ஆயிரமாயிரம் ஆண்டுகளாக, நம் ஊனோடும், குருதியோடும், உணர்வோடும், பின்னிப்பிணைந்து உள்ள தொப்புள் கொடி உறவுகளாம் ஈழத்தமிழ்க் குலத்தை, வேருடன் அழிக்க, இனக்கொலை நடத்தினான் சிங்களன். இந்திய அரசின் துரோகத்தாலும், அணு ஆயுத வல்லரசுகளின் ஆயுத உதவியாலும், சமர்க்களத்தில் நிகரற்ற வீரர் கூட்டமாம் விடுதலைப்புலிகளுக்கு, யுத்தகளத்தில் தற்காலிக வீழ்ச்சியை, மகிந்த ராஜபக்சேயின் கொலைகார அரசு ஏற்படுத்தியது. 2009 மே மாதம் தமிழரை இரத்த வேட்டையாடினான் இராஜபக்சே. இலட்சக்கணக்கான தமிழர்கள் துடிக்கத் துடிக்கக் கொல்லப்பட்டனர். அவர்கள் எழுப்பிய அவலக்குரல், அவர்கள் சிந்திய இரத்தத்துளிகள், வாழும் தமிழர்களைக் கடமையாற்ற அழைக்கின்றது.
தமிழர் தாயகத்தில் இருந்து, சிங்கள இராணுவமும், போலீசும், முற்றாக வெளியேற்றப்பட வேண்டும். அக்கிரமமாகக் குடியேற்றப்பட்ட சிங்களவர் அனைவரும் வெளியேற்றப்பட வேண்டும்.
சுதந்திரத் தமிழ் ஈழம் அமைய, ஈழத்தமிழர் தாயகத்தில் அனைத்துலக நாடுகளின் மன்றம், பொது வாக்கெடுப்பு நடத்த வேண்டும். தரணியெங்கும் பல்வேறு நாடுகளில் வாழும் ஈழத்தமிழர்கள், தற்போது வாழும் நாடுகளிலேயே அந்த வாக்கெடுப்பில் பங்கேற்க, ஐ.நா. மன்றம் வழிமுறைகளை அமைத்திட வேண்டும்.
சுதந்திரத் தமிழ் ஈழம்; அதற்கான பொது வாக்கெடுப்பு. இதுவே, தமிழ் இனத்தின் இலக்கு. அதை வென்றெடுக்க, இளைய தலைமுறை வஞ்சினம் உரைக்கத் திரண்டிடும் நாள்தான் மே 20.
தமிழனுக்கு வீழ்ச்சி இல்லை; ஈழ விடுதலைப் போரின் அலைகளும் ஓய்வது இல்லை என்பதை உலகுக்குப் பிரகடனம் செய்வோம்.தங்கள் தாயக மண்ணில், சுதந்திரத் தமிழ் ஈழ அரசை, ஈழத்தமிழர்கள் நிறுவுதல் உறுதி.
ஈழத்தமிழ் இனப் படுகொலை நடத்திய சிங்களப் பேரினவாதக் கொலைகார அரசையும், கொடியோரையும் அனைத்து உலக நீதிமன்றத்தின் குற்றக் கூண்டில் நிறுத்திட, தாய்த்தமிழகம் சூளுரைக்க, சென்னையில் தமிழர் கடற்கரையில், கண்ணகி சிலை அருகே மே 20 ஞாயிற்றுக்கிழமை அன்று மாலை 5.00 மணிக்குத் திரளுவோம்!
இருபதாம் தேதி அந்தி நெருங்கும் வேளையில், சுடர்களை ஏந்துவோம். ஈழ விடுதலைப் போரில் மடிந்த, மாவீரர்களுக்குப் புகழ்ச் சுடர்களை உயர்த்துவோம்.
தாய்மாரே, பெரியோரே, நல்லிளம் வேங்கைகளே, அணிதிரண்டு வாருங்கள்.
இனக்கொலையால் மடிந்த நம் இரத்த உறவுகளுக்கு நினைவேந்தல் சுடர் ஏந்துவோம்.
மே 17 இயக்கமும், பெரியார் திராவிடர் கழகமும் ஏற்பாடு செய்து உள்ள இந்த நினைவேந்தல் நிகழ்ச்சியில், தமிழர் கடல் எதிரே, தாயகத்தின் மக்கள் கடல் திரண்டிட, உங்கள் சகோதரன் வைகோ இருகரம் கூப்பி அழைக்கின்றேன்.
வைகோ
பொதுச் செயலாளர்,
மறுமலர்ச்சி தி.மு.க
‘தாயகம்’
சென்னை – 8
16.05.2012
http://mdmk.org.in/ta/article/may12/may-20-welcomes-all-beach