மதுரை பழங்காநத்தத்தில் நவம்பர் 19, 2017 ஞாயிறு மாலை “உருவாக்குவோம் தற்சார்பு தமிழ்நாடு” என்ற பெயரில் தமிழின உரிமை மீட்பு பொதுக்கூட்டம் மே பதினேழு இயக்கத்தினால் நடத்தப்பட்டது. பொதுக்கூட்ட மேடைக்கு தமிழ்நாடு என்ற பெயர் சூட்டலை வலியுறுத்தி உண்ணாவிரதம் மேற்கொண்டு உயிர்கொடுத்த, ஈகி சங்கரலிங்கனார் அவர்களின் பெயர் சூட்டப்பட்டது.தொடர்ச்சியாக மே பதினேழு இயக்கம் கூட்டம் நடத்துவதற்கு அனுமதி மறுக்கப்பட்டு வந்த நிலையில், இரண்டு மாத காலம் சட்டப் போராட்டத்தினை நீதிமன்றத்தில் இந்த பொதுக்கூட்டம் நடத்துவதற்கான அனுமதி பெறப்பட்டது. இந்த கூட்டத்தின் போது உயர்நீதிமன்றத்தில் தமிழை வழக்காடு மொழியாக்கக் கோரி மதுரையில் உண்ணாவிரதம் இருந்த தோழர் பகத்சிங் உள்ளிட்ட 8 தோழர்களுக்கும், இந்தி எதிர்ப்புப் போராட்டத் தியாகிகள் புலவர் மறவர்கோ மற்றும் ஜெயராமன் ஆகியோருக்கும், தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினால் சென்னையில் நடத்தப்பட்ட பூணூல் எதிர்ப்புப் போராட்டத்தில் சிறை சென்ற தோழர் தமிழ்ப்பித்தன்
அவர்களுக்கும் மே பதினேழு இயக்கம் சார்பில் மரியாதை அளிக்கப்பட்டது.
சில மாதங்களுக்கு முன் உயிர் நீத்த மே பதினேழு இயக்கத் தோழர் ஆட்டோ நாகராஜ் அவர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது. இந்த பொதுக்கூட்டத்தினில் மதுரையைச் சேர்ந்த பல்வேறு முற்போக்கு இயக்கங்களின் தோழர்களும், பெருந்திரளான பொதுமக்களும் கலந்து கொண்டனர்.
தேர்தல் அரசியல் மட்டுமே அரசியலல்ல. இயக்க அரசியல் தமிழ்நாட்டில் வலிமையாக வேண்டியதன் அவசியத்தினை எடுத்துரைக்கும் வகையில் இந்த பொதுக்கூட்டம் அமைந்தது.
தமிழர்களின் அரசியல், சமூக, பண்பாட்டு, பொருளாதார உரிமைகள் பறிக்கப்படுவது குறித்தும், அவற்றினை மீட்டெடுக்க நாம் ஒன்று கூட வேண்டியதன் அவசியம் குறித்தும், தற்சார்பு தமிழ்நாட்டை நாம் உருவாக்க வேண்டியதன் அவசியங்கள் குறித்தும், அதற்கு முதல்கட்டமாக நாம் அறிந்து கொள்ள வேண்டியவையும், தேவைகளையும் குறித்து தோழர்கள் விரிவாக உரையாற்றினார்கள். தமிழக மக்கள் முன்னணியின் தோழர் பொழிலன், தமிழ்ப் புலிகள் கட்சியின் தலைவர் தோழர் நாகை திருவள்ளுவன், மே பதினேழு இயக்க தோழர்கள் மெய்யப்பன், முகிலன், செல்வா ஆகியோரும், மே பதினேழு ஒருங்கிணைப்பாளர்கள் பிரவீன்குமார், லெனாகுமார், அருள்முருகன், திருமுருகன் காந்தி உள்ளிட்டோர் உரையாற்றினர். மே 17 இயக்கத் தோழர் கிட்டு நன்றியுரையாற்றினார்.
மேலும் மே பதினேழு இயக்க தோழர் திருமுருகன் காந்தி மற்றும் தமிழர் விடியல் கட்சியைச் சேர்ந்த தோழர்கள் டைசன், இளமாறன், அருண்குமார் ஆகியோர் குண்டர் சட்டத்தில் சிறைப்படுத்தப்பட்டபோது தமிழகத்தில் 17 மாவட்டங்களில் ஆர்ப்பாட்டங்கள் நடத்தி தோழர்களுக்கு துணை நின்ற தமிழ்ப்புலிகள் கட்சியின் தோழர் நாகை.திருவள்ளுவன் அவர்களுக்கு மரியாதை அளிக்கப்பட்டது. மேலும் மே பதினேழு இயக்கத்தின் மாத இதழான “மே பதினேழு இயக்கக் குரல்” பத்திரிக்கை மதுரையில் அறிமுகம் செய்து வைக்கப்பட்டது.