‘கள்ளக்குறிச்சி மாவட்டம் மூங்கில்துறைப்பட்டில் பட்டியலின மக்கள் மீது நடத்தப்பட்ட சாதிய தாக்குதல் குறித்து நடவடிக்கை எடுத்தல் மற்றும் கள ஆய்வு அறிக்கை வெளியீடு’ குறித்த ஊடகச் சந்திப்பு

‘கள்ளக்குறிச்சி மாவட்டம் மூங்கில்துறைப்பட்டில் பட்டியலின மக்கள் மீது நடத்தப்பட்ட சாதிய தாக்குதல் குறித்து நடவடிக்கை எடுத்தல் மற்றும் கள ஆய்வு அறிக்கை வெளியீடு’ குறித்த ஊடகச் சந்திப்பு 08-02-2023 அன்று சென்னை பத்திரிகையாளர் மன்றத்தில் நடைபெற்றது. மே பதினேழு இயக்கம் சார்பாக ஒருங்கிணைக்கப்பட்ட இந்த ஊடகச் சந்திப்பில் மே பதினேழு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் தோழர் திருமுருகன் காந்தி, விடுதலைத் தமிழ்ப்புலிகள் கட்சியின் தலைவர் தோழர் குடந்தை அரசன், திராவிடத் தமிழர் கட்சியின் தலைவர் தோழர் வெண்மணி, அனைத்திந்திய சனநாயக மாதர் சங்கத்தின் தோழர் வாலண்டினா, தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் தோழர் பா.சுகந்தி ஆகியோர் பங்கேற்றனர்.

அறிக்கை:

மூங்கில்துறைப்பட்டில் நடந்த சாதிய வன்முறை குறித்த ஊடகவியலாளர் சந்திப்பு – 8/2/2023

அண்மை காலங்களில் ஒடுக்கப்பட்ட மற்றும் பட்டியலின மக்கள் மீது நடைபெறும் சாதி ரீதியான வன்முறைகள் தொடர்ந்து அதிகரித்த வண்ணம் இருக்கின்றன. இதை மே17 இயக்கம் போன்ற சனநாயக அமைப்புகள் தொடர்ந்து அம்பலப்படுத்தி வருகின்றோம். வீரளூர், வேங்கைவயல், கிளாமங்கலம் கிராமங்களில் நடந்த சாதிய வன்முறைகளைத் தொடர்ந்து தற்போது கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் ஒன்றியம் மூங்கில்துறைப்பட்டு அம்பேத்கர் நகரில் ஆதிக்க சாதி வெறியர்கள் பட்டியலின மக்கள் மீது வன்முறையை கட்டவிழ்த்து விட்டுள்ளனர்.

கடந்த ஜனவரி18 அன்று தொண்டமனூர் கிராமத்தில் நடந்த பொங்கல் கலை நிகழ்ச்சிகளைக் காண சென்ற அம்பேத்கர் நகர் இளைஞர்கள் மீது திட்டமிட்டு ஆதிக்க சாதியினர் வன்முறை தாக்குதல் நடத்தியுள்ளனர். குறிப்பாக அம்பேத்கர் நகர் இளைஞர்கள் அணிதிருந்த நீல நிற சட்டைகளை கழட்ட செய்து, ஆதிக்க சாதி சமூக விரோதிகள் தாங்கள் அணிந்திருந்த மஞ்சள் நிற சட்டைகளை வணங்கும்படி செய்து அவமானப்படுத்தியுள்ளனர். தொடர்ந்து ஜனவரி 19 அன்று ஆதிக்க சாதியினர் சாலை மறியல் செய்துள்ளனர். மேலும் 200க்கும் மேற்பட்ட சமூக விரோதிகள் மது போதையில் அம்பேத்கர் நகருக்குள் நுழைந்து வன்முறை வெறியாட்டங்களை கட்டவிழ்த்து விட்டுள்ளனர். ஆயுதங்களுடன் நுழைந்து, சாதிப் பெயரை இழிவாக கூச்சலிட்டபடியும் பெண்கள் குழந்தைகளை கொச்சையாகப் பேசியும் அச்சுறுத்தியுள்ளனர். கண்ணில் பட்ட பொருட்களை எல்லாம் சூறையாடி மிரட்டல் விடுத்துள்ளனர்.

திட்டமிட்டு நடைபெற்ற இந்த வன்முறை தாக்குதல் குறித்து ஆதிக்க சாதியினர் முன்னரே சமூக வலைத்தளங்களில் பகிர்ந்ததும் அம்பேத்கர் நகர் மக்களை மிரட்டி உள்ளதும் அதிர்ச்சி அளிக்கிறது. இந்த சாதி வெறி தாக்குதலை நாங்கள் வன்மையாக கண்டிக்கின்றோம். தற்போது இரு தரப்பிலிருந்தும் இளைஞர்களை காவல்துறை கைது செய்துள்ளது. ஆனால் இவ்வன்முறையைத் தூண்டிவிட்ட முக்கிய குற்றவாளிகளை இதுவரை காவல்துறை கைது செய்யவில்லை.

இந்த வன்முறைக்குத் தொடர்பில்லாத பட்டியலின இளைஞர்கள் மேல் பதியப்பட்ட வழக்குகள் ரத்து செய்யப்பட வேண்டும். மேலும் வன்முறை வெறியாட்டங்களில் ஈடுபட்ட ஆதிக்க சாதியினர் 200 பேரும் காணொளி உதவியுடன் அடையாளம் காணப்பட்டு வழக்கு பதிய வேண்டும். இவர்களைத் தூண்டிவிட்டு தவறாக வழிநடத்திய சமூக விரோத நபர் / நபர்கள் உடனடியாக கைது செய்யப்பட வேண்டும். அவர்களை வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்திட வேண்டும். மேலும் வன்முறை தாக்குதலில் தங்கள் வீடு, வாகனம், குடிநீர் குழாய் போன்ற சொத்துக்களை இழந்த பாதிக்கப்பட்ட மக்களுக்கு உரிய இழப்பீட்டை உடனடியாக வழங்கவும் வலியுறுத்துகின்றோம். இத்தகைய நடவடிக்கைகள் மூலமே, இனிவரும் காலங்களில் இதுபோன்ற சாதிய வன்முறை நிகழ்வுகளைத் தடுத்திட முடியும்.

Leave a Reply