நினைவேந்தல் நிகழ்வினை தடுக்க தமிழக அரசு நடத்திய அடக்குமுறையை ஏவி 17 தோழர்களை பொய் வழக்கு போட்டு சிறையில் அடைத்ததைக் கண்டித்தும், வரும் வியாழன்(மே 25,2017) அன்று அதனைக் கண்டித்து முதல் கட்ட போராட்டம் நடத்தப்படும் என்றும் அறிவித்து மே பதினேழு இயக்கம் சார்பில் பத்திரிக்கையாளர் சந்திப்பு செவ்வாய் 23-5-2017 அன்று நடைபெற்றது. இதில் மே பதினேழு இயக்க ஒருங்கிணைப்பாளர்கள் தோழர் அருள்முருகன், தோழர் லெனாகுமார்,தோழர் புருசோத்தமன், தோழர் பிரவீன் குமார் மற்றும் தமிழர் விடியல் கட்சியின் தோழர் நவீன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
பத்திரிக்கையாளர் அறிக்கை:
நீத்தார்க்கு கடமையாற்றுவது (இறந்தோரை நினைவுகூறுவது) என்பது எந்த ஒரு இனக்குழு சமூகத்திலும் ஒரு முக்கியமான பண்பாட்டு நிகழ்வாக இருக்கிறது. அத்தகைய நிகழ்வுகளை நடத்துவது என்பது ஒவ்வொரு சமூகத்திற்கும் இயற்கையாகவே அமையும் கலாச்சார உரிமையாகும். இதை எந்த ஒரு சட்டத்தினாலும் தடுத்துவிட முடியாது. நீத்தார் கடமையாற்றுவதை தடுப்பது என்பது அடிப்படை மனித உரிமைகளையே மீறும் செயல். நீர் நிலைகளின் அருகில் இறந்தோரை நினைவுகூறும் தமிழர் மரபு 6000 வருடங்களுக்கு பழமைவாயந்ததாகும். இதற்கு சான்று தாமிரபரணி ஆற்றங்கரையில் அமைந்திருக்கும் ஆதிச்சநல்லூர் தொல்லியல் கலாச்சாரமே. இதை தடுத்து நிறுத்துவதென்பது மானுட விரோத, இயற்கை நீதிகளுக்கு எதிரான செயல்.
ஈழத்தில் கொல்லப்பட்ட ஒன்றரை லட்சம் தமிழர்களையும் நினைவுகூறவும், அவர்களுக்கு நினைவஞ்சலி மரியாதை செலுத்தும் நிகழ்வானது கடந்த 6 ஆண்டுகளாக மெரினா கடற்கரையில் தமிழ் சமூகத்தால் அமைதியான அற வழியில் பெண்கள் குழந்தைகள் உட்பட எளிய மக்கள் குடும்பம் குடும்பமாக ஒன்று கூடி, நீதி கேட்டு போராடிய கண்ணகி சிலைக்கு பின்னால் நடைபெற்று வந்துள்ளது.
“ஈழத்தில் நடைபெற்றது இனப்படுகொலை. அதற்கு சர்வதேச பன்னாட்டு விசாரணையும், பொது வாக்கெடுப்பும் நடத்தப்பட வேண்டும்” என்று சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றிய ஜெயலலிதாவின் பெயரைச் சொல்லி ஆட்சி நடத்தும் இந்த அதிமுக அரசு இந்த நினைவேந்தல் நிகழ்வை தடுப்பதற்கு காவல் துறையை ஏவி வன்முறை வெறியாட்டத்தை கட்டவிழ்த்துவிட்டுள்ளது. மத்தியில் ஆளும் ஆர்.எஸ்.எஸ்-பா.ஜ.க கும்பலுக்கு பினாமியாக மாறியிருக்கும் இந்த எடப்பாடி அரசு தமிழர்களின் அடிப்படை உரிமையை நசுக்குகிறது. சட்டமன்றத்தில் இனப்படுகொலை குறித்தான தீர்மானத்தின் போது வாக்களித்த பிரதான பெரிய கட்சிகள் இந்த உரிமை மறுப்பை கண்டிக்கவும், காவல் துறையின் அடக்குமுறை அராஜகத்தை கண்டிக்கவும் முன்வரவில்லை. ஆனால் மே 17 இயக்கம் தமிழ் இனத்தின் உரிமையான நினைவஞ்சலி நிகழ்ச்சியை ஒவ்வொரு ஆண்டும் கண்ணகி சிலை அருகில், தமிழர் கடலில் நடத்துவோம். இதில் மே பதினேழு இயக்கம் சமரசம் செய்துகொள்ளப் போவதில்லை. இதற்காக ஒவ்வொரு தமிழனின் வீட்டின் கதவையும் தட்டி இந்த உரிமை போருக்கு வலு சேர்ப்போம்.
அடக்குமுறையால் எங்களது மரபான பண்பாட்டு நிகழ்வை அழிக்க நினைப்பது என்பது சர்வதேச விதிகளுக்கு புறம்பானது. வெள்ளைக்கார காலத்தில் கொண்டுவரப்பட்ட Police Act(41) ஐ காரணம் காட்டி நினைவேந்தல் உரிமையினை பறிக்க எண்ணுகிறது மோடியின் அடிபணிந்து செயல்படும் தமிழக எடப்பாடி அரசு. தமிழகம் முழுவதும் இருக்கக் கூடிய தமிழர்களை நமது பண்பாட்டு மரபின் மீது மோடி-எடப்பாடி அரசு தொடுத்திருக்கும் இந்த கலாச்சார போரை தடுத்திட ஒரணியில் திரட்டுவோம். இதனை சர்வதேச மனித உரிமை தளங்களில் விவாதமாக மாற்றும் வேலையை மே பதினேழு இயக்கம் மேற்கொள்ளும். இந்தியா எங்கிலும் உள்ள ஜனநாயக சக்திகளை, இனப்படுகொலைக்கு உள்ளான மக்களுக்கு நினைவஞ்சலி செலுத்தும் நிகழ்வினை தடுக்கும் இந்த அரச பயங்கரவாதத்தை கண்டிக்க மே பதினேழு இயக்கம் அழைக்கும். அறிவுஜீவிகள், பத்திரிக்கையாளர்கள், சிவில் செயற்பாட்டாளர்கள் இந்த ஃபாசிச போக்கைக் கண்டிக்க முன்வர வேண்டும்.
ஒரு இயல்பான இயற்கை நிகழ்வை தடுத்திடும் இந்த அரசிற்கு எதிராக அனைவரும் ஒன்றிணைய வேண்டும். நினைவேந்தலைத் தடுத்திட ஏராளமான அடக்குமுறைகளை தமிழக அரசின் காவல்துறை மேற்கொண்டது. மே பதினேழு இயக்கத் தோழர்கள் சிலரை தனிப்பட்ட முறையில் குறிவைத்து தாக்கியது. மே பதினேழு இயக்கம், தமிழர் விடியல் கட்சி மற்றும் காஞ்சி மக்கள் மன்றம் அமைப்பைச் சேர்ந்த 17 தோழர்களின் மீது பொய் வழக்குகளை போட்டு கைது செய்திருக்கிறது. தோழர்கள் மீது தாக்குதல் நடத்தி அடக்குமுறையில் ஈடுபட்ட காவல்துறையினர், நிராயுதபாணியாக அஞ்சலி செலுத்த வந்த மே பதினேழு இயக்கத்தினரைப் பற்றி வன்முறையில் ஈடுபட்டார்கள் என்றும், பேருந்து கண்ணாடிகளை உடைத்தார்கள் என்றும் தொடர்ச்சியாக பொய்யினை பரப்பி வருகிறது. இந்த அவதூறுகளை காவல்துறையினர் நிறுத்த வேண்டும். பொய் வழக்கில் சிறைபடுத்தப்பட்ட 17 தோழர்களும் விடுதலை செய்யப்பட வேண்டும். கடந்த ஆண்டுகளில் நிகழ்ந்ததைப் போல நினைவேந்தலை மெரீனாவில் நடத்தும் உரிமைகளில் காவல்துறை குறுக்கீடு செய்யாது இருக்க வேண்டும்.
முதல்கட்டமாக வருகிற 25-5-2017 வியாழன் அன்று மாலை 4 மணியளவில் தமிழக அரசின் இந்த அடக்குமுறையைக் கண்டித்தும், கைது செய்யப்பட்ட 17 தோழர்களை விடுதலை செய்யக் கோரியும் கண்டன ஆர்ப்பாட்டத்தை வள்ளுவர் கோட்டத்தில் மே பதினேழு இயக்கம் நடத்த உள்ளது. இதில் பல்வேறு கட்சிகள் மற்றும் இயக்கங்களின் தலைவர்கள் மற்றும் தோழர்கள், மாணவர்கள், கலைஞர்கள், பொதுமக்கள் உள்ளிட்டோர் பங்கேற்க உள்ளனர்.