தமிழறிஞர் அய்யா.அரணமுறுவல் அவர்கள் இன்று காலை திருநெல்வேலியில் மறைந்தார். அனைத்து தமிழ் மொழி உரிமைப் போராட்டங்கள், தமிழினப் பாதுகாப்பு போராட்டங்கள், வாழ்வுரிமைச்சார்ந்த போராட்டங்களில் பங்கெடுத்தவர், முன்னனியில் நின்ற மூத்த அறிஞர்.
அவரது மொழிசார்ந்த தொடர் உழைப்பு போற்றுதலுக்குரியது. தொடர்ச்சியான தமிழ் இதழ்களை வெளிக்கொணர்ந்தவர் அய்யா.அரணமுறுவல் அவர்கள்.
தமிழியக்கம் எனும் இதழ் இவ்வகையில் குறிப்பிடத் தக்கது. . 1980 களில் தமிழெழுச்சி மேலிட கிளர்ந்து எழுந்த இதழ்கள் பல. அவற்றுள் ந.அரணமுறுவல் அவர்களால் தொடங்கப்பட்ட இந்த ’தமிழியக்கம்’ எனும் இதழ் தனித்துவம் மிக்கது. இதழோடு மட்டுமல்லாமல் தமிழன்பர்களை இணைத்து இயக்கம் கட்டவும் ஊக்குவித்த இதழிது. அரசியல், தமிழ், பகுத்தறிவு, விழிப்புணர்வு என்கிற அனைத்துக் கோணங்களிலும் படைப்புகளை வெளியிட்டு, மக்கள் விழிப்புணர்வு இதழாக மலர்ந்துள்ளது.
பாவாணர் அவர்கள் சிறப்பாசியராக இருந்த முதன்மொழி இதழை நடத்தி வரும் பணியை சிறப்பாக செய்துவந்தவர் அய்யா.அரணமுறுவல். ( முதன்மொழி. 1971 ஆம் ஆண்டு உலகத்தமிழ்க் கழகத்தின் தொடர்பு இதழாக திங்கள் ஒரு முறை மலருகிற தெளிதமிழ் இதழாக பேராசிரியர் தி.வை.சொக்கப்பனார் அவர்களால் தமிழ்க்குடில், அளகாபுரம், சேலம் 4 லிருந்து வெளிவந்த இதழ். துணை ஆசிரியர் அரிமாப்புலவர். சிறப்பாசிரியர் மொழிநூல் மூதறிஞர் ஞா.தேவநேயப்பாவாணர். ) இன்றும் இந்த இதழை மிகச்சிறப்பாக கொண்டுவரும் பெரும்பணியை செய்த அறிஞரின் இழப்பு பெரும் துயரத்தினை ஏற்படுத்தியிருக்கிறது.
அவரது மறைவு பேரிழப்பாக இன்று வந்திருக்கிறது. யாரும் எதிர்பார்த்திராத இந்த இழப்பின் துயரத்தினை மே17 இயக்கம் தமிழ்த்தேசிய மக்களோடு பகிர்ந்து கொள்கிறது