மலையாள மனோரமாவிற்கான அனுமதியை ரத்து செய்ய வேண்டும்! பப்பாசி நிர்வாகத்திற்கு மே பதினேழு இயக்கத்தின் வேண்டுகோள்!
கேரளாவில் பொய்ச் செய்திகளை வெளியிடுவதில் முன்னணியில் இருப்பது மலையாள மனோரமா பத்திரிக்கையாகும். ஒருபக்கச் சார்பான செய்திகள், பொய்ச் செய்திகள், வன்மத்தைத் தூண்டும் செய்திகள் இவைதான் மலையாள மனோரமாவின் இதழியல் தர்மமாக இருக்கின்றது. காங்கிரஸ் கட்சியின் ஊதுகுழலாக, இடதுசாரி இயக்கங்களைக் கொச்சைப்படுத்தி செய்தி வெளியிட மலையாள மனோரமா எப்போதும் கூச்சப்பட்டதில்லை.
முல்லைப் பெரியாறு அணையை நம்பி, வேளாண்மையில் ஈடுபட்டிருக்கும் 5 மாவட்ட தமிழக விவசாயிகளின் பிழைப்பின் மண் அள்ளிப் போடும் வேலையை முதலில் தொடங்கி வைத்தது மலையாள மனோரமாதான்.
1970களில் கேரள காங்கிரஸ் கட்சிக்கு ஆலோசனை சொல்லக்கூடியவராக இருந்தவரும், மலையாள மனோரமாவின் தலைமைப் பொறுப்பிலிருந்தவருமான திரு.பட்ரோஸ் சும்மாரால்தான் கேரளாவில் அனைத்தும் தொடங்கியது.
1976-இல் அமைக்கப்பட்ட இடுக்கி அணை தொடங்கிய நாளிலிருந்து தேவையான அளவு நீரைத் தேக்க முடியவில்லை என்பது குறித்து ஏமாற்றமுற்று இருந்த அன்றைய கேரள மாநில மின்சாரத் துறை தலைமைப் பொறியாளரும் தற்போது கேரள அரசு ஆலோசகருமான எம்.பி.பரமேசுவரன் நாயர், முல்லைப் பெரியாறு அணையை உடைத்தால் இடுக்கி அணை நிரம்பும் என்று ஆலோசனை கூறினார்.
அணையை உடைப்பதற்கு முதல்படியாக அணை குறித்த அச்சத்தை மக்களிடம் உருவாக்க வேண்டும் என்று திட்டமிட்ட கேரள காங்கிரஸ் அரசு, தனக்கு விசுவாசமான மலையாள மனோரமாவை அணுகியது. அதனையடுத்து, 1978இல் முதன் முதலாக ‘முல்லைப் பெரியாறு போட்டான் போருன்னு’ (முல்லைப் பெரியாறு வெடிக்கப் போகிறது) என்று முற்றிலும் பொய்யான தகவல்களுடன் ஒரு தலைப்புச் செய்தியை மலையாள மனோரமா வெளியிட்டது. மலையாள மனோரமாவால் முதலில் உருவாக்கப்பட்ட ‘அச்சம்’ பின்னர் பிற மலையாள செய்திஏடுகளால் கையிலெடுக்கப்பட்டன.
அன்றிலிருந்து இன்றுவரை முல்லைப் பெரியாறு விவகாரத்தில் கேரள அரசையும், கேரள மக்களையும் தூண்டிவருகிறது மலையாள மனோரமா. கடந்த டிசம்பர் 9ம் தேதி அணையை உடைக்க வேண்டும் என்று மலையாள மனோரமா ஊழியர்கள் போராட்டம் நடத்தினார்கள். முதலாளியின் ஒப்புதல் இல்லாமல், பத்திரிக்கை நிறுவனத்தின் பெயரில் ஊழியர்கள் போராட்டம் நடத்தியிருக்க முடியாது. இந்தளவிற்கு முல்லைப் பெரியாறு விவகாரத்தில் தமிழர்களுக்கு எதிராக மலையாள மனோரமா நிறுவனமும், அதன் ஊழியர்களும் கைகோர்த்து செயல்படுகிறார்கள்.
தமிழர்களுக்கு விரோதமாக பொய்ச் செய்திகளையும், போராட்டத்தையும் தூண்டிவரும் மலையாள மனோரமாவை, சென்னைப் புத்தகக் கண்காட்சியில் கடை விரிக்க அனுமதிப்பது நம் கண்முன்னே நமக்கெதிரான ஆயுதத்தை தயாரிக்க அனுமதிப்பதற்குச் சமம். எனவே, ஐந்து மாவட்ட தமிழக விவசாயிகளின் உணர்வுகளைக் கருத்தில் கொண்டு, இந்தக் கடைக்கு வழங்கப்பட்ட அனுமதியை ரத்து செய்ய வேண்டும்; தமிழர்களோடு ஒன்றுபட்டு நிற்க வேண்டும் என பப்பாசி நிர்வாகிகளை மே பதினேழு இயக்கம் கேட்டுக் கொள்கிறது.
சென்னை புத்தகக் கண்காட்சியில், முல்லைப்பெரியாறு அணையைப் பற்றிய தவறான செய்திகளை முதன்முதலில் 70களில் வெளியிட்டு மலையாளிகளை தமிழர் அணைக்கு எதிராக திசைதிருப்பிய “மலையாள மனோரமா” வின் நூல் அரங்கினை புத்தகக் கண்காட்சியை விட்டு வெளியேற்ற கோரி போராட்டம்.
8/1/2012