ஐயா பழ.நெடுமாறன் அவர்களின் “தமிழீழம் சிவக்கிறது” புத்தகத்தை அழிக்க வேண்டும் என்ற உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பு தொடர்பாக அவரை மே பதினேழு இயக்க ஒருங்கிணைப்பாளர்கள் திருமுருகன் காந்தி மற்றும் லெனாகுமார் ஆகியோர் இன்று சந்தித்தனர்.
அப்போது பழ.நெடுமாறன் அவர்கள் பேசிய போது, இந்தியாவிலேயே வரலாற்றில் முதல்முறையாக ஒரு புத்தகத்தை அழிக்க வேண்டும் என்று தீர்ப்பளித்திருக்கிறார்கள் என்றால் அது “தமிழீழம் சிவக்கிறது” புத்தகத்திற்குதான் என்று தெரிவித்தார்.
அப்போது அவரிடம் பேசிய மே பதினேழு இயக்கத் தோழர்கள்,பிரிட்டிஷ் காலத்தில் கூட புத்தகங்கள் தடை செய்யப்பட்டனவே தவிர, புத்தகங்களை அழிக்க வேண்டும் என உத்தரவிட்டதில்லை. புத்தகங்களை அழிப்பது என்பது ஹிட்லரின் நாஜி ஆட்சியில் தான் நடந்தது. இது மிக மோசமான அடக்குமுறை. கண்டத்திற்கு உரியது. கருத்துரிமை மிக மோசமான அழிப்புக்கு உள்ளாவதை அனுமதிக்க முடியாது. இது குறித்து சட்ட ரீதியாக என்னென்ன வேலைகள் செய்யலாம் என்ற ஆலோசனைகளை மேற்கொள்ள வேண்டும் என்று தெரிவித்தனர்.