பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பின் மீது ஜார்க்கண்ட் மாநில பாஜக அரசு விதித்துள்ள தடையினை மே பதினேழு இயக்கம் வன்மையாக கண்டிக்கிறது.
ஒரு மிகப் பெரிய ஜனநாயகப் படுகொலையினை இந்தியாவில் பாஜக அரசு பதவியேற்றதில் இருந்து தொடர்ந்து நிகழ்த்திக் கொண்டிருக்கிறது. பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா என்பது இந்தியா முழுதும் இயங்குகிற ஒரு ஜனநாயக மக்கள் அமைப்பு. ஒடுக்கப்பட்ட மற்றும் சிறுபான்மையின மக்களின் நலனுக்காக தொடர்ந்து நாடு முழுவதும் குரல்கொடுத்தும், போராடியும் வருகிறது. ஒரு மக்கள் அமைப்பினை இந்த அரசு தடை செய்வது என்பதை எந்தவிதத்திலும் ஏற்க முடியாது.
மக்களுக்காக போராடுகிற அனைத்து ஜனநாயக சக்திகள், பத்திரிக்கையாளர்கள், மனித உரிமை செயல்பாட்டாளர்கள் என அனைவரின் மீதும் இந்த பாசிச அரசு அடக்குமுறைகளை ஏவி வருகிறது பாஜக அரசு. இந்துத்துவ கும்பல்கள் மனித உரிமை குறித்து பேசுபவர்கள் மீதெல்லாம் தாக்குதல்களை நிகழ்த்தி வருகிறது. கருத்துரிமையினை தொடர்ந்து மறுத்து வருகிறது. இந்துத்துவ பாசிசத்திற்கு எதிராக குரலெழுப்பும் செயல்பாட்டாளர்கள் கொலை செய்யப்படுகிறார்கள்.
பாஜக, ஆர்.எஸ்.எஸ் மற்றும் இந்துத்துவ கும்பல்களின் தலைவர்கள் மேடைகளில் வன்முறையை தூண்டும் வகையில் தொடர்ந்து பேசி வருகிறார்கள். பசுக் காவலர்கள் என்ற பெயரில் அப்பாவி மக்களை படுகொலை செய்கிறார்கள். தலித்துகள் மீதும், இசுலாமியர்கள் மீதும் தாக்குதல்களை நிகழ்த்துகிறார்கள். இப்படிப்பட்ட வன்முறை வெறியாட்டங்களை தொடர்ந்து நிகழ்த்தி வரும் இந்துத்துவ கும்பலுக்கு இந்த அரசு பாதுகாப்பாக இருந்து வருகிறது. அவர்கள் மீது சிறு கண்டனம் கூட தெரிவிக்கப்படவில்லை. உண்மையிலேயே தடை செய்யப்பட வேண்டிய ஆர்.எஸ்.எஸ்-சும், அதன் அடியாள் கூட்டமும் நாடு முழுவதும் சுதந்திரமாக கலவரங்களை நிகழ்த்தி வருகிறார்கள்.
ஆனால் மக்களுக்காக களத்தில் நிற்கிற பாப்புலர் ப்ரண்ட் ஆஃப் இந்தியாவினை ஜனநாயக விரோதமாக தடை செய்திருக்கிறது ஜார்க்கண்ட் பாஜக அரசு. அறிவிக்கப்படாத எமெர்ஜென்சி இந்தியா முழுதும் பாஜக அரசினால் நடைமுறையில் இருக்கிறது.
பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பின் மீதான தடையினை கண்டித்து இந்தியா முழுதும் உள்ள அனைத்து ஜனநாயக சக்திகளும் கைகோர்க்க வேண்டும். மத்திய மதவாத அரசின் ஊதுகுழலாக செயல்பட்டு அப்பாவி சிறுபான்மையின இளைஞர்களை பயங்கரவாதிகளாக சித்தரிக்கும் தேசிய புலனாய்வு முகமையான என்.ஐ.ஏ என்பது கலைக்கப்பட வேண்டும்.
இந்த தடைக்கு எதிராக நாம் ஒன்றிணையாவிட்டால், இது நாடு முழுவதும் அனைத்து ஜனநாயக சக்திகளுக்கும் பாதுகாப்பற்ற சூழலை உருவாக்கும். குறிப்பாக பாஜக ஆளும் மாநிலங்களில் உள்ள ஜனநாயக சக்திகள் பாசிச அரசுக்கு எதிராக ஓரணியில் உடனே திரள வேண்டிய கட்டாயத்தினை இந்த தடை நடவடிக்கை நமக்கு காட்டியிருக்கிறது.
பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் மீது தடையை ஏவியிருக்கும் பாஜக அரசினை மே பதினேழு இயக்கம் வன்மையாக கண்டிக்கிறது.
பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா மீதான தடையை நீக்கு.
மே பதினேழு இயக்கம்
9884072010