கள்ளக்குறிச்சி சங்கராபுரம் அருகே பட்டியல் சமூக மக்கள் மீது நடத்தப்பட்ட சாதிவெறி தாக்குதலை வன்மையாக கண்டிக்கின்றோம்! – மே பதினேழு இயக்கம்
கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் தாலுக்கா மூங்கில்துறைப்பட்டு அம்பேத்கர் நகரை சேர்ந்த பட்டியல் சமூக மக்கள் மீது, மூங்கில்துறைப்பட்டு மற்றும் சுற்றியுள்ள ஏழு கிராமங்களை சேர்ந்த ஆதிக்க சாதியினர் 19-01-2023 அன்று இரவு ஒன்று திரண்டு சாதிவெறி தாக்குதலை நடத்தியுள்ளனர். பட்டியல் சமூக மக்கள் மீதான ஆதிக்க சாதியினரின் இந்த சாதிவெறி தாக்குதலை மே பதினேழு இயக்கம் வன்மையாக கண்டிக்கிறது.
பொங்கல் பண்டிகையையொட்டி, 18-01-2023 அன்று, ஆதிக்க சாதியினர் நிறைந்த தொண்டமனூர் கிராமத்தில் நடைபெற்ற கலை நிகழ்ச்சியை காண அம்பேத்கர் நகரை சேர்ந்த பட்டியல் சமூக இளைஞர்கள் 3 பேர் சென்றனர். அப்போது, அவர்களை நோக்கி ‘நீங்கள் எப்படி எங்கள் பகுதிக்குள் நுழையலாம்’ என்று கேள்வி கேட்டு அப்பகுதியை சேர்ந்த ஒரு சில சாதிவெறி இளைஞர்கள் அவர்களை தாக்கியுள்ளனர். இதன்பிறகு இருதரப்பு பெற்றோர்களும் பேசி சமாதானம் செய்துகொண்டனர். மறுநாள் அம்பேத்கர் நகருக்கு அருகிலுள்ள மதுபான கடைக்கு சென்ற வேறு சிலருக்கும் அம்பேத்கர் பகுதி இளைஞர்களுக்கும் மோதல் ஏற்பட்டுள்ளது. இதனால் மோதலில் ஈடுபட்ட இருதரப்பு இளைஞர்களையும் காவல்துறையினர் கைது செய்தனர்.
இந்நிலையில், சுற்றியுள்ள கிராமங்களைச் சேர்ந்த 200-க்கும் மேற்பட்ட சிறுவர்கள், இளைஞர்களை பணம் கொடுத்து அம்பேத்கர் நகர் மக்களை தாக்குவதற்கு சாதிவெறியர்கள் திரட்டியுள்ளனர். மதுபோதையில் கத்தி, கம்புகளை வீசியவாறு நுழைந்து, நேரில் கண்ட பொருட்களை எல்லாம் அடித்து உடைத்ததாகவும், சாதி பெயர் சொல்லி இழிவாக கூச்சலிட்டு வசைபாடியதாகவும், பெண்களையும் குழந்தைகளையும் கொச்சையாக பேசி அச்சுறுத்தியதாகவும் அம்பேத்கர் நகர் மக்கள் கூறுகிறார்கள். மேலும், குடிநீர் குழாய்களை உடைத்துள்ளனர்; இருசக்கர வாகனங்களை அடித்து நொறுக்கியுள்ளனர்; வீட்டு கதவுகள், பாத்திரங்கள், பூந்தொட்டிகள் என கண்ணில் தென்பட்டதை எல்லாம் சூறையாடியுள்ளனர். கடந்த 22-ஆம் தேதி கள ஆய்வுக்கு சென்ற மே பதினேழு இயக்கத் தோழர்களும் இந்த சேதங்களை நேரில் கண்டுள்ளனர்.
இந்த சாதிவெறி தாக்குதலால் அப்பகுதியை சேர்ந்த பட்டியல் சமூக மக்கள் கடும் மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளனர். ஆதிக்க சாதியினரின் பகுதியில் இருக்கும் அரசுப் பள்ளியில் பயிலும் பட்டியல் சமூக மாணவிகள் அச்சத்திற்குள்ளாகியுள்ளனர். அந்த அரசுப்பள்ளியில் சாதிய மோதல்கள் தொடர்ந்து நடந்து வருவதாகவும், அதன் தொடர்ச்சியாகவே பொங்கல் கலை நிகழ்ச்சியில் பட்டியலின இளைஞர்கள் தாக்கப்படுள்ளனர் எனவும் அம்பேத்கர் நகர் மக்கள் சிலர் தெரிவிக்கின்றனர். தனிப்பட்ட நபர்களின் பிரச்சனை சாதியப் பிரச்சனையாக உருவெடுத்துள்ளதை காண முடிகிறது.
மூங்கில்துறைப்பட்டு, தொண்டமானூர், பொரசப்பட்டு, வாழவச்சனூர் உள்ளிட்ட ஆதிக்க சாதியினரின் பல கிராமங்கள் சூழ்ந்துள்ள பகுதியில் மிக குறைவான எண்ணிக்கையில் வசித்து வரும் அம்பேத்கர் நகர் பட்டியல் சமூக மக்கள் மீது பல ஊர்களை சேர்ந்த சாதிவெறியர்கள் ஒன்று கூடி தாக்குதல் நிகழ்த்தியுள்ளது அதிர்ச்சிக்குரியதாகும். தஞ்சை ஒரத்தநாடு அருகிலுள்ள கிளாமங்களத்தில் இரட்டைக்குவளை முறை பின்பற்றுவது, புதுக்கோட்டை அருகிலுள்ள வேங்கைவயல் கிராமத்தில் பட்டியல் சமூகத்தினர் பயன்படுத்தும் குடிநீர்த் தொட்டியில் மலம் கலந்தது என பட்டியல் சமூக மக்கள் மீது சாதிய வன்கொடுமை நிகழ்த்தப்படுவதன் தொடர்ச்சியாக, தற்போது கள்ளக்குறிச்சி அருகில் பட்டியல் சமூக மக்கள் மீது சாதிவெறி தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இது சமூகத்தில் சாதிவெறி இன்னமும் கோரதாண்டவம் ஆடுவதையே காட்டுகிறது.
இந்த சாதிவெறி தாக்குதலை ஈடுபட்டவர்களையும், இதற்கு பின்னாலிருந்து திட்டமிட்டு தூண்டிய சாதிவெறியர்களையும் வன்கொடுமை தடுப்புச்சட்டத்தின் கீழ் உடனடியாக கைது செய்திட வேண்டும் என மே பதினேழு இயக்கம் வலியுறுத்துகிறது. பாதிக்கப்பட்ட அம்பேத்கர் நகர் மக்களுக்கு வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் இழப்பீடுகளை வழங்கிட உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். மேலும், அரசுப்பள்ளியில் நிலவிடும் சாதியப் பாகுபாடுகளை கலைந்து மாணவர்கள் அச்சமின்றி பயில உரிய நடவடிக்கைகளை மாவட்ட நிர்வாகம் மேற்கொள்ள வேண்டுமென வலியுறுத்துகிறோம்.
மே பதினேழு இயக்கம்
9884864010