29 தமிழர்களின் நீதிக்காக குரல் கொடுக்க முன்வாருங்கள் !
20 தமிழர்களின் படுகொலைக்கு நியாயம் கேட்க போராடிக்கொண்டிருக்கும் இச்சமயத்தில் கடந்த 4 வருடங்களில் இதே போல கொடூரமாக கொலை செய்யப்பட்ட 9 தமிழர்களின் குடும்பத்தினருக்கும் நியாயம் கோருகின்ற கோரிக்கையையும் இணைத்துக்கொள்ள மே 17 இயக்கம் கோரிக்கை வைக்கிறது.
2011இல் இருந்து இதுவரை கொல்லப்பட்டவர்கள் பட்டியல்
1.) 2011 வாராதி என்பவர் ( கொல்லப்பட்ட இடம் – சங்கரய்யாகரி பலெம், மெட்டிபலெம் கிராமம், சந்திரகிரி மண்டலம், சித்தூர் மாவட்டம்
2. ) டிசம்பர் 2012, முருகன், ( கொல்லப்பட்ட இடம் – கரிவெப்பகுல கொனா, சமாலா காடு, சித்தூர் மாவட்டம் )
3.) 29.1.14 சம்பராயன் மணி ( கொல்லப்பட்ட இடம் கல்யாணி அணை அருகில், பொபாதி மலை, சித்தூர் மாவட்டம்)
4. ) 29.5.14 வெங்கடேஷ், 25 வயது, சிவா 28 வயது, விஜயகாந்த் 28 வயது, – தானியார் கிராமம், போளூர் தாலுக, திருவண்ணாமலையை சேர்ந்தவர்கள் ( கொல்லப்பட்ட இடம் – குட்டுடேல பண்டா, திருப்பதி கோவிலில் இருந்து 12 கி.மீ தொலைவில், சித்தூர் மாவட்டம்)
5. ) 21.6.14 எ.வீரமணி, 35 வயது, வினாயகபுரம் தெற்கு, அட்டிமாலா பட்டு கிராமம், வன்னுர்புரம் போஸ்ட், ஆரணி தாலுக, திருவண்ணாமலை மாவட்டம். ( கடப்பாவின் காடு ஒன்றில் கொல்லப்பட்டிருக்கிறார்)
6. ) 31.7.14 அடையாளம் தெரியாதவர் ( கொல்லப்பட்ட இடம் கோடுரம் காடு, கடப்பா மாவட்டம்)
7. ) 2.8.14 அடையாளம் தெரியாதவர் ( கொல்லப்பட்ட இடம் – கடட்டலா மலை காடு, பாகாராபெட்டா பகுதி , சித்தூர் மாவட்டம்.)
கொல்லப்பட்ட பலரும் தனது குடும்பத்தின் மிக முக்கிய வருவாய் ஈட்டும் நபர்கள். 29 மே மாதம், 2014இல் கொல்லப்பட்ட மூவரில் ஒருவரான விஜயகாந்த்திற்கு இரண்டு குழந்தைகள் உள்ளன. மூன்று வயதிலும், 18 மாதக்குழந்தையும் இருக்கிறது. இவரது இளம் மனைவி 23வயதே ஆனவர். இவர்களின் இன்றய நிலை தெரியாது.
இந்த மூவர் கொலையைப் பற்றியும் ஏனைய கொலைகளைப்பற்றியும் நாம் அரசின் கவனத்திற்கு கொண்டு செல்வதும், அவர்களுடைய குடும்பங்களுக்கும் நிவாரணம் கிடைக்க போராடுவதும் அவசியம் என நம்புகிறோம். இப்போராட்டத்தோடு இதையும் இணைக்க வேண்டுகிறோம்.
இது தொடர்பாக பலரை தொடர்பு கொண்டு பேசிய பொழுது தமிழகத்தில் இருந்தும் ஆந்திராவில் இருந்தும் மலைவாழ் மக்களின் உரிமைக்காக போராடுபவர்கள் இப்பிரச்சனையை வெளியில் கொண்டுவாருங்கள் என கோரிக்கை வைத்தனர்.
கடப்பாவில் இது குறித்து பணி செய்து இத்தகவலை தொகுத்தவர் மிக வருத்தத்துடன் பதிவு செய்தார், “ நாங்கள் பல நாட்களாக இது குறித்து பேசி, போராடி வருகிறோம், ஏனோ தமிழ்நாட்டில் இருந்து இதற்கான ஆதரவு இம்மக்களுக்கு கிடைக்கவில்லை. பெரிய கட்சிகள் இதுகுறித்து பேச மறுக்கிறார்கள். ஆந்திராவில் இருக்கும் பல மனித உரிமை அமைப்புகளை இது குறித்து இணைத்து இருக்கிறோம். தமிழ்நாட்டில் இது குறித்து முன்பே போராடி இருந்தால் இப்படுகொலை நடந்திருக்காது” என்றார்.
அவர் சொன்னது வருத்தத்தினை உண்டாக்கியது. ஆம், நாம் இதுகுறித்து கடந்தகாலத்தில் கவனிக்காமல் சென்றூ விட்டோம் என்கிற குற்ற உணர்ச்சி எழுவதை தடுக்க முடியவில்லை..
இதற்கான பணியில் தம்மை ஈடுபடுத்தி தகவல்களை தொகுத்து கொடுத்தார். மேலும் இது குறித்து ஆந்திராவில் ஏதேனும் தகவல் தேவைப்பட்டால் உதவுதாக உறுதி அளித்தார்.
இவர் மேலும் சில தொடர்புகளை கொடுத்து பேசவைத்தார். அவர்கள் ஆந்திராவின் மனித உரிமைப் போராளியாகவும், ஈழம் முதல் மரண தண்டனை ஒழிப்பு என பல முக்கிய பிரச்சனைகளில் குரல் கொடுத்த மறைந்த தோழர். பால கோபாலின் தோழர்கள். இவர்களும் இப்பிரச்சனையை ஆந்திராவின் ஊடகங்களுக்கு கொண்டு சென்று இதில் மறைந்திருக்கும் உண்மைகளை அம்பலப்படுத்த கடந்த காலத்திலிருந்து முயன்றிருக்கிறார்கள். தற்போதும் பத்திரிக்கையாளர் சந்திப்பு நிகழ்த்துக்கிறார்கள்.
இவர்களில் ஒரு தோழர் “ உங்களுக்கு தெலுங்கு தெரியுமா எனத் தெரியவில்லை, ஆனால் ஆந்திராவில் கடுமையான எதிர் பிரச்சாரம் செய்யப்படுகிறது. ’இயற்கை வளங்களை சுரண்டுபவர்களை என்ன செய்வது, எப்படி தடுக்க முடியும்?’ என்று கொலைகளை அரசியல் வாதிகளும்,அமைச்சர்களும் நியாயப்படுத்துகிறார்கள். இவர்களை அம்பலப்படுத்த முயன்று கொண்டிருக்கிறோம். அரசியல்வாதிகளின் பங்களிப்பினையும், கல்குவாரி, உலோகங்களை எடுக்கும் சுரங்கங்கள், ரெட்டி பிரதர்ஸ் என அழைக்கப்படும் சுரங்க-கனிம திருடர்களை இந்த அரசியல்வாதிகள் மறைத்து மக்களிடத்தில் பொய் பிரச்சாரம் செய்கிறார்கள். மக்களை திசை திருப்பி , நிலமை மோசமாக செல்வதற்குள் நாம் இணைந்து அம்பலப்படுத்தவேண்டும் “ என்றார் அந்த மூத்த தோழர்.
நக்சல் வேட்டை என்று சொல்லி ஆந்திர சிறப்பு காவல்படை செய்த அட்டூழியங்களை அம்பலப்படுத்திய இத்தோழர்கள் நம்பிக்கை அளிக்கிறார்கள்.
தமிழ் தொழிலாளர்கள் எவ்வாறு இந்த காவல்துறையால் சிறைப்படுத்தப்படுகிறார்கள் என்பதை அடுத்த கட்டுரையில் எழுதுகிறேன்.
படத்தில் : மூன்று தமிழர்களின் படுகொலைக்கான அஞ்சலி சுவரொட்டி, விஜயகாந்தின் மனைவியும் குழந்தையும், கொலை செய்யப்பட்ட படங்கள்
(இது குறித்த தகவல்களை ஆங்கிலத்தில் கட்டுரையாக தொகுத்து எழுத இயலுகின்ற தோழர்கள் , இந்த விவரங்களை ஆங்கிலத்தில் கொண்டு சேர்க்க உதவ வேண்டுகிறோம். )