* தோழர் ஆரூண் ரஷீத், மன்சூர் அலிகான் மற்றும் தோழர்களுக்கு பிணை கிடைத்தது*
புழல் சிறையில் இருக்கும் மனிதநேய ஜனநாயகக் கட்சியின் மாநிலப் பொருளாளர் ஆருண் ரஷீத், நடிகர் மன்சூர் அலிகான் ஆகியோரை கடந்த வாரம் வெள்ளிக்கிழமை 20-4-2018 அன்று சிறைக்குள் நேரில் சென்று மே பதினேழு இயக்க ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி மற்றும் தோழர்கள் சந்தித்தோம். மனிதநேய ஜனநாயகக் கட்சியின் பொறுப்பாளர்களும் வந்திருந்தனர்.
மோடிக்கு கருப்புக் கொடி காட்டும் போராட்டத்தில் கைது செய்யப்பட்டிருந்த தோழர்களான மணியரசன், சீமான், தமிமுன் அன்சாரி மற்றும் இயக்குநர்கள் உள்ளிட்டோரை விடுதலை செய்ய வலியுறுத்தி போராடியதற்காகவும், பேசியதற்காகவும் இந்த தோழர்கள் தற்போது 13 நாட்களாக சிறையில் வைக்கப்பட்டுள்ளனர்.
இவர்களின் ஜாமின் மனுக்கள் தொடர்ச்சியாக தள்ளுபடி செய்யப்பட்டுக் கொண்டே இருக்கிறது. மன்சூர் அலிகான் மற்றும் ஆரூண் ரஷீத் ஆகியோர் வெளியில் வரக் கூடாது என்பதற்காக பாஜக-விலிருந்து கடும் அழுத்தம் வருவதாகவும், அரசு தரப்பிலிருந்து இவர்களுக்கு ஜாமீன் வழங்க எதிர்ப்பு தெரிவிக்கப்படுவதாகவும் தோழர்கள் தெரிவித்தனர்.
இரண்டு முறை நிராகரிக்கப்பட்ட அவர்களின் ஜாமீன் மனு மீண்டும் இன்று விசாரணைக்கு வந்தது. மன்சூர் அலிகான் போன்ற தோழர்கள் மோடி அரசுக்கு எதிராக வலிமையான எதிர்ப்பினை பல்வேறு மேடைகளிலும், தொலைக்காட்சி விவாதங்களிலும் பேசி வருவதற்காகவே அவர்களை இந்த அரசு முடக்க நினைக்கிறது. ஆரூண் ரஷீத் போன்ற தோழர்கள் நீண்ட காலமாக மக்களுக்காக போராடி வருபவர்கள். முழுமையாக மத்திய அரசின் கையாளாக தமிழக அரசு செயல்பட்டு வருகிறது. மருத்துவ அறுவை சிகிச்சை முடித்த கையோடு சிறையில் இருக்கும் போதிலும், இந்த சிறையெல்லாம் நம்மை என்ன செய்துவிடப் போகிறது என்று உறுதியோடு பேசினார் தோழர் மன்சூர் அலிகான். மனிதநேய ஜனநாயகக் கட்சியின் தோழர்களும் அதே உறுதித் தன்மையை வெளிப்படுத்தினர்.
தமிழ்நாட்டில் தொடர்ச்சியாக வன்முறையை உருவாக்கும் விதத்தில் பேசிவரும் பாரதிய ஜனதா கட்சியின் எச்.ராஜா, எஸ்.வி.சேகர் மற்றும் அவர்களின் நிர்வாகிகள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்காத தமிழக அரசு, மக்களுக்காக குரல் கொடுப்பவர்களை கைது செய்தும், அவர்கள் மீது வழக்குகள் போட்டும் அடக்குமுறைகளை செய்து வருகிறது.
தோழர்களுக்கு உறுதுணையாக நிற்க வேண்டியது நம் கடமையாக இருக்கிறது. தமிழக அரசே! ஆரூண் ரஷீத், மன்சூர் அலிகான் உள்ளிட்ட அனைவரின் மீதும் போடப்பட்ட வழக்குகளை திரும்பப் பெறு!
-மே பதினேழு இயக்கம்
9884072010