தூத்துக்குடி மக்களுக்காகவும், காவிரி உரிமைக்காகவும் போராடிய தமிழக வாழ்வுரிமைக் கட்சி தலைவர் வேல்முருகன் மீது பிரிவு 124-A தேசத்துரோக வழக்கு போடப்பட்டிருப்பதை மே பதினேழு இயக்கம் வன்மையாக கண்டிக்கிறது.
தமிழர்களின் உரிமைக்காக போராடினால் தேசத் துரோக குற்றமா? உச்சநீதிமன்ற உத்தரவுகளை எல்லாம் மீறி தமிழ்நாட்டிற்குதண்ணீரை தர மறுக்கிற கன்னட அரசு செய்தது தேசத் துரோக குற்றமா அல்லது உரிமைக்காக போராடிய வேல்முருகன் பேசியது தேசத் துரோக குற்றமா?
காவிரி உரிமைக்காக நெய்வேலி பழுப்பு நிலக்கரி தொழிற்சாலை முற்றுகைப் போராட்டத்தில் பேசிய பேச்சிற்காக வேல்முருகன் அவர்களின் மீது தேசத்துரோக வழக்கு போடப்பட்டிருக்கிறது.
தமிழ்நாட்டில் எந்த வாழ்வுரிமை சிக்கலாக இருந்தாலும் எப்போதும் அனைத்து அமைப்புகளையும் ஒன்றிணைத்து தோழர் வேல்முருகன் போராட்டத்தினை அறிவிப்பார். தமிழீழ விடுதலையாக இருந்தாலும் சரி, கதிராமங்கலத்தில் காவல்துறை நடத்திய தாக்குதலாக இருந்தாலும் சரி, ஜல்லிக்கட்டில் காவல்துறையினரின் அத்துமீறலை கண்டிப்பதாக இருந்தாலும் சரி, ஆந்திராவில் படுகொலை செய்யப்பட்ட 20 தமிழர்களுக்கு நீதி கேட்பதாக இருந்தாலும் சரி, காவிரி உரிமையாக இருந்தாலும் சரி, தூத்துக்குடி படுகொலையாக இருந்தாலும் சரி அனைத்து பிரச்சினைகளுக்கும் எல்லா அமைப்புகளையும் ஒன்று திரட்டி மிகப் பெரிய போராட்டங்களை நடத்திக் காட்டியவர் தோழர் வேல்முருகன். எல்லா பிரச்சினைகளிலும் வேல்முருகன் அவர்களின் குரல் சமரசமின்றி ஒலித்து வந்துள்ளது.
இவை அனைத்தும் ஆளும் அரசுகளுக்கு அச்சத்தைக் கொடுத்த காரணத்தினால் தான் தற்போது வேல்முருகன் அவர்கள் மீது இந்த தேசதுரோக வழக்கினை பாஜக அடியாளான எடப்பாடி அரசு ஏவியிருக்கிறது.
பாஜகவினரின் கருத்துப்படி மக்களுக்காக தமிழ்நாட்டில் போராடுபவர்கள் அனைவருமே தேச துரோகிகள் தான். அதனால் தான் குண்டர் சட்டம், தேச விரோத சட்டம் என போராட்டக்காரர்களை ஒடுக்க நினைக்கிறார்கள்.
இந்த நேரத்தில் தமிழ்நாட்டின் அனைத்து அரசியல் கட்சிகளும், ஜனநாயக சக்திகளும், மக்கள் இயக்கங்களும் ஒன்றிணைந்து வேல்முருகன் அவர்களை விடுதலை செய்ய வலியுறுத்தி குரல் கொடுக்க வேண்டும்.
பாஜக மற்றும் எடப்பாடி-பன்னீர்செல்வம் அரசின் பாசிச தமிழின விரோத நடவடிக்கையை மே பதினேழு இயக்கம் வன்மையாக கண்டிக்கிறது.
– மே பதினேழு இயக்கம்
9884072010