ஒரிசா மாநிலம் புவனேஸ்வரில் உள்ள உட்கல் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற கருத்தரங்கில் உட்பகுந்து ஜனநாயக சக்திகளை கொடூரமாக தாக்கிய ஆர்எஸ்எஸ்-ஏபிவிபி அமைப்பைச் சேர்ந்தவர்களை உடனடியாக கைது செய்! – மே பதினேழு இயக்கம்
நேற்று (12.02.2023) ஞாயிற்றுக்கிழமை ஒரிசா மாநிலம் புவனேஸ்வரியில் உள்ள உட்கல் பல்கலைக்கழகத்தில் ‘அரசியல் அமைப்பு சட்டமும் கல்வியும்’ என்கிற தலைப்பில் அரைநாள் கருத்தரங்கை ஒரிசாவை மையமாகக் கொண்ட குடிமக்கள் இயக்கமும், தமிழகத்தின் வான்முகில் அமைப்பும் இணைந்து நடத்தி இருக்கிறது.
இந்த கருத்தரங்கில் டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தை சேர்த்த பேராசிரியர் சுர்ஜித் மஜீம்தார் கலந்துகொண்டு சிறப்புரை ஆற்றி இருக்கிறார். அவர் பேச ஆரம்பிக்கும் பொழுது வேண்டுமென்றே அரங்கிற்குள் இருந்த சிலர் கூச்சலிட்டு கருத்தரங்கில் தொல்லை கொடுத்திருக்கிறார்கள்.
உடனே பேராசிரியர் சுர்ஜித் மஜிம்தார் அவர்கள் உங்களுக்கு என்ன சந்தேகம் என்றாலும் கேளுங்கள் பதில் சொல்கிறேன். ஏன் தேவையில்லாமல் கூச்சலிடுகிறீர்கள் என்றும், கேள்வி பதில் என்ற ஒரு நேரம் ஒதுக்கப்பட்டிருக்கிறது அதில் கேள்வி கேளுங்கள் பதில் சொல்கிறோம் என்று சொல்லி இருக்கிறார். ஆனால் மீண்டும் மீண்டும் அவர்கள் கூச்சலிட்டுக் கொண்டே இருந்திருக்கிறார்கள்.
இதனால் சந்தேகமடைந்த விழா ஏற்பாட்டாளர்கள் கூச்சலிட்டவர்களிடம் உங்களது அடையாள அட்டையை காட்டுங்கள் நீங்கள் எந்த கல்லூரி மாணவர்கள் என்று கேட்டிருக்கிறார்கள். அப்போது அவர்கள் அடையாள அட்டையை கொடுக்காமல் விழா ஏற்பாட்டாளர்களை தாக்கி ஆரம்பித்து அரங்கையும் சேதப்படுத்தியிருக்கிறார்கள். அவர்களை தடுக்க முயன்ற வான்முகில் அமைப்பின் செயற்பாட்டாளர் தோழர் பிரிட்டோ உட்பட, வழக்கறிஞர்கள், மனித உரிமை செயற்பாட்டாளர்கள் என பலரை கடுமையாக தாக்கியுள்ளனர்.
தோழர் பிரிட்டோ தமிழ்நாட்டில் பல்வேறு மக்கள் போராட்டங்களில் பங்கெடுத்தவர். மனித உரிமை மீறல்களுக்கு எதிராக செயல்படுபவர். நீண்டநாள் அனுபவம் கொண்டவர். தமிழ்நாட்டிலிருந்து சென்ற தோழர் பிரிட்டோ வன்முறையாளர்களை தடுக்கமுயன்ற போது கடுமையான தாக்குதல் நடத்தப்பட்டது. இது வன்மையான கண்டனத்திற்குரியது.
இறுதியில் கூச்சலிட்டவர்களை விசாரிக்கும் பொழுது அவர்கள் அனைவரும் ஆர்எஸ்எஸ் மற்றும் ஆர்எஸ்எஸ்சின் மாணவர் அமைப்பான ஏபிவிபி-ஐ சேர்ந்தவர்கள் என்றும், இந்த கருத்தரங்கை நடக்க விடாமல் தடுத்து நிறுத்த வேண்டும் என்பதற்காக திட்டமிட்டு உள்ளே நுழைந்தவர்கள் என்றும் அதில் பெரும்பாலானவர்கள் மாணவர்களே இல்லை என்பதும் கண்டுபிடித்து இருக்கிறார்கள்.
ஆர்எஸ்எஸ்-ஏபிவிபி-யின் இந்த கொடூர தாக்குதலில் விழா ஏற்பாட்டுளர்கள் பலருக்கு காயம் ஏற்பட்டிருக்கிறது. இரண்டு பேர் மருத்துவமனையில் சேரும் அளவிற்கு கொடூரமாக தாக்கி இருக்கிறார்கள். கலவரம் செய்த இரண்டு பேரை காவல்துறை கைது செய்திருக்கிறது என்றாலும் கலவரத்தை தூண்டிய ஆர்எஸ்எஸ் மற்றும் ஏபிவிபி அமைப்பை சேர்ந்தவர்கள் யாரும் இன்னும் கைது செய்யப்படவில்லை.
இந்தியா முழுவதும் பல்வேறு கல்வி நிலையங்களில் நடைபெறும் இது போன்ற கருத்தரங்குகளை நடத்தவிடாமல் செய்வதே ஆர்எஸ்எஸ்-ஏபிவிபி-யின் நோக்கமாக உள்ளது. முற்போக்கு கருத்துக்கள் மாணவர்கள் மத்தியில் விவாதிக்கப்படுவதை அவர்கள் விரும்புவதில்லை. டில்லி நேரு பல்கலைக்கழகம், ஜாமியா மிலியா பல்கலைக்கழகம், அலிகார் முஸ்லிம் பல்கலைக்கழகம் என இவர்கள் தொடர்ச்சியாக கலவரங்களை உண்டுபண்ணி வருகின்றனர்.
ஆர்எஸ்எஸ்-ஏபிவிபி-யின் இத்தகைய அராஜக போக்கு உடனடியாக தடுத்துநிறுத்தப்பட வேண்டும். இந்தியா முழுவதும் கல்வி நிறுவனங்களில் ஏபிவிபி தடை செய்யப்பட வேண்டும். ஒரிசாவில் தாக்குதலில் ஈடுபட்டவர்கள் மட்டுமல்லாது, அதற்கு பின்னணியாக செயல்பட்ட அனைவரையும் கைது செய்ய வேண்டுமென மே பதினேழு இயக்கம் வலியுறுத்துகிறது. தாக்கப்பட்ட தோழர் பிரிட்டோ உள்ளிட்டவர்களுக்கு மே பதினேழு இயக்கம் உறுதுணையாக நிற்கும் என கூறிக்கொள்கிறோம்.
மே பதினேழு இயக்கம்
9884864010