இலங்கையின் ராணுவத்தினர், ஐ.நாவின் அமைதிப்படைப் பிரிவில் ஹைத்தி நாட்டில் பணி புரிந்த பொழுதில் அந்நாட்டு சிறுவர்/சிறுமிகளை பாலியல் உறவிற்கு பயன்படுத்தியது ஐ.நாவின் அறிக்கையில் அம்பலமாகி இருக்கிறது.
2004ம் வருடத்திலிருந்து 2007வரையிலான காலகட்டத்தில் 134 இலங்கை ராணுவத்தினர் கிட்டதட்ட 9 சிறுவர் சிறுமிகளை பயன்படுத்தி இருக்கிறார்கள். ஒரு நாளில் நான்கு முறைக்கு மேல் இவர்கள் பாலியல் உறவிற்கு பயன்படுத்தப்பட்டிருக்கிறார்கள். இலங்கையின் இந்த படையினரில் 114 பேர் திருப்பி அனுப்பப்பட்டனர். இருந்த போதிலும் இதுவரை இவர்கள் எவருமே தண்டிக்கப்பட்டதில்லை.
2007இல் ஐ.நாவிற்கு இலங்கை படையினர் குறித்தான சந்தேகம் எழுந்து விசாரித்த பொழுது இது அம்பலமாகி இருக்கிறது. இவ்வாறு பயன்படுத்தப்பட்ட சிறுமி இலங்கையின் ராணுவத்தளபதி குறித்த விவரங்களை பதிவு செய்திருக்கிறாள். பெருத்த உடலும், மீசையும், தங்க மோதிரமும் அணிந்த அந்த தளபதி இதுவரை தண்டிக்கப்பட வில்லை. மற்றொரு சிறுமி கிட்டதட்ட 11 இலங்கை ராணுவத்தினரை அடையாளம் காட்டி இருக்கிறாள். இதில் ஒரு இலங்கை ராணுவ கார்ப்பரேல் ‘இடுப்பிற்கும், தோள்பட்டைக்கும் இடையில் புல்லட் தழும்பு வித்தியாசமான முறையில் இருந்திருக்கிறது’ என்று பதிவு செய்திருக்கிறாள்.
இந்த இலங்கை ராணுவத்தினர் இவ்வாறு இச்சிறுவர்/சிறுமிகளை பயன்படுத்திக் கொள்வதற்காக சிறிதளவு பணம், பிஸ்கட்டுகள், ஜீஸ் போன்றவற்றை கொடுத்து ஏமாற்றி இருக்கிறார்கள். 12 வயது முதல் 15 வயது வரையிலான குழந்தைகள் இவ்வாறு பயன்படுத்தப்பட்டிருக்கிறார்கள்.
139 இலங்கை ராணுவத்தில் இந்த கொடூர கும்பல்களை கண்டறிந்து தண்டிக்கமுடியாத சர்வதேசம் எவ்வாறு இரண்டு லட்சம் இலங்கை ராணுவத்தின் குற்றங்களை கண்டறிந்து தண்டிக்கப் போகிறது.
புலம்பெயர் தமிழர்களே, ஹைத்தி சிறுவர்-சிறுமியருக்கு ஆதரவை வழங்குங்கள். இச்செய்தியை உலக நாடுகளுக்கு கொண்டு செல்லுங்கள். இது குறித்து அசோசியேட்டட் ப்ரஸ் செய்தி வெளியிட்டிருக்கிறது. ஹைத்தி அரசினை தொடர்பு கொள்ளுங்கள். இலங்கையின் முகத்திரையை உலக அளவில் கிழித்தெறிய கிடைத்த இந்த வாய்ப்பை பயன்படுத்துவோம். குழந்தைகள் உரிமைக்காக போராடுபவர்கள் முதல் அனைவரிடத்திலும் இச்செய்தியை பரப்புவது இலங்கையை அம்பலப்படுத்த உதவும்.
இந்திய அரசின் நட்பு நாட்டின் யோக்கியதையை இச்செய்தி அம்பலப்படுத்தி இருக்கிறது.
’உங்கள் நண்பனைப் பற்றிச் சொல்லுங்கள், உங்களைப் பற்றி கூறுகிறேன்’ என்ற பழமொழியைக் கொண்டு இந்திய அரசின் யோக்கியதையை புரிந்துகொள்ளுங்கள்.. இலங்கையை நட்பு நாடென்று சொல்லும் இந்திய அரசவர்க்கம் எப்படி நாகரீகமடைந்தவர்களுக்கான அரசாக இருக்க முடியும்.
இலங்கை அரசின் மீது பொருளாதாரத் தடையையும் சர்வதேச விசாரணையையும் கொண்டுவர தொடர்ந்து போராடுவோம்.
இலங்கை மீதான தனது ஜி.எஸ்.பி வரிச்சலுகை தடையை நீக்குவதற்கு ஐரோப்பிய ஒன்றியம் முயன்று கொண்டிருக்கிறது. ஐரோப்பிய நாடுகளில் இருக்கும் ஈழத்தமிழ் தோழமைகள் இது குறித்து கவனத்திற்கு கொண்டு செல்வதும், பொருளாதாரத் தடையை நீட்டிக்க வழிவகை செய்வதும் குறைந்த பட்ச தேவையாக இருக்கிறது. இது குறித்து உங்கள் கவனத்திற்கு இச்செய்தியை கொண்டு வருகிறோம்.
ஐ.நா வின் விசாரணையில் கண்டறியபப்ட்ட நேரடி குற்றவாளிகளையே தண்டிக்காத இலங்கை அரசு எப்படி ஐ.நா மனித உரிமை தீர்மானங்களை மதித்து நடக்குமென்கிற கேள்வி எழுப்பப்பட வேண்டும். லத்தீன் அமெரிக்க நாடுகள், கரீபியன் நாடுகள் உள்ளிட்டவற்றில் இது குறித்த பிரச்சாரம் செய்வது காலத்தின் தேவை. அமெரிக்காவை, இங்கிலாந்தை மட்டுமே நம்பி மோசம் போன நண்பர்களும் இது குறித்து சிந்திகக் வேண்டும்.
இலங்கையை தனிமைப்படுத்துவதும், அம்பலப்படுத்துவதும் நமது போராட்டத்தினை வலுப்படுத்தும். இதுகுறித்து மேற்குலகில் கவன ஈர்ப்பு போராட்டங்கள் தேவைப்படுகின்றன. ஈழத் தமிழ் இளைஞர்கள் இச்செய்திகளின் அடிப்படையில் போராட்டங்களை துவக்குவது நலம். பிற நாடுகளின் ஆதரவை நாம் வெல்ல முடியும்.
மனித குல எதிரியை தொடர்ந்து அம்பலப்படுத்துவோம். ஈழ விடுதலைப் போராடத்தில் வெற்றி ஈட்டும் வரையிலும், இலங்கை தண்டிக்கப்படும் வரையிலும் மே17 இயக்கம் சமரசமில்லாமல் போராடும்.
முன்னேறுவோம். பலவீனமாய் நிற்கும் எதிரியை மேலும் அம்பலப்படுத்துவோம், தனிமைப்படுத்துவோம்.
மே பதினேழு இயக்கம்.
( குறிப்பு: இந்தச் செய்தி வெளியாகி 4 நாட்கள் ஆன பொழுதிலும் கவனத்திற்கு கொண்டு வராத இந்திய ஊடகங்களின் இருட்டடிப்பினை உடைத்து சமூகவலை தளம் மூலமாக செய்தியை உலகிற்கு கொண்டு செல்வோம்.)