தமிழ்நாட்டின் 7 மாவட்டங்களின் பகுதிகள் கஜா புயலினால் மீள முடியாத இழப்பினை சந்தித்திருக்கின்றன. 20 முதல் 30 ஆண்டுகள் வரை விவசாயிகளின் வாழ்வாதாரம் பின்னோக்கி தள்ளப்பட்டிருக்கிறது. இந்த நேரத்தில் நாம் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மேற்கொள்கிற நிவாரணப் பணி என்பது ஆபத்திலிருப்பவருக்கு உடனடியாக கை கொடுத்து தூக்கி விடுவதைப் போன்றதே.
ஆனால் ஒரு பெரும் துயரம் இந்த மண்ணில் நிகழாமல் தவிர்த்திட வேண்டும் என்றால் இந்த புயல் பாதிப்பு உடனடியாக தேசியப் பேரிடராக அறிவித்து இழப்பீடு அளிக்கும் பணிகள் துரிதமாக்கப்பட வேண்டும்.
நம்முடைய நெற்களஞ்சியத்தில் நம் விவசாயிகள் தற்கொலைக்கு தள்ளப்படும் முடிவினை நாம் வேடிக்கை பார்க்க முடியாது.
அதனால் பின்வரும் மிக முக்கியமான உடனே செய்யப்பட வேண்டிய கோரிக்கைகளை மத்திய, மாநில அரசுகளுக்கு மே பதினேழு இயக்கத்தின் சார்பாக முன்வைக்கிறோம். இந்த கோரிக்கைகளை பகிர்ந்து, இவற்றை விவாதப் பொருளாக்கி முன்னெடுத்துச் செல்ல வேண்டுமென அனைத்து தோழர்களையும் கேட்டுக் கொள்கிறோம்.
இந்திய அரசே! தமிழக அரசே!
1. டெல்டா மக்களின் விவசாயக் கடன்கள், கூட்டுறவுக் கடன்களை உடனடியாக தள்ளுபடி செய்!
2. தேசிய வங்கிகள் மூலமாக வட்டியில்லா தொழில் கடன், விவசாயக் கடன், கல்விக் கடனை வழங்கிடு!
3. சாய்ந்த தென்னை மரங்கள், மாமரங்கள், அனைத்து இயற்கை கழிவுகளையும் அரசே அகற்றிடு!
4. டெல்டா மாணவர்களின் இந்த ஆண்டிற்கான கல்விக் கட்டணத்தை அரசே பொறுப்பேற்றிடு!
5. பல்வேறு சுய உதவிக் குழுக்களில் மக்கள் பெற்ற கடனுக்கு அரசே பொறுப்பேற்றிடு!
6. விவசாயக் கூலிகளுக்கு அடுத்த 6 மாதத்திற்கான குடும்ப செலவுகள், உணவு தானியங்களை வழங்கிடு!
7. விவசாயிகள் மறு உற்பத்தி செய்வதற்கான நீண்ட கால கடனை NABARD வங்கி மூலம் வழங்கிடு!
8. பாதிக்கப்பட்ட மீனவர்களின் படகுகளுக்கான சேதாரத்தினை அரசே ஏற்றிடு!
– மே பதினேழு இயக்கம்
9884072010