தோழர் முகிலனை சிறையில் கொடுமைப்படுத்தும் அடிமை அதிமுக அரசை மே 17 இயக்கம் வன்மையாக கண்டிக்கிறது

காவிரி ஆறு பாதுகாப்பு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் தோழர் முகிலன் தமிழகத்தில் மத்திய, மாநில அரசுகள் திணிக்கும் அழிவு திட்டங்களை அனைத்தையும் மக்களோடு சேர்ந்து தொடர்ந்து எதிர்த்து போராடி வருபவர். குறிப்பாக காவிரி ஆற்றில் சட்டவிரோதமாக மணலை அள்ளி விற்பதை எதிர்த்து உள்ளூர் மக்களோடு சேர்ந்து போராடி சட்டவிரோதமான பல்வேறு மணல் குவாரிகளை மூடியவர்.

இப்படி தமிழக வாழ்வாதார மீட்புக்காக தொடர்ச்சியாக மக்களோடு மக்களாக களத்தில் இருந்தவரை கடந்த 18.09.17 அன்று தூத்துக்குடியில் நிலத்தடி நீர் திருடுவதற்கு எதிராக தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் குடியேறும் போராட்டத்தில் பங்கேற்ற போது எந்த காரணமும் சொல்லப்படாமல் சீருடை அணியாத காவல் துறையினரால் அத்துமீறி கடத்தப்பட்டு பின்பு கூடங்குளம் அணுவுலை போராட்டத்தின் போது போடப்பட்ட வழக்கை காரணமாக கைது செய்து பாளையங்கோட்டை சிறையில் அடைத்தது.

சிறைக்குள் இருந்துகொண்டு தொடர்ச்சியாக தமிழகத்தில் நடக்கும் பல்வேறு அடக்குமுறைக்கு எதிராக உண்ணாவிரதம் போன்ற போராட்டத்தை நடத்திக்கொண்டிருந்தார். தமிழகம் முழுவதும் போராட்டக்காரர்களை ஒடுக்கும் வேலையை மத்திய பிஜேபி அரசின் தூண்டுதலில் செய்து கொண்டிருக்கும் தமிழக அதிமுக அரசு. தோழர் முகிலன் மீதும் 21.06..18 அன்று அரவங்குறிச்சியில் 2017இல் பேசியதற்காக ஒரு வருடம் கழித்து தற்போது ஒரு வழக்கை பதிவு செய்திருப்பதற்கான சம்மனை கொடுத்திருக்கிறார்கள். இதுபோக ஏராளமான வழக்குகளை தோழர் முகிலன் மீது போட்டுக்கொண்டே இருக்கிறது தமிழக அரசு. இதை எல்லாவற்றையும் சட்டப்படி சந்திக்கும் உறுதியுடன் தோழர் முகிலன் இருப்பதால் அவரை துன்புறுத்த பாளையங்கோட்டை சிறையிலிருந்து மதுரை சிறைக்கு இரவோடு இரவாக மாற்றியிருக்கிறார்கள்.

தற்போது தோழர் அடைக்கப்பட்டிருக்கும் மதுரை சிறையில் உள்ள செல்[அறை] என்பது கடந்த மூன்று வருடங்களாக யாருமே அடைக்கப்படாத பாழடைந்த செல். மதுரை சிறையின் மலக்குழிக்கு [செப்டிக் டாங்க்] அருகில் இருக்கும் ,கொசுக்கள் அதிகளவில் மொய்க்கும் கொட்டடியில் அவரை அடைத்து வைத்து துன்புறுத்துகிறது தமிழக அரசு. இந்த துன்புறுத்தல் நடவடிக்கை என்பது தோழர் முகிலனை கொலை செய்ய எடுக்கும் ஒரு செயலாகவே பார்க்க வேண்டியிருக்கிறது. அப்படி ஒன்று நடக்குமென்றால் இதற்கு முழு பொறுப்பும் ஓ.பி.எஸ் மற்றும் இ.பி,எஸ் ஆகிய இருவரையுமே சாரும். ஏனென்றால் தமிகத்தில் மணல் குவாரிகள் பலவற்றை நேரடியாகவும் மறைமுகமாகவும் நடத்துபவர்கள் இவர்களே. ஆகவே தோழர் முகிலனின் மணல் குவாரிக்களுக்கு எதிரான நடவடிக்கையில் நேரடியாக பாதிக்கப்படுபவர்களும் இவர்களே. அதனால் தான் தேனியில் வைத்து ஓ.பி.எஸ் ஆட்கள் தோழர் முகிலனை 08.05.16 அன்று தாக்கினார்கள். எனவே தோழர் முகிலன் மீதான இந்த துன்புறுத்தல் என்பது தமிழக அரசின் திட்டமிட்ட நடவடிக்கையே. அதனை உடனடியாக தமிழக அரசு நிறுத்த வேன்டுமென்று மே பதினேழு இயக்கம் கேட்டுக்கொள்கிறது.

தமிழக மக்களின் நலனுக்காகவும் தமிழக வாழ்வாதாரத்திற்காகவும் தொடர்ச்சியாக போராடும் தோழர் முகிலன் போன்ற போராளிகள் தனிமனிதர்கள் இல்லை அவர்கள் பின்னால் தமிழர்கள் அனைவரும் இருக்கிறார்கள் என்று அரசுக்கு உணர்த்த தோழர் முகிலனை விடுதலை செய்யக்கோரி நாம் அனைவரும் இதனை முகநூல் வழியாக பரப்பி முதற்கட்டமாக தமிழக மக்களுக்கு தெரியப்படுத்தவும்,தோழர் முகிலனுக்கு துணை நிற்கவும் கேட்டுக்கொள்கிறோம்.

மே 17இயக்கம்
9884072010

 

Leave a Reply