


மறைந்த முன்னாள் முதலமைச்சர் திரு மு. கருணாநிதி அவர்களுக்கு வங்கக்கடலில் தமிழ்நாடு அரசு சார்பில் பேனா வடிவ நினைவுச் சின்னம் அமைப்பதற்கான பொதுமக்கள் கருத்துக் கேட்பு கூட்டம் தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் சார்பில் கடந்த ஜனவரி 31 அன்று சென்னை கலைவாணர் அரங்கில் நடத்தப்பட்டது. அந்த கூட்டத்தில், மே பதினேழு இயக்கம் சார்பாக ஒருங்கிணைப்பாளர் தோழர் திருமுருகன் காந்தி அவர்கள் பங்கேற்று கருத்துக்களை பதிவு செய்திருந்தார். அந்த கூட்டத்தின் குறிப்புகள் (Minutes of Meeting) என்று ஓர் ஆவணம் வெளியாகியது. அதில் மே பதினேழு இயக்கம் பதிவு செய்ததாக குறிப்பிடப்பட்டுள்ள பகுதியில், தோழர் திருமுருகன் காந்தி அவர்கள் கூறியது தவறாக புரிந்துக்கொள்ளப்பட்டு, பேனா சின்னம் அமைக்க ஆதரவளிப்பதாக பதிவு செய்யப்பட்டுள்ளது தெரியவந்தது. இதனையடுத்து, பேனா சின்னத்தை கடலில் அமைக்க மே பதினேழு இயக்கம் ஆதரவளிக்கவில்லை என்னும் நிலைப்பாட்டை விளக்கி, சென்னை மாவட்ட ஆட்சியர் திருமிகு அமிர்தஜோதி அவர்களை 24-02-2023 வெள்ளி அன்று தோழர் திருமுருகன் காந்தி அவர்கள் நேரில் சந்தித்து, கருத்துக்கேட்பு கூட்டத்தின் கருத்தை திருத்திக்கொள்ளுமாறு கடிதம் அளித்தார்.
மே பதினேழு இயக்கம்
9884864010