அதிமுக-திமுக அரசுகளின் வஞ்சகத்தால் சிறையிலேயே மடிந்தார் சகோதரர் அபுதாகிர்! நீண்டகால ஆயுள் சிறைவாசிகளை உடனடியாக விடுவித்திடுக! – மே பதினேழு இயக்கம்
கோவை சிறையில் 25 ஆண்டுகளுக்கு மேலாக அடைக்கப்பட்டிருந்த ஆயுள் சிறைவாசியான சகோதரர் அபுதாகிர் அவர்கள் உடல்நிலை நலிவுற்று சிறையிலேயே மரணமடைந்திருக்கிறார் என்ற செய்தி மிகுந்த அதிர்ச்சிக்குரியது. ஏழு தமிழர் விடுதலையோடு அபுதாகிர் உள்ளிட்ட நீண்டகால ஆயுள் சிறைவாசிகளின் விடுதலைக்காக மே பதினேழு இயக்கம் தொடர்ந்து போராடி வந்துள்ளது. இந்நிலையில் அபுதாகிர் அவர்களை மீட்க இயலாமல் போனது வருத்தமளிக்கிறது. ஆயுள் சிறைவாசிகள் விடுவிப்பில் முந்தைய அதிமுக அரசு நன்னடத்தைகள் அல்லாத கட்டுப்பாடுகளை விதித்து அரசாணை வெளியிட்டதாலும், திமுக அரசு அதனை நீட்டித்ததாலும், விடுதலை தள்ளிப்போக, அபுதாகிர் அவர்கள் சிறையிலேயே மடிந்து போக வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
ஆயுள் தண்டனை என்பதை சுட்டிக்காட்டி இசுலாமிய ஆயுள் சிறைவாசிகளை நீண்டகாலமாக சிறையிலேயே வைத்து கொடுமைப்படுத்தும் நிகழ்வு நாடு முழுவதும் அரங்கேறி வருகிறது. அதற்கு தமிழ்நாடும் விதிவிலக்கல்ல என்பதை நிரூபிக்கும் வண்ணம் தமிழ்நாட்டில் நீண்டகால இஸ்லாமிய சிறைவாசிகள் விடுவிக்கப்படாமல் சிறையிலே வைக்கப்பட்டுள்ள கொடுமை நடந்து வருகிறது. குறிப்பாக கோவை சிறையில் 20 ஆண்டுகளுக்கு மேலாக சிறை தண்டனை அனுபவித்து வரும் ஆயுள் சிறைவாசிகள் அநேகர் உண்டு. அப்படியானவர்களில் ஒருவர்தான் அபுதாகிர் அவர்கள்.
அபுதாகிர் அவர்கள் உடல் உறுப்புகள் ஒவ்வொன்றாக செயலிழந்து போகும் ஒருவித அரிய வகை நோயினால் பாதிக்கப்பட்டு கடந்த சில ஆண்டுகளாகவே கடும் அவதிக்குள்ளாகி வந்தார். அரசிடம் பல முறை முறையிட்டும் முந்தைய அதிமுக அரசு மனிதாபிமான அடிப்படையில் கூட அவரை விடுவிக்க மறுத்துவிட்டது. அதே நிலையை தற்போதைய அரசும் கடைபிடித்து வருகிறது. இதனால் தகுந்த சிகிச்சை பெற முடியாமல் அபுதாகிர் அவர்கள் கடும் அவதிக்குள்ளாகி சிறையிலேயே மடிந்துபோகும் நிலை ஏற்பட்டது. திமுக அரசின் இத்தகைய போக்கு கண்டனத்திற்குரியது.
பெருந்தலைவர்கள் பிறந்த நாளில் மாநில அரசின் உரிமையான அரசியலமைப்புச் சட்டம் பிரிவு 161-ன் கீழ் நீண்டகால சிறைவாசிகளை விடுவிப்பது தமிழ்நாட்டில் இருந்து வரும் வழக்கம் ஆகும். அப்படியாக 14 ஆண்டுகளுக்கு மேல் சிறைவாசம் முடித்த ஆயுள்சிறைவாசிகளை கடந்த காலங்களில் திமுக மற்றும் அதிமுக அரசுகள் விடுவித்து வந்துள்ளன. கடந்த 2018-ம் ஆண்டு எம்ஜிஆரின் நூற்றாண்டு விழா-ஜெயலலிதாவின் 70 வது பிறந்தநாளை முன்னிட்டு 1500 பேரை அதிமுக அரசும், கடந்த 2021-ம் ஆண்டு அறிஞர் அண்ணாவின் 113-வது பிறந்த நாளை முன்னிட்டு 700 பேரை தற்போதைய திமுக அரசும் 10 ஆண்டுகளுக்கு மேலான ஆயுள் சிறைவாசிகளை விடுதலை செய்வதாக அறிவித்தது. அவர்களில் ஒருவர் கூட இஸ்லாமியர் இல்லை என்பது வருந்தத்தக்கது.
ஏழு தமிழர்கள் மற்றும் இஸ்லாமிய சிறைவாசிகளின் விடுதலையை தடுக்கும் வகையில், குறிப்பாக இஸ்லாமியர்களை வஞ்சிக்கும் வகையில், குறிப்பிட்ட வகையான வழக்குகளில் தண்டனை பெற்றவர்களை விடுவிக்க இயலாது என்று பாஜகவுடன் கூட்டணியில் இருந்த முந்தைய அதிமுக அரசு கட்டுப்பாடுகள் விதித்து அரசாணை வெளியிட்டிருந்தது. இது, மாநிலங்களுக்கு அரசியலமைப்புச் சட்டம் வழங்கியுள்ள உரிமையை முந்தைய அதிமுக அரசு அடகு வைப்பதாக அமைந்தது. புதிதாக பதவியேற்ற திமுக அரசும் அதே அரசாணையை நீட்டித்ததுடன், முன்விடுதலை தொடர்பான வழிமுறைகளை ஆராய ஓய்வு பெற்ற நீதிபதி ஆதிநாதன் தலைமையில் 6 பேர் கொண்ட குழு அமைத்தது. இதனால் நீண்டகால ஆயுள் சிறைவாசிகள், குறிப்பாக இஸ்லாமிய சிறைவாசிகளின் முன்விடுதலை தள்ளிப் போய்க்கொண்டிருக்கிறது. இது சிறைவாசிகளை வஞ்சிப்பதாகும்.
தமிழ்நாடு அரசு நீண்டகால சிறைவாசிகளை விடுதலை செய்வதில் தனது உரிமையை பயன்படுத்த தயங்குவதனால் பலர் சிறையிலேயே வாழ்நாளை கழிக்க வேண்டிய நிலைக்கு தள்ளியுள்ளது. சிறை என்பது குற்றவாளிகளை நல்வழிப்படுத்தி மீண்டும் சமூகத்துடன் இயைந்து வாழ புனர்வாழ்வு அளிக்கும் நோக்கத்துடன் செயல்படுவை. ஆனால் அபுதாகிர் போன்றோர் தங்களது வாழ்வை சிறையிலேயே முடிக்கும் நிலைக்கு தள்ளுகிறது. மேலும், அரசியல் மற்றும் காலசூழல் காரணமாக அநீதி இழைக்கப்பட்டவர்களும் சிறைவாசிகளாகின்ற நிலையில், ஆயுள் தண்டனை சிறைவாசிகள் மீண்டும் தங்கள் வாழ்வை பெற வாய்ப்பு அளிக்கப்பட வேண்டியது அவசியம்.
இத்தகைய காரணங்களால், அபுதாகிர் உள்ளிட்ட 10 ஆண்டுகள் சிறையில் கழித்த ஆயுள் சிறைவாசிகள் அனைவரையும் விடுவிக்க வேண்டுமென மே பதினேழு இயக்கம் கடந்த 13 ஆண்டுகளாக போராடி வருகிறது. 2012-ம் ஆண்டில் அபுதாகிர் அவர்களை விடுவிக்க வேண்டுமென மே பதினேழு இயக்கம் குரல் கொடுத்தது. நீண்டகால ஆயுள் சிறைவாசிகளை விடுவிக்கக் கோரி இஸ்லாமிய அமைப்புகள் நடத்திய கூட்டங்கள் அனைத்திலும் மே பதினேழு இயக்கம் பங்கெடுத்து, அபுதாகிர் உள்ளிட்டோரின் விடுதலைக்காக தொடர்ந்து பேசி வந்துள்ளது.
ஏழு தமிழர்கள் மற்றும் இஸ்லாமிய சிறைவாசிகளின் விடுதலையை தடுக்க ஒன்றிய பாஜக அரசின் அழுத்தத்தின் பேரில் முந்தைய அதிமுக அரசு பல ஆண்டுகளாக முன்விடுதலை செய்யாமல் இருந்தது. பின்னர் எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவை ஒட்டிய முன்விடுதலை அறிவிப்பின் போது, கட்டுப்பாடுகளை விதித்து இஸ்லாமிய ஆயுள் சிறைவாசிகள் விடுதலை அடைவதை சிக்கலாக்கியது. நீண்டகால ஆயுள் சிறைவாசிகளை விடுவிப்போம் என்று தேர்தலில் வாக்குறுதி கொடுத்து வெற்றி பெற்ற திமுக அரசும், அவர்களது விடுதலையை மறுப்பது அறமற்ற செயலாகும். இஸ்லாமிய சிறைவாசிகளை வஞ்சிக்கும் ஒன்றிய பாஜக அரசின் நிலைப்பாட்டிற்கு ஆதரவாக திமுக அரசு செயல்படுவதை உடனடியாக நிறுத்த வேண்டும்.
சிறைவாசிகளை விடுவிக்க மாநில அரசுக்கு அரசியலமைப்புச் சட்டம் வழங்கியுள்ள உரிமையை பயன்படுத்துவதற்கு எவ்வித கட்டுப்பாடுகளும் இல்லாத நிலையில், தமிழ்நாடு அரசு தனது உரிமையை பயன்படுத்துவதற்கு தயங்குவது, அந்த உரிமையை விட்டுக்கொடுப்பதற்கு ஒப்பாகும். ஆகவே, நீதியரசர் ஆதிநாதன் பரிந்துரைக்காக காத்திராமல் நீண்டகால ஆயுள் சிறைவாசிகள் அனைவரையும் உடனடியாக விடுவிக்க வேண்டுமென மே பதினேழு இயக்கம் வலியுறுத்துகிறது.
மே பதினேழு இயக்கம்
9884864010
10/02/2023