’தமிழீழம், தமிழகம், தமிழகத் தேர்தல்’ பத்திரிக்கையாளர் சந்திப்பு

- in Press Releases

 

தமிழினத்தின் கோரிக்கைகள் சர்வதேச அளவிலும், இந்திய பாராளுமன்ற அளவிலும் விவாதத்தினை எதிரொளித்துக்கொண்டிருக்கும் தருணத்தில் நடக்க இருக்கும் இந்த தேர்தல் முக்கியமான நகர்வுகளை கொண்டிருக்கிறதாக மே17 இயக்கம் கருதுகிறது.

இந்நிலையில் தமிழகத்தின் பெரிய கட்சிகளான அதிமுக, திமுக, தேமுதிக ஆகியவை கடந்த ஐந்து ஆண்டுகளில் தமிழகத்தின் கோரிக்கையான ஈழவிடுதலை, தமிழினப்படுகொலைக்கான சர்வதேச விசாரணை, இந்திய அதிகாரிகள், அமைச்சர்கள் மீதான விசாரணை-நடவடிக்கை குறித்து இந்திய அளவிலும், சர்வதேச மட்டத்திலும் விவாதத்தினை கொண்டுவர மறுத்தார்கள். தமிழர்களின் குறைந்தபட்ச அதிகாரத்தினை வைத்திருக்கும் வாய்ப்பிருக்கும் தமிழக அரசு ஈழப்படுகொலையில் சடங்குரீதியான நடவடிக்கைகளையே எடுத்து தமிழக மக்களை தொடர்ந்து ஏமாற்றிவருகிறது என்பதை இத்தருணத்தில் பகிரங்கமாக குற்றம் சாட்டுகிறோம்.

இந்திய பாராளுமன்றத்தில், மாநிலங்களவையில் தமிழினப்படுகொலைக்கு காரணமான இந்திய வெளியுறவுக் கொள்கை குறித்து எந்தவித விவாதத்தினையும் தமிழகத்தின் பிராந்திய பெரிய கட்சிகளான அதிமுக, திமுக ஏற்படுத்தவில்லை. மத்தியில் அதிகாரத்தில் பங்கு பெற்றிருந்த திமுகவும், 2014க்கு பின் இந்தியாவின் மூன்றாவது பெரிய கட்சியாக பாராளுமன்றத்தில் இருக்கும் அதிமுகவும் இந்தியாவின் வெளியுறவு-பாதுகாப்பு கொள்கையை கேள்விக்குள்ளாக்கவில்லை. ஆனால், இந்தியா பல்வேறு பாதுகாப்பு, வர்த்தக, அரசியல் உறவுகளை இலங்கையோடு வலுப்படுத்தியது கடந்த 5 ஆண்டுகாலத்தில். தமிழக சட்டசபையில் கண் துடைப்பு தீர்மானத்தினை அதிமுக கொண்டுவந்து நிறைவேற்றியதால் எந்தவித முன்னேற்றத்தினையும் அது கொண்டுவரவில்லை, மாறாக தமிழீழ ஆதரவாளர்களை ஒடுக்கும் போக்கினையும், ஈழ அகதிகள் ஒடுக்கப்படுவதையும் செய்து கொண்டிருக்கிறது.

இதே போன்றதொரு நிலையையே ராஜீவ் மரண வழக்கில் பொய்க் குற்றச்சாட்டிற்கு ஆளாகி சிறையில் 24வருடங்களாக அடைப்பட்டிருக்கும் சிறைவாசிகளையும், பிற இசுலாமியர் உள்ளிட்ட அரசியல் சிறைவாசிகளையும் விடுதலை செய்யக் கூடிய அரசியல்சாசனப்பிரிவு 161இன் கீழ் விடுதலை செய்யாமல் திட்டமிட்டே அதிமுக அரசு தடுத்துவருகிறது. இந்திய அரசு (காங்கிரஸ்/பாஜக) ஆகியவை தமிழர் விரோத நிலைப்பாடுகளை எடுத்து வருபவை என்று தெரிந்தும் இக்கட்சிகளுக்கு விடுதலை செய்யும் பொறுப்பை ஒப்படைப்பதன் மூலம் இவர்கள் விடுதலையை தடுப்பதாக பகிரங்கமாக குற்றம் சாட்டுகிறோம். இன்றய தேதியில் கூட பேரறிவாளன், முருகன், சாந்தன், நளினி, செயக்குமார், ராபர்ட்பயஸ், ரவிச்சந்திரன் ஆகியோரை உடனடியாக விடுதலை செய்துவிட முடியக் கூடிய அதிகாரம் இருந்தும் அதிமுக அரசு தட்டி கழிக்கிறது. இந்த நேர்மையற்ற செயலை திமுகவும், எதிர்க்கட்சி தேமுதிகவும் கண்டிக்காமலும், தங்களது தேர்தல் வாக்குறுதிகளில் முன்னிலைப்படுத்தாமலும் தவிர்க்கின்றன.

தமிழீழ அகதிகள், தமிழீழ ஆதரவு இயக்கங்கள் ஆகியவற்றினை ஒடுக்குவதற்காக பயன்படுத்தப்படும் விடுதலைப் புலிகள் மீதான தடையை நீக்குவது குறித்து தேர்தல் கட்சிகள் பகிரங்கமாக நிலைப்பாடு எடுக்கவேண்டும். இத்தடையை நீக்குவதை செயல்திட்டமாகவும், அரசியல் சாசன நிறுவனத்தின் கீழ் இல்லாமல் நேர்மையற்ற ஒரு நடவடிக்கையாக இதை செயல்படுத்தும் இந்திய அரசின் அதிகாரத்தினை கேள்விக்குள்ளாக்கும் நிலைப்பாடுகளை தமிழகத் தேர்தல் கட்சிகள் பகிரங்கமாக அறிவிக்க வேண்டும். விடுதலைப்புலிகள் இயக்கமாக இல்லை என்பதாக பகிரங்கமாக இந்திய அரசு அறிவித்த பின்னர், இந்த தடையை தமிழகத்தினை ஒடுக்குவதற்காகவே பயன்படுத்திவருகிறது. இத்தடையை நீக்குவது குறித்து தேர்தல் கட்சிகள் இதுவரை பகிரங்கமாக நிலைப்பாடு எடுக்கவில்லை என்பதை கவனத்தில் கொண்டுவர விரும்புகிறோம்.

தமிழினப்படுகொலை நிகழ்வதற்கு இந்திய அரசும் அதன் அதிகாரிகள், அமைச்சர்கள் ஆகியோர் உடந்தையாக இருந்தனர் என்பது அனைவரும் அறிந்ததே. இந்திய பாராளுமன்றத்தில் ஒப்புதல் வாங்காமலும், மக்கள் மன்றத்தில் இது குறித்து பகிரங்கமாக விவாதிக்காமலும் இந்திய அரசு இலங்கைக்கு துணையாக நின்று இனப்படுகொலையை செய்து முடித்தது. இந்த இனப்படுகொலையில் இந்திய அரசிற்கு பங்கு இருக்கிறது என்று ‘இனப்படுகொலைக்கான சர்வதேச வழக்கறிஞர்கள், அறிஞர்களாக’ செயல்பட்ட 14 அறிஞர்கள் ஜெர்மனியின் பிரேமன் நகரில் 2013 டிசம்பர் 10ஆம் தேதி பகிரங்கமாக அறிவித்ததை தமிழக கட்சிகள் கணக்கில் எடுத்துக்கொண்டு இந்திய அதிகாரிகள், அமைச்சர்களை சர்வதேச குற்றவாளிகளாக அறிவிக்கும் கொள்கையினை பகிரங்கமாக அறிவிக்க வேண்டும்.

சிறப்பு முகாம்கள் மூடப்பட வேண்டும். ஈழ அகதிகள் மீதான தமிழக க்யூ பிரிவினரின் கண்காணிப்பு, ஒடுக்குமுறை ஆகியவதை நிறுத்தப்படவேண்டும். ஈழ அகதிகளுக்கான அடிப்படை உரிமைகள், இந்தியா சர்வதேச அகதிகள் சாசனத்தில் கையெழுத்திடல் ஆகியவை குறித்து தேர்தல் கட்சிகள் பகிரங்கமாக அறிவிக்க வேண்டும்.

அமெரிக்க துணைத்தூதரக அதிகாரிகள் தமிழக தேர்தல் கட்சிகளை சென்று சந்தித்தது குறித்து பகிரங்கமான விசாரணை தேவை. தமிழகத்தின் உள் அரசியலில் தமிழினப்படுகொலையில் பங்கு பெற்ற ஒரு வெளிநாட்டு அரசின் அதிகாரிகள் தலையிடுவது வன்மையாக கண்டிக்கத் தக்கது. இந்திய ஜனநாயகத்தின் மீதான நம்பகத்தன்மையை கேள்விக்குள்ளாக்கும் செயலாக இதை பார்க்கிறோம். அமெரிக்காவின் இச்செயலை மே17 இயக்கம் வன்மையாக கண்டிக்கிறது.

தமிழக மீனவர்களை படுகொலைகளை செய்த இலங்கை அரச படையினர் மீது குற்றவழக்கு பதிவு செய்யாமல் தமிழக அரசு தவிர்த்து வருகிறது. இந்திய அரசின் கொள்கையை கண்டிக்கவோ, இந்திய அளவில் விவாதத்தினையோ அதிமுக, திமுக கொண்டுவரவில்லை. இந்தியாவின் பாதுகாப்பு கொள்கையும், வர்த்தக கொள்கையும் தமிழக மீனவர்கள் நலனுக்கு எதிராக இருக்கிறது. இக்கொள்கை குறித்த விவாதத்தினை முன்னெடுக்காமல் தமிழக மீனவர்கள் உயிரை பாதுகாக்க முடியாது. இதை தமிழக அரசியல் கட்சிகள் அறிக்கையில் கொள்கையாக வெளியிடுதல் அவசியம்.

தமிழகத்தின் வாழ்வாதார பிரச்சனைகளான கூடன்குளம், கல்பாக்கம் அணு உலைகள் மூடப்படவேண்டும். புதிய அணு உலைகள் திறக்கப்படக் கூடாது. முல்லைப்பெரியாறு அணை பாதுகாக்கப்படுதலும், கேரள அரசின் அத்துமீறலான புதிய அணையை தடுப்பது குறித்து பகிரங்கமாக அறிவிக்க வேண்டும். நியூட்ரினோ திட்டம், மீத்தேன் எரிவாயு, ஓ.என்.ஜி.சி நிறுவனங்கள் வெளியேற்றப்படுதல், கெயில் குழாய் பதிப்பு தடுத்து நிறுத்தப்படல் வேண்டும். கனிம வளக் கொள்ளையை தடுப்பதும், கொள்ளையர்கள் மீது நடவடிக்கை எடுப்பது குறித்தும் பகிரங்கமாக கட்சிகள் அறிவிக்க வேண்டும். குறிப்பாக தமிழகத்தின் சி.பி.எம் கட்சியினர் இது குறித்து கேரள சிபிஎம் கட்சியின் நிலைப்பாடுகளை கண்டிக்கவும், மறுக்கவும், எதிர்க்கவும் செய்யாமல் இருப்பதை மே17 இயக்கம் கண்டிக்கிறது. சி.பி.எம் கட்சியின் ஈழ எதிர்ப்பு, புலிகள் எதிர்ப்பு நிலைப்பாட்டினையும், செயல்படுதலையும் பகிரங்கமாக கண்டிக்கிறோம்.

உலக வர்த்தக ஒப்பந்தத்தில் தமிழக மக்களுக்கு தீங்கு விளைவிக்கும் வகையில் இந்திய அரசு கையெழுத்திட்டதை தமிழக கட்சிகள் இதுவரை கண்டிக்க முன்வரவில்லை. ரேசன் கடைகள் மூடப்படுதல், உணவு தானிய சேமிப்பு, விவசாய மானிய நீக்கு, தடையற்ற உணவு இறக்குமதி ஆகியவை தமிழகத்தின் விவசாயிகள், சிறுவர்த்தகம் ஆகியவற்றினை முழுவதுமாக முடக்குவதும், விவசாயிகளை தற்கொலைக்கு தள்ளுவதுமான இக்கொள்கையை தடுப்பதை பகிரங்கமாக தேர்தல் கட்சிகள் அறிவிக்க வேண்டும்.

சாதி ஆணவப்படுகொலைகளை அதிமுக அரசு ஊக்குவிக்கும் நிலைப்பாடுகளையே எடுத்துவருகிறது. இதை திமுக, தேமுதிக ஆகிய பிரதான கட்சிகள் கண்டிக்கவோ, நெருக்கடி கொடுக்கவோ முன்வரவில்லை. இந்த சூழலே ஒடுக்கப்பட்ட மக்கள் மீதான கொலைகள் நிகழ காரணமாக இருக்கிறது. இதை பகிரங்கமாக தேர்தல் கட்சிகள் கண்டிக்கவும், சட்டம் நிறைவேற்றுவதை கொள்கையாக அறிவிக்கவும் வேண்டும்.

இந்த நிலைப்பாடுகளை எடுக்காத கட்சிகள், குறிப்பாக பிரதான கட்சிகள் ஆகியவை ஈழம், தமிழக தமிழர் ஆகியோர் நலனுக்கு எதிராகவே இருக்கும். இக்கட்சிகள் தங்களது நிலைப்பாடுகளை மாற்ற வேண்டும். இல்லாது போகும் பட்சத்தில், இவர்களுக்கு எதிரான பிரச்சாரத்தினை மே பதினேழு இயக்கத் தோழர்கள் முன்னெடுப்பார்கள்.

மே பதினேழு இயக்கம்
98840 72010

Leave a Reply