொலை வழக்கில் கைது செய்ய வலியுறுத்தியும் கண்டன ஆர்ப்பாட்டம் மதுரையில் 29-5-18 அன்று நடைபெற்றது. இதில் பல்வேறு தோழமை அமைப்புகளைச் சேர்ந்த தோழர்களும் பங்கேற்றனர்.
விடுதலைப் புலிகளை பயங்கரவாத அமைப்பாக அறிவிக்கும் சுவிஸ் அரசின் முடிவினை எதிர்த்த பத்திரிக்கையாளர் சந்திப்பு – சூரிச்- 25-5-18
விடுதலைப் புலிகள் குற்றவியல் அமைப்பல்ல என்று தெரிவித்தோடு, புலிகளுக்கு நிதி சேகரித்தார்கள் என்று சுவிட்சர்லாந்து அரசாங்கத்தினால் குற்றம் சாட்டப்பட்டு, வழக்கு பதிவு செய்யப்பட்டவர்களையும் விடுவித்து 14-6-18 அன்று தீர்ப்பளித்துள்ளது சுவிஸ் நீதிமன்றம்.
கும்பகோணத்தில் தூத்துக்குடிக்காக ஆர்ப்பாட்டம் 25-5-18
தூத்துக்குடி படுகொலையைக் கண்டித்து கும்பகோணத்தில் நடந்த ஆர்ப்பாட்டம் ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடக் கோரியும், தூத்துக்குடி மக்களின் படுகொலைக்கு காரனமான எடப்பாடி பழனிச்சாமி உடனடியாக பதவி விலக வலியுறுத்தியும், 25.04.2018 அன்று கும்பகோணம் காந்தி பூங்கா அருகே மே பதினேழு இயக்கத்தின் சார்பாக ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.
தூத்துக்குடி படுகொலையைக் கண்டித்தும், ஸ்டெர்லைட்டை இழுத்து மூட வலியுறுத்தியும், கைது செய்யப்பட்ட தமிழக வாழ்வுரிமைக் கட்சி தலைவர் வேல்முருகன் அவர்களை விடுதலை செய்ய வலியுறுத்தியும் மே பதினேழு இயக்கம் சார்பில் சேலத்தில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
தூத்துக்குடி படுகொலை-தலைமைச் செயலகம் முற்றுகை 24-5-18
தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் போராட்டத்தில் அமைதியாக போராடிய மக்கள் மீது நடத்தப்பட்ட அரச பயங்கரவாத படுகொலையைக் கண்டித்தும், ஸ்டெர்லைட் ஆலையை மூட வலியுறுத்தியும் தமிழர் வாழ்வுரிமை கூட்டமைப்பு சார்பில் தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலக முற்றுகைப் போராட்டம் இன்று (மே 24, 2018) நடைபெற்றது. தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் தலைவர் தோழர் வேல்முருகன் தலைமையில் நடைபெற்ற இந்த போராட்டத்தில் கூட்டமைப்பைச் சேர்ந்த அனைத்து அமைப்புகளும் கட்சிகளும் பங்கேற்றனர். மே பதினேழு இயக்கம் தனது பெரும்பான்மையான தோழர்களுடன் பங்கேற்றது.
தமிழீழ இனப்படுகொலைக்கான 9 ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு தமிழர் கடலான மெரீனா கடற்கரையில் மே20-ல் நடத்தப்படும் என்று மே பதினேழு இயக்கம் சார்பில் அறிவிக்கப்பட்டிருந்தது. தொடர்ந்து 8 ஆண்டுகளாக மே பதினேழு இயக்கம் நினைவேந்தலை கண்ணகி சிலை அருகில் நடத்தி வருகிறது. நினைவேந்தல் நிகழ்விற்கு தடை என்று தமிழக அரசின் காவல் துறை அறிவித்தது. திட்டமிட்டபடி கண்ணகி சிலை முன்பு நினைவேந்தல் நடத்தப்படும் என்று மே பதினேழு இயக்கம் அறிவித்தது. மெரீனாவில் கூடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஊடகங்களில் அறிவிக்கப்பட்டது. மெரீனா கடற்கரை முழுவதும் காவல்துறையினரும், அதிரடிப் படையினரும் நிரப்பப்பட்டனர். இந்த தடை மிரட்டல் பிரச்சாரங்களை மீறி ஆயிரக்கணக்கானோர் நினைவேந்தலுக்காக கண்ணகி சிலை எதிரே உள்ள சாலையில் திரண்டனர். பெரும்பான்மையான இளைஞர்கள். பெண்கள், குழந்தைகள் என குடும்பத்துடன் பலரும் திரண்டனர். பல்வேறு தமிழீழ ஆதரவு இயக்கங்கள் மற்றும் கட்சிகளை சேர்ந்தவர்களும் திரண்டனர். பறை இசை முழங்க தோழர்கள் மெரீனா நோக்கி புறப்பட்டனர். தமிழீழம் வெல்லும், இனப்படுகொலையை மறக்க மாட்டோம், நினைவேந்தலை தடுக்காதே, தமிழருக்கு துரோகம் செய்யாதே என முழக்கமிட்டனர். நினைவேந்தலை தடுக்கும் இந்திய அரசையும், தமிழக அரசையும் கண்டித்து முழக்கமிட்டனர். நினைவேந்தல் எங்கள் பண்பாட்டு உரிமை, தமிழர் கடலில் தான் நினைவேந்துவோம் என்றும் முழக்கங்கள் எழுப்பினர். மெரீனாவை நோக்கி சென்ற தோழர்களை தடுத்து காவல்துறை கைது செய்ய ஆரம்பித்தது. நினைவேந்தலை நடத்த விடாமல் தடுத்து அனைவரையும் வாகனங்களில் ஏற்றி கைது செய்தது.
காவிரி உரிமை மீட்க சென்னை சேப்பாக்கத்தில் ஆர்ப்பாட்டம் – 2-5-2018
காவிரி உரிமை மீட்க மே பதினேழு இயக்கம் சார்பில், மே 2, 2018 புதன்கிழமை அன்று மாலை 4 மணியளவில், சென்னை சேப்பாக்கம் விருந்தினர் மாளிகை அருகில் எழுச்சியுடன் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தமிழர் வாழ்வுரிமை கூட்டமைப்பின் பல்வேறு தலைவர்களும் தோழர்களும் திரளாக பங்கேற்று காவிரி உரிமை மீட்க முழக்கங்கள் எழுப்பினர்
கும்பகோணத்தில் காவிரி உரிமை மீட்பு பொதுக்கூட்டம் 28-4-18
காவிரி உரிமை மீட்பு பொதுக்கூட்டம் காவிரிக் கரையான கும்பகோணத்தில் 28-4-18 சனி அன்று மாலை மே பதினேழு இயக்கம் நடத்தியது. காவிரி மேலாண்மை வாரியம் அமைத்திடு என்று சொல்லியும், 378 டி.எம்.சியே எங்கள் கோரிக்கை, 177.25 என்பது ஏமாற்று என முன்வைத்தும், மீத்தேன், பெட்ரோலியம், நிலக்கரி எடுத்து காவிரி டெல்டாவினை பாலைவனமாக்காதே என முன்வைத்தும் இந்த பொதுக்கூட்டம் நடைபெற்றது.
திண்டுக்கல்லில் காவிரி உரிமை மீட்பு கண்டன கூட்டம்-22-4-18
காவிரி மேலாண்மை வாரியம் அமைத்திடவும், நமது கோரிக்கை 177.25 டி.எம்.சி அல்ல, 378 டி.எம்.சி என்பதனை வலியுறுத்தியும் திண்டுக்கல்லில் மே பதினேழு இயக்கத்தின் சார்பில் கண்டனக் கூட்டம் 22-4-2018 ஞாயிறு அன்று மாலை நடைபெற்றது.
வன்கொடுமை தடுப்புச் சட்டத்திற்காக ரயில் மறியல் 21-4-2018
SC/ST வன்கொடுமை தடுப்புச் சட்டத்தினை நீர்த்துப் போகச் உச்சநீதிமன்ற தீர்ப்பினைக் கண்டித்தும், வன்கொடுமை தடுப்புச் சட்டத்தினை வலுப்படுத்தி அரசியலமைப்பு சட்டத்தின் அட்டவணை 9-ல் சேர்த்திட வலியுறுத்தியும் ரயில் மறியல் போராட்டம் இன்று 21-4-2018 பல்வேறு கட்சிகள் மற்றும் அமைப்புகள் சார்பில் சென்னை, மதுரை, கோவை ஆகிய நகரங்களில் முன்னெடுக்கப்பட்டது.
காவிரி உரிமை திருப்பூரில் கண்டனக் கூட்டம் 15-4-18
திருப்பூரில் காவிரி உரிமைக்காக கண்டனக் கூட்டம் மே பதினேழு இயக்கத்தினால் 15-4-18 அன்று திருப்பூரில் நடத்தப்பட்டது. 378 டி.எம்.சியே நமது கோரிக்கை என்றும் 177.25 ஆக குறைக்கப்பட்டதை ஏற்க முடியாது என்றும் விரிவான உரையினை தோழர்கள் நிகழ்த்தினர்.
காவிரி உரிமைக்கு திருவாரூரில் கண்டன ஆர்ப்பாட்டம் 14-4-2018
காவிரி உரிமை மீட்க வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம் 14-4-2018 அன்று திருவாரூரில் மே பதினேழு இயக்கத்தினால் நடத்தப்பட்டது. இதில் 177.25 டி.எம்.சி என்று தமிழ்நாட்டின் தண்ணீரைக் குறைத்தது ஏற்க முடியாதது என்றும், 378 டி.எம்.சியை நாங்கள் முன்வைக்கிறோம் என்றும் தெரிவிக்கப்பட்டது. கர்நாடகத்திற்கு வழங்கப்படும் தண்ணீர் பல மடங்கும் கூடியிருப்பதும், தமிழகத்திற்கு வழங்கப்படும் த்ண்ணீர் முற்றிலுமாக குறைக்கப்பட்டிருப்பதும் முன்வைத்து பேசப்பட்டது.
அம்பேத்கர் பிறந்த நாளில் ஆம்பூரில் ஆர்ப்பாட்டம் 14-4-2018
புரட்சியாளர் டாக்டர் அம்பேத்கர் அவர்களின் 127 வது பிறந்த நாளான 14-4-2018 சனி அன்று காலை ஆம்பூரில் நீட் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம் மே பதினேழு இயக்கத்தினால் நடத்தப்பட்டது.
காவிரி உரிமை மீட்க கோவையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டம் 14-4-2018
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி இன்று 14 – 4 – 2018 சனிக்கிழமை காலை 10 மணியளவில் கோவை டாடாபத் அருகில் மே பதினேழு இயக்கத்தின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
அம்பேத்கர் பிறந்த நாள் கூட்டம் திருவொற்றியூர் – 14-4-2018
புரட்சியாளர் டாக்டர் அம்பேத்கர் அவர்களின் 127 வது பிறந்த நாளில் நீட் தேர்வினை ரத்து செய்ய வலியுறுத்தியும், வன்கொடுமை தடுப்புச் சட்டத்தை நீர்த்துப் போகச் செய்யாதே என்பதை வலியுறுத்தியும் கண்டனப் பொதுக்கூட்டம் மே பதினேழு இயக்கத்தினால் வடசென்னை திருவொற்றியூரில் 14-8-2018 சனி அன்று நடத்தப்பட்டது.
மோடிக்கு எதிராக கருப்புக்கொடி போராட்டம் (12-4-2018)
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மறுக்கும் இந்திய ஒன்றியத்தின் பிரதமர் மோடியின் தமிழக வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழக வாழ்வுரிமை கூட்டமைப்பின் சார்ப்பில் தமிழக வாழ்வுரிமை கட்சியின் தலைவர் வேல்முருகன் தலைமையில் பல்வேறு கட்சிகள் மற்றும் இயக்கங்கள் கலந்துகொண்ட கருப்புக்கொடி காட்டும் போராட்டம் இன்று ( 12.04.18) வியாழக்கிழமை காலை 8மணிக்கு சென்னை ஆலந்தூர் மெட்ரோ இரயில் நிலையம் அருகில் நடைபெற்றது.
காவிரி உரிமை போராட்டத்தை மடைமாற்றும் IPL எதிர்த்து போராட்டம் (10-4-18)
காவிரி உரிமை போராட்டங்களை மடை மாற்றும் IPL கிரிக்கெட் போட்டியை எதிர்த்து பெருந்திரள் ஒன்றுகூடல் 10-4-2018, மே 17 இயக்கம் சார்பாக சென்னை அண்ணாசாலையில் நடைபெற்றது.
தாம்பரத்தில் காவிரி உரிமை மீட்க எழுச்சிப் பொதுக்கூட்டம் 07-4-18
காவிரியில் தமிழ்நாட்டின் உரிமையான 378 டி.எம்.சி என்பது 192 ஆக குறைக்கப்பட்டு, அது தற்போது 177.25 டி.எம்.சியாக உச்சநீதிமன்றத்தினால் குறைக்கப்பட்டிருப்பது அநீதி என்பதை முன்னிறுத்தியும், 378 டி.எம்.சியே எங்கள் கோரிக்கை என்பதை வலியுறுத்தியும், காவிரி மேலாண்மை வாரியம் உடனடியாக அமைத்திட வலியுறுத்தியும் எழுச்சிப் பொதுக்கூட்டம் தாம்பரத்தில் மே பதினேழு இயக்கத்தினால் 07-04-2018 சனிக்கிழமை மாலை நடத்தப்ப்பட்டது.
காவிரி உரிமை மீட்க தஞ்சாவூரில் ஆர்ப்பாட்டம் 06-4-2018
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காததைக் கண்டித்தும், 177.25 டி.எம்.சியாக தமிழ்நாட்டின் தண்ணீர் குறைக்கப்பட்டது அநீதி என்பதை முன்னிறுத்தியும் கண்டன ஆர்ப்பாட்டம் தஞ்சாவூரில் மே பதினேழு இயக்கத்தினால் 06-4-2018 அன்று நடத்தப்பட்டது.
காவிரி உரிமைக்காக கரூரில் ஆர்ப்பாட்டம் 04-4-2018
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காமலும், தமிழனின் தண்ணீரை தடுத்தும் துரோகம் இழைக்கும் இந்திய அரசினைக் கண்டித்து மே பதினேழு இயக்கம் சார்பில் கரூரில் கண்டன ஆர்ப்பாட்டம் 04-04-2018 புதன் அன்று நடைபெற்றது
காவிரி உரிமை – மதுரை ஒன்று கூடல் (3-4-2018)
காவிரி உரிமை மீட்கவும், தமிழ்நாட்டின் உரிமையான 370 டி.எ,.சியினை வலியுறுத்தியும், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தியும் கண்டன ஒன்று கூடல் மதுரையில் நடைபெற்றது.
காவிரி உரிமை – இந்திய அரசின் சாஸ்திரி பவன் முற்றுகை (2-4-2018)
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மறுக்கும் இந்திய அரசின் அலுவலகமான சாஸ்திரி பவன் இன்று மே பதினேழு இயக்கத்தினால் முற்றுகையிடப்பட்டது.
புதுச்சேரியில் காவிரி உரிமை மீட்பு பொதுக்கூட்டம் 18-3-18
காவிரி பங்கீடு குறித்தான தீர்ப்பில் தமிழ்நாட்டின் பங்கீட்டு அளவு 192 டி.எம்.சி-லிருந்து 177.25 டி.எம்.சி ஆக குறைக்கப்பட்டதைக் கண்டித்தும், காவிரி மேலாண்மை வாரியம் உடனடியாக அமைத்திட வலியுறுத்தியும், தமிழர் நிலத்தினை பாலைவனமாக்க ஹைட்ரோகார்பன், மீத்தேன் திட்டங்களுக்கு அனுமதி அளிக்கப்படுவதை எதிர்த்தும் “காவிரி உரிமை மீட்பு பொதுக்கூட்டம்” புதுச்சேரியில் மே பதினேழு இயக்கத்தினால் 18-3-2018 ஞாயிறு அன்று மாலை நடத்தப்பட்டது.
சிலை உடைப்புகள்-மதுரை பாஜக அலுவலகம் முற்றுகை (7-3-2018)
பெரியார், அம்பேத்கர், லெனின் சிலைகளை உடைத்ததைக் கண்டித்தும், கலவரங்களை தூண்டும் சமூக விரோதி எச்.ராஜா வினைக் கைது செய்ய வலியுறுத்தியும் மதுரையில் மே பதினேழு இயக்கத் தோழர்கள் பாஜக அலுவலகத்தினை 07-3-2018 அன்று முற்றுகையிட்டனர். எச்.ராஜாவின் படங்கள் எரிக்கப்பட்டது. தந்தை பெரியார் சமூக நீதி, சாதி ஒழிப்பு, பெண் விடுதலை, பகுத்தறிவின் அடையாளம். தமிழர்களின் தந்தையான பெரியார் சிலை மீது இனியும் கைவைத்தால், பாஜக-ஆர்.எஸ்.எஸ் கும்பல் தமிழ்நாட்டிலிருந்து விரட்டியடிக்கப்படும் என்று தோழர்கள் முழுக்கமிட்டனர்.
பெரியார் சிலையை உடைப்பைக் கண்டித்தும், (7-3-2018) எச்,ராஜாவை கைது செய்யக்கோரியும் சென்னை தி.நகரில் உள்ள பெரியார் சிலை முன்பு மே பதினேழு இயக்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
சிரியா இனப்படுகொலையை தடுத்து நிறுத்த வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் (4-3-2018)
சிரியா மக்களின் மீதான இனப்படுகொலையினை தடுத்த நிறுத்த வலியுறுத்தியும், அமெரிக்க, இரசிய அரசுகளை சிரியாவிலிருந்து வெளியேற்ற வலியுறுத்தியும், தெற்காசியா பிராந்தியத்திலிருந்தும், மேற்காசியா பிராந்தியத்திலிருந்தும் ஏகாதிபத்தியங்களை வெளியேற்ற வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தியும், சிரியாவின் மீதான இனப்படுகொலை தமிழ்நாட்டிற்கு விடப்பட்ட எச்சரிக்கை என்பதை விளக்கும் வகையிலும் கண்டன ஆர்ப்பாட்டம் மே பதினேழு இயக்கம் சார்பில் சென்னை பல்லாவரத்தில் 4-3-2018 அன்று நடத்தப்பட்டது
வெல்லும் தமிழீழம் – தமிழீழ விடுதலைக்கான எழுச்சி மாநாடு பிப்ரவரி 18, 2018 அன்று மே பதினேழு இயக்கத்தினால் சென்னையில் நடத்தப்பட்டது. பல்வேறு கட்சிகள் மற்றும் அமைப்புகளின் பிரதிநிதிகளும், படைப்பாளிகளும், மலேசியா பினாங்கு மாகாண துணை முதல்வர் பேரா.ராமசாமி, மணிப்பூர் தேசிய இனத்தைச் சேர்ந்த மாணவர் பிரதிநிதிகளும், தமிழ்நாடு அல்லாத பிற மாநில எழுத்தாளர்களும் பங்கேற்றனர். மாநாடு நான்கு அமர்வுகளாக நடைபெற்றது. முதல் அமர்வு: தெற்காசியா பிராந்தியத்தில் இந்தியாவின் விரிவாதிக்கக் கொள்கையும், தமிழீழ விடுதலையின் முக்கியத்துவமும். இரண்டாம் அமர்வு: முற்போக்கு சனநாயக அரசியலை வென்றெடுத்த தமிழீழ அரசியல் சாசனம். மூன்றாம் அமர்வு : தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் சமூகநீதியும், தமிழ்நாட்டின் எதிர்வினையும். மாலை அமர்வு : தமிழீழ விடுதலைக்கான அரசியல் நகர்வுகளும், நம் உடனடி கடமைகளும்
”வெல்லும் தமிழீழம்” தமிழீழ விடுதலைக்கான எழுச்சி மாநாடு பற்றி விளக்கும் பத்திரிக்கையாளர் சந்திப்பு 10-2-2018
”வெல்லும் தமிழீழம்” தமிழீழ விடுதலைக்கான எழுச்சி மாநாடு பற்றி விளக்கும் பத்திரிக்கையாளர் சந்திப்பு 10-2-2018 காலை சென்னை பத்திரிக்கையாளர் மன்றத்தில் மே பதினேழு இயக்கத்தினால் நடத்தப்பட்டது.
நிமிர் பதிப்பகத்தின் சார்பில் 2018 ம் ஆண்டில் ஐந்து புத்தகங்கள் வெளியிடப்பட்டன.
பேருந்து கட்டண உயர்வைக் கண்டித்து சென்னையில் ஆர்ப்பாட்டம் (3-2-2018)
பேருந்து கட்டண உயர்வைக் கண்டித்தும், உடனடியாக அதனை திரும்பப் பெற வலியுறுத்தியும் சென்னை வள்ளுவர் கோட்டத்தில் 3-2-2018 மாலை 4 மணியளவில் மே பதினேழு இயக்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
நாசக்கார நியூட்ரினோ திட்டத்தினை எதிர்த்து நியூட்ரினோ எதிர்ப்பு இயக்கம் சார்பில் 31-1-2018 புதன் அன்று தேனி மாவட்டம் முழுதும் ஒரு நாள் பிரச்சாரம் பிரச்சாரப் பயணம் மேற்கொள்ளப்பட்டது. இந்த பிரச்சாரப் பயணத்தில் நியூட்ரினோ எதிர்ப்பு இயக்கத்தின் தலைவரும், மதிமுக பொதுச்செயலாளருமான திரு.வைகோ, தற்சார்பு விவசாயிகள் சங்கத்தின் தோழர் கி.வே.பொன்னையன், மே பதினேழு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி, பூவுலகின் நண்பர்கள் இயக்கத்தின் தோழர் சுந்தர்ராஜன், பேரழிப்பிற்கு எதிரான இயக்கத்தின் தோழர் லெனின் மேலும் பலர் பங்கேற்றனர்.
பேருந்து கட்டண உயர்வு – கரூர் ஆர்ப்பாட்டம் – 28-1-2018
பேருந்து கட்டண உயர்வைக் கண்டித்தும், உடனடியாக அதனை திரும்பப் பெற வலியுறுத்தியும் கரூரில் பேருந்து நிலையம் அருகில் 28-1-2018 ஞாயிறு அன்று காலை மே பதினேழு இயக்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
மொழிப்போர் ஈகியர் மற்றும் மாவீரன் முத்துக்குமார் வீரவணக்கப் பொதுக்கூட்டம் மதுரை அவனியாபுரம் 27-1-2018
மொழிப்போர் ஈகியர் மற்றும் மாவீரன் முத்துக்குமார் வீரவணக்கப் பொதுக்கூட்டம் மதுரை அவனியாபுரத்தில் 27-1-2018 சனி அன்று மாலை மே பதினேழு இயக்கத்தினால் நடத்தப்பட்டது.