50 நாட்களில் திருமுருகன் காந்தி மீதான அனைத்து வழக்குகளுக்கும் பிணை பெற்ற வழக்கறிஞர் குழுவின் அர்ப்பணிப்பு!

- in பரப்புரை

50 நாட்களில் திருமுருகன் காந்தி மீதான அனைத்து வழக்குகளுக்கும் பிணை பெற்ற வழக்கறிஞர் குழுவின் அர்ப்பணிப்பு!

திருமுருகன் காந்தி கைது செய்யப்பட்ட முதல் நாளான ஆகஸ்ட் 9 முதல் இன்று வரையிலும் வழக்கறிஞர் குழு தொடர்ச்சியாக ஓய்வில்லாமல் உழைத்துள்ளது.

ஆகஸ்ட் 9ம் தேதி இரவு பெங்களூரில் நீதிபதி முன்பு ஆஜரான போது பெங்களூரைச் சேர்ந்த வழக்கறிஞர் தோழர் ஒருவர் ஆஜரானார். மேலும் மக்கள் கண்காணிப்பகத்தின் தோழர் மனோகர் போன்றோரும் உறுதுணையாக இருந்தனர். பின்னர் பெங்களூரில் இருந்து அழைத்து வரப்பட்டு, ஆகஸ்ட் 10 அன்று காலை சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். ஐ.நாவில் தூத்துக்குடி படுகொலை குறித்து திருமுருகன் காந்தி பேசியதை சமூக வளைதளங்களில் பரப்பியதாகவும், இதனால் மக்களை போராடத்தூண்டியதாகவும் போடப்பட்ட வழக்கு அது. அந்த வழக்கில் திருமுருகன் காந்தியை சிறைக்கு அனுப்ப முடியாது என உடனடியாக நீதிபதி மறுத்து விட்டார்.

அடுத்ததாக, ராயப்பேட்டை பெரியார் சிலைக்கு 2017 செப்டம்பரில் மாலை போட்டதற்கு தேசத்துரோக வழக்கு பதிவு செய்யப்பட்டு மீண்டும் கைது செய்யப்பட்டார். புழல் சிறையிலிருந்து வேலூர் சிறைக்கு மாற்றப்பட்டு, சிறையின் முதல் 16 நாட்களில் 17 வழக்குகள் போடப்பட்டன. ஏற்கனவே போடப்பட்டிருந்து 13 உட்பட 30 வழக்குகள் அவர் மீது போடப்பட்டன. அதில் 4 தேசத்துரோக வழக்குகள். ஒரு ஊபா (UAPA)வழக்கு.

ஆகஸ்ட் 16 அன்று ஒக்கிபுயலில் மரணத்திற்கு தள்ளப்பட்ட மீனவர்களின் போராட்டத்தில் கலந்து கொண்டதாக போடப்பட்ட இரண்டு வழக்குகளுக்காக முதலில் இரணியல் நீதிமன்றத்திற்கும், பின்னர் குழித்துறை நீதிமன்றத்திற்கும் அழைத்துச் செல்லப்பட்டார். இரணியல் மற்றும் குழித்துறையில் அந்த பகுதிகளைச் சேர்ந்த வழக்கறிஞர்கள் தாமாகவே முன்வந்து திருமுருகன் காந்திக்கு ஆஜரானார்கள். இரணியலில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வழக்கறிஞர் புஷ்பதாஸ் அவர்கள் ஆஜரானார். குழித்துறையில் வழக்கறிஞர் சுரேஷ்குமார் அவர்கள் ஆஜரானார். இரண்டு வழக்குகளிலும் நீதிமன்றம் உடனடியாக பிணை வழங்கி உத்தரவிட்டது. இரணியலில் பிணையை உறுதி செய்ய ஜாமீன்தாரர்களை நிறுத்த முயன்ற போது, அந்த பகுதி மக்கள் தாமாகவே முன்வந்து, ”இது எங்களுக்காக போராடியதற்காக அவர் மீது போடப்பட்ட வழக்கு, இதற்கு நாங்களே ஜாமீன்தாரராக ஆஜராகிறோம்” என்று வந்தார்கள். குழித்துறையில் திராவிடர் விடுதலைக் கழகத்தினைச் சேர்ந்த தோழர்கள் ஜாமீன்தாரர்களாக வந்தார்கள்.

தி.நகர் முத்துரங்கன் சாலையில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் அரசைக் கண்டித்து பேசியதாக, ஆகஸ்ட் 20ம் தேதி சிறைக்குள்ளேயே மீண்டும் கைது செய்தனர். அந்த வழக்கிற்கு ஆகஸ்ட் 27ம் தேதி பிணை பெறப்பட்டது.

தூத்துக்குடி ஸ்டெர்லைட் போராட்டத்தில் மார்ச் மாதத்தில் பங்கேற்றதாக போடப்பட்ட வழக்கில் ஆகஸ்ட் 18 அன்று கைது செய்யப்பட்டு, ஆகஸ்ட் 28 அன்று தூத்துக்குடி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். ஸ்டெர்லைட் போராட்டக்குழுவினர் மீது போடப்பட்ட வழக்குகளை நடத்திய வழக்கறிஞர் அதிசயகுமார் அவர்கள் திருமுருகன் காந்திக்காக ஆஜரானார். அந்த வழக்கில் நீதிமன்றத்தில் உடனடியாக அப்போதே பிணை பெறப்பட்டது.

தாம்பரத்தில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா நடத்திய கூட்டத்தில் பேசியதற்காக போடப்பட்ட வழக்கில் தாம்பரம் நீதிமன்றத்தில் வழக்கறிஞர் முஜிபுர் ரஹ்மான் ஆஜரானார். இந்த வழக்கில் செப்டம்பர் 5 அன்று பிணை பெறப்பட்டது.

ராயப்பேட்டை பெரியார் சிலைக்கு மாலை போட்டதற்காக போடப்பட்ட தேசத்துரோக வழக்கிற்கு(பிரிவு 124-A), ஆகஸ்ட் 31 அன்று நீதிமன்றத்தில் பிணை பெறப்பட்டது. இந்த வழக்கில்தான் திருமுருகன் ஆகஸ்ட் 10ம் தேதி முதன்முதலில் ரிமாண்ட் செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். இந்த வழக்கில் சீனியர் கவுன்சில் வழக்கறிஞர் என்.ஆர்.இளங்கோவன் ஆஜராகி வாதிட்டு நீதிமன்றத்தில் பிணை பெறப்பட்டது.

பாஜகவை எதிர்த்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதாக நுங்கம்பாக்கம் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டு, அந்த வழக்கில் ஆகஸ்ட் 30 அன்று கைது செய்யப்பட்டு, செப்டம்பர் 9 அன்று நீதிமன்றத்தில் பிணை பெறப்பட்டது.

ரேசன் கடைகளை மூடும் WTO ஒப்பந்தத்தில் இந்திய அரசு கையெழுத்திட்டதை எதிர்த்து சென்னை எம்.ஜி.ஆர் நகரில் நடத்தப்பட்ட பொதுக்கூட்டத்தில் பேசியதற்கு வழக்கு பதியப்பட்டு, ஆகஸ்ட் 14 அன்று சிறைக்குள்ளேயே கைது செய்யப்பட்டார். அந்த வழக்கிற்கு செப்டம்பர் 6ம் தேதி பிணை பெறப்பட்டது.

சீர்காழியில் அம்பேத்கர் பிறந்த நாள் கூட்டத்தில் பேசியதற்காக பதியப்பட்ட வழக்கில், ஆகஸ்ட் 18 அன்று கைது செய்யப்பட்டு, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த ஆகஸ்ட் 23 அன்று சீர்காழி அழைத்துச் செல்லப்பட்டார். அன்று சீர்காழி மாஜிஸ்திரேட் விடுமுறை என்பதால் பின்னர் மயிலாடுதுறை நீதிமன்றத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டார். மயிலாடுதுறையில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் வழக்கறிஞர் வேலு அவர்கள் ஆஜரானார். செப்டம்பர் 6 ம் தேதி மீண்டும் சீர்காழி நீதிமன்றத்திற்கு அழைத்து வந்த போது பிணை வழங்கப்பட்டது. சீர்காழியில் வழக்கறிஞர் அப்துல்ஷா அவர்கள் ஆஜரானார்கள். சீர்காழி மற்றும் மயிலாடுதுறையில் நடைபெற்ற வழக்கிற்கு தந்தை பெரியார் திராவிடர் கழகத்தின் தோழர்கள் பெரியார் செல்வம் மற்றும் தோழர்கள் துணையாக நின்றானார்கள். ஜாமீன்தாரர்களாக தபெதிக தோழர்கள் ஆஜரானார்கள்.

2017ம் ஆண்டு குண்டர் சட்டத்திலிருந்து வெளியே வரும்போது, புழல் சிறைக்கு வெளியே உள்ள அம்பேத்கர் சிலைக்கும், பெரியார் சிலைக்கும் மாலை அணிவித்ததற்காக தற்போது இரண்டு தேசத்துரோக வழக்குகள் போடப்பட்டன. அவற்றில் ஆகஸ்ட் 20 அன்று கைது செய்யப்பட்டார். இரு தேசத்துரோக வழக்குகளுக்கும், செப்டம்பர் 11ம் தேதி திருவொற்றியூர் நீதிமன்றத்தில் பிணை பெறப்பட்டது.

பாலஸ்தீன் குறித்த ஆர்ப்பாட்டத்தில் பாலஸ்தீன் மற்றும் தமிழீழ விடுதலை குறித்து பேசியதாக UAPA எனும் ஊபா சட்டத்தின் பிரிவு 13(1)(b)-ன் கீழ் திருமுருகன் காந்தி அவர்களின் மீது வழக்கு பதியப்பட்டு கைது செய்வதற்காக ஆகஸ்ட் 31 அன்று எழும்பூர் நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்டார். ஆனால் நீதிபதி, ஊபா வழக்கில் சிறையில் அடைக்க மறுத்துவிட்டார். இரண்டு முறை நீதிபதி மறுத்தும் அரசு தரப்பில் கால அவகாசம் கேட்கப்பட்டது. இறுதியில் செப்டம்பர் 17 அன்று ஆணையை வெளியிட்ட நீதிபதி திருமுருகன் காந்தி மீது போடப்பட்ட ஊபா வழக்கு செல்லாது என உத்தரவிட்டு கைது செய்ய மறுத்துவிட்டார். அந்த வழக்கில் ஊபாவை நீக்கி விட்டு IPC பிரிவான 505(1)(b)-ல் மட்டும் கைது செய்தனர். அதற்கான பிணை செப்டம்பர் 28 வெள்ளி அன்று பெறப்பட்டது.

தூத்துக்குடி படுகொலை நடந்த பிறகு, அந்த படுகொலைக்கு சர்வதேச அளவில் நீதி கேட்போம் என்று பேசி ஒரு காணொளியினை முகநூலில் வெளியிட்டதாக மற்றொரு தேசத்துரோக வழக்கு(124-A) பதியப்பட்டு ஆகஸ்ட் 21 அன்று கைது செய்யப்பட்டார். செங்கல்பட்டு மாவட்ட குற்றவியல் நீதிமன்றத்தில் இந்த வழக்கு பல முறை ஒத்திவைக்கப்பட்டுக் கொண்டே இருந்தது. இறுதியாக அந்த வழக்கிற்கான பிணை செப்டம்பர் 27 அன்று பெறப்பட்டது. ஆலந்தூர் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில், அக்டோபர் 1 திங்கள் அன்று ஜாமீன்தாரர்கள் நிறுத்தப்பட்டார்கள். இதுவே திருமுருகன் காந்தி மீது போடப்பட்ட வழக்குகளின் இறுதி பிணையாகும். இதனைத் தவிர்த்த அனைத்து வழக்குகளுக்கும் இதற்கு முன்பே பிணை பெறப்பட்டுவிட்டது. இந்த ஆணை அக்டோபர் 2, செவ்வாய்கிழமை காலையில் வேலூரில் உள்ள சிறைத்துறை அதிகாரிகளை அடைந்தது.

திருமுருகன் காந்தி மீதான அனைத்து வழக்குகளுக்கும் பிணை பெறப்பட்டுவிட்ட நிலையில் அவர் மீது 3 பி.டி. வாரண்ட்கள் மட்டும் நிலுவையில் இருந்தன. அதனால் திருமுருகன் காந்தி அவர்களின் விடுதலையினைப் பற்றி உறுதியாக அறிவிக்க முடியாத நிலை செவ்வாய் காலையில் இருந்தது.

பின்னர் நம் தரப்பு வழக்கறிஞர்கள் உயர்நீதிமன்ற தீர்ப்புகளை சுட்டிக் காட்டி, பி.டி. வாரண்ட்கள் அடிப்படையில் ஒருவரை சிறையில் வைத்திருக்க முடியாது என்றும், அது சட்டவிரோதம் என்றும் சிறைத்துறை அதிகாரிகளிடம் வாதிட்டனர். சிறைத்துறை அதிகாரிகளும் அரசு தரப்பு வழக்கறிஞர்களிடம் விவாதித்தனர். பின்னர் மதியம் 12 மணிக்கு மேலாகத் தான் திருமுருகன் காந்தி அவர்களின் விடுதலை உறுதி செய்யப்பட்டது.

திருமுருகன் காந்தி அவர்களின் மீதான அனைத்து வழக்குகளுக்கும் பிணை பெறுவதற்காகவும், UAPA வழக்கினை உடைப்பதற்காகவும் உறுதுணையாக இருந்த சீனியர் கவுன்சில் வழக்கறிஞர் என்.ஆர்.இளங்கோவன் அவர்களுக்கு மே பதினேழு இயக்கம் தனது நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறது.
சென்னையிலிருந்து இயங்கிய வழக்கறிஞர் குழு ஒரு நாளும் ஓய்வின்றி 55 நாட்களும் உழைத்திருக்கிறது. குறிப்பாக வழக்கறிஞர் பெரியசாமி, வழக்கறிஞர் ராஜ்திலக், வழக்கறிஞர் பிரபு ஆகியோரது உழைப்பிற்கும் மே பதினேழு இயக்கம் தனது பாராட்டுக்களையும், நன்றிகளையும் தெரிவித்துக் கொள்கிறது.

வேலூரில் வழக்கறிஞர் அருண், தோழர் பாலா, தோழர் செந்தமிழ் ஆகியோர் இந்த வழக்கிற்காக கடுமையாக உழைத்துள்ளனர். தங்கள் சொந்த வேலை சுமைகளுக்கு மத்தியில், தோழர் திருமுருகன் காந்தியை சந்திப்பது, சிறையில் அதிகாரிகளிடம் அவருக்காக வாதிடுவது, மருத்துவமனையில் அனுமதிப்பதற்காக காவல் அதிகாரிகளுடன் வாதத்தில் ஈடுபடுவது என்று தொடர்ச்சியாக பல்வேறு பணிகளை இவர்கள் செய்திருக்கிறார்கள். தோழர்களுடைய அளப்பரிய பணிக்கும் மே பதினேழு இயக்கம் தனது நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறது.

– மே பதினேழு இயக்கம்
9884072010

Leave a Reply