இன்று திண்டுக்கல்லில் நடக்க இருந்த மீனவ்ர்களுக்கான ஆர்ப்பாட்டத்தை இறுதி நேரத்தில் ரத்து செய்திருக்கிறது காவல்துறை. விளக்கம் கேட்க மதியம் சென்ற தோழர்களை காவல்நிலையத்தில் காக்க வைத்து இரவு கவிந்ததும் ரத்து கடிதம் கொடுத்து அனுப்பி இருக்கிறார்கள். இப்போராட்டம் ஏற்கனவே தள்ளிவைக்குமாறு காவல்துறை சொல்லி மாற்று தேதியை கொடுத்திருந்தார்கள்.
இதே போல பெரம்பலூரில் நாளை நடக்க இருக்கும் மீனவர்களுக்கான போராட்டத்திற்கான அனுமதியையும் ரத்து செய்திருக்கிறார்கள். இப்பகுதியின் ஐ.ஜி நேரடியாக தலையிட்டு அனுமதியை ரத்து செய்ததாக சொல்லப்பட்டது.
சென்னையில் கடந்த வாரம் நடத்த இருந்த போராட்டத்திற்கு அனுமதியை ரத்து செய்தார்கள். அதற்கு முந்தைய மாதம் நடக்க இருந்த அனுமதியும் ரத்து செய்யப்பட்டது.
கோவையில் கடந்த 3 மாதங்களாக அனுமதி பொதுக்கூட்டம், அரங்கநிகழ்விற்கு மறுக்கப்பட்டது. இதற்கான வழக்கு கடந்த ஒரு மாதமாக உயர்நீதி மன்றத்தில் நடந்து வருகிறது
திருச்சியில் நடத்த அனுமதி கேட்கப்பட்ட நிகழ்வும், தஞ்சையில் நடத்தப்பட இருந்த பொதுக்கூட்டமும் இவ்வாறு அனுமதி மறுக்கப்பட்டது.
வேலூரில் கடந்த மாதம் நடத்த அனுமதி கேட்கப்பட்ட பொதுக்கூட்டத்திற்கு அனுமதி மறுக்கப்பட்டது. அரங்க நிகழ்வாக மாற்றப்பட்ட புத்தக வெளியீட்டு நிகழ்விற்கு சுவரொட்டி ஒட்டிய தோழர்கள் கைது செய்யப்பட்டனர். அவர்கள் மீது வழக்கு தொடரப்பட்டது.
இது போன்று தொடர்ந்து சனநாயக நிகழ்வுகளுக்கு அனுமதி மறுக்கப்படுகிறது.
பாஜக, ஆர்.எஸ்.எஸ், இந்துத்துவ குழுக்களின் அழுத்தத்தால் காவல்துறை அனுமதியை மறுத்து வருவதை அறியமுடிந்தது.
ஊடகங்களில் செய்திகள் தவிர்க்கப்படவும், விவாதங்களில் பங்கேற்பது தடுக்கப்படுவதும் கடந்த சில மாதங்களாக தீவிரப்பட்டிருக்கிறது.
இந்த அடக்குமுறைகள் எம்மை ஒரு போதும் கட்டுப்படுத்திவிடாது.
உறுதியுடன் முன்னேறுவோம்.
இறுதியில் நாமே வெல்வோம்
மே பதினேழு இயக்கம்