தமிழக இளைஞர்களே! காவிரி உரிமை கிடைக்கும் வரை IPL போட்டிகளை புறக்கணியுங்கள்!
பிரேசிலில் கால்பந்து உலகக் கோப்பை நடைபெற்ற போது, அதனை எதிர்த்து போராடிய சாதாரண ஏழை மக்கள், அதுவரையில் தங்களைக் கண்டுகொள்ளாத இந்த உலகத்தின் கவனத்தை தங்கள் பக்கம் திருப்பினர். உலகத்தின் பல்வேறு பகுதிகளில் இப்படிப்பட்ட புறக்கணிப்புகளும் போராட்டங்களும் நடைபெற்றிருக்கின்றன. புறக்கணிப்பு என்பது மறுக்கப்படும் நமது கருத்து சுதந்திரத்தை எளிமையான முறையில் வெளிப்படுத்தும் வலிமையான ஆயுதம். பல்வேறு கார்ப்பரேட் முதலாளிகளின் மிகப் பெரும் பணம் விளையாடுகின்ற, இது போன்ற கேளிக்கை நிகழ்வுகள் மக்களாகிய நம் பங்களிப்பு இல்லாமல் நடைபெற முடியாது. இந்திய அரசு என்பது கார்ப்பரேட் முதலாளிகளுக்காக இயங்குகிற ஒன்றாக இருக்கிறது. கார்ப்பரேட்டுகளின் அடிமடியில் கைவைப்பதன் மூலமே இந்திய அரசினை நாம் பணியச் செய்ய முடியும்.
காவிரி என்பது பல ஆயிரம் ஆண்டுகளாக தமிழர்களின் சொத்தாக இருக்கிறது. இந்தியா என்ற நாடு உருவாவதற்கு முன்பிருந்தே காவிரி நமக்கு உரிமைப்பட்ட சொத்தாகும். அந்த உரிமையினை இன்று இந்திய அரசு பறித்திருக்கிறது. இதனை எதிர்த்துத் தான் இன்று தமிழ்நாடு முழுவதும் விவசாயிகளும் மக்களும் கடுமையாக போராடிக் கொண்டிருக்கிறார்கள். கடந்த ஆண்டு மட்டும் காவிரி தண்ணீர் வராததாலும், வறட்சியினாலும் தமிழ்நாட்டில் கிட்டத்தட்ட 400 விவசாயிகளுக்கு மேல் மரணித்தார்கள். விவசாயிகள் நம் கண் முன்னே மரணிப்பதை நாம் அப்படியே பார்த்துக் கொண்டிருக்க முடியுமா என்ன?
நாம் நடத்துகிற அனைத்து போராட்டங்களையும் இந்தியாவின் தேசிய ஊடகங்கள் மறைக்கின்றன அல்லது திரித்து சொல்கின்றன. இந்தியாவின் பிற தேசிய இனங்களின் சாதாரண மக்களுக்கும், சர்வதேசத்தின் கவனத்திற்கும் நம் குரல் போய் சேராமல் இருக்க வேண்டும் என்பதில் இந்த கார்ப்பரேட் ஊடகங்கள் தெளிவாக இருக்கின்றன. இவர்களின் இருட்டடிப்புகளையெல்லாம் மீறி காவிரி பிரச்சினையை இந்திய அளவிலான மற்றும் சர்வதேச அளவிலான விவாதமாக மாற்ற நமக்கு ஒரு வாய்ப்பு கிட்டியிருக்கிறது. IPL போட்டிகளை புறக்கணிப்பது என்று நாம் முடிவெடுத்தோம் என்றால் அதனை செய்ய முடியும். ஒட்டுமொத்த தமிழ்நாடும் ஏன் IPL-ஐ புறக்கணித்தது என்பதை சர்வதேச விவாதமாக நாம் மாற்ற முடியும்.
இந்திய அரசு காவிரி பிரச்சினையில் தமிழர்களை வஞ்சிப்பதை அனைவருக்கும் எடுத்துக் காட்ட முடியும். நம் உரிமைகளைக் காக்கவும், நம் விவசாயிகளின் வாழ்வினைக் காக்கவும் இந்த IPL போட்டியை பார்க்காமல் நம்மால் இருக்க முடியாதா என்ன?
தமிழ்நாட்டில் நமக்கு அமைதியாக அமர்ந்து தொடர் போராட்டத்தை நடத்துவதற்கான இடமோ, அனுமதியோ ஜனநாயகமோ இங்கு கிடையாது. மெரீனா கடற்கரைக்கு கூட பூட்டு போட்டு பூட்டி வைக்கும் கொடுமையைத்தான் நாம் இங்கு பார்க்கிறோம். இப்போது போராடவில்லையென்றால் எப்போதும் முடியாது. நமது உரிமையான காவிரி நீர் 378 டி.எம்.சி. ஆனால் நமக்கு கிடைத்தது வெறும் 195 டி.எம்.சி. தற்போது அதிலிருந்தும் 14.5 குறைத்து இப்போ 177.25 டி.எம்.சி-யாக குறைக்கப்பட்டிருகிறது. இது துரோகத்தின் உச்சம். இப்போது நாம் போராடி மீட்கவில்லை என்றால் நாம் நிரந்தரமாக காவிரி உரிமையை இழப்போம்.
அதற்காகத்தான் தமிழ்நாடு முழுதும் மக்கள் போராடிக் கொண்டிருக்கிறார்கள். இந்த நேரத்தில் IPL போன்ற சூதாட்டக் கேளிக்கைகள் நமக்கு முக்கியமல்ல. போராட்டங்களை திசைதிருப்பும் இந்த கேளிக்கை நிகழ்வு தமிழ்நாட்டிற்கு தேவையில்லை என்பதை உறுதியாக சொல்லுவோம். நமக்கு சென்னை சூப்பர் கிங்ஸ் வாங்குகிற கோப்பையை விவசாயியின் வாழ்க்கை தான் முக்கியம்.
தமிழ்நாட்டின் முதன்மை போராட்ட சூழலினை கருத்தில் கொண்டு இந்த IPL போட்டிகளை சென்னையில் நடத்திட அனுமதிக்கக் கூடாது என்று தமிழக அரசுக்கு கோரிக்கையினை மே பதினேழு இயக்கம் சார்பாக முன்வைக்கிறோம். தமிழக இளைஞர்களே! IPL டிக்கெட்டுகளை கிழித்தெறியுங்கள். பெப்சி, கொகொ கோலாவையே விரட்டியவர்கள் நாம். IPL ஐ புறக்கணிக்க முடியாதா என்ன?
IPL விளையாட்டு மைதானங்கள் காலி மைதானங்களாக இருக்கட்டும். தமிழ்நாட்டு இளைஞர்கள் முற்போக்கானவர்கள், எங்களுக்கு பொழுதுபோக்கினை விட, தமிழ்நாட்டின் வாழ்வாதாரம் தான் முக்கியம் என்பதை இந்திய அரசின் முகத்துக்கு நேரே சொல்ல IPL போட்டிகளை புறக்கணியுங்கள்.
காவிரி மீட்கும் வரை தொடர்ந்து போராட்டக்களங்களில் நில்லுங்கள். நாம் வெல்வோம்.
– மே பதினேழு இயக்கம் | 9884072010