தமிழர்களின் பண்டிகை நாளில் ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா நடத்தும் தேர்வு- உடனடியாக மாற்றுத்தேதியை அறிவித்திடுக

- in அறிக்கைகள்​

தமிழர்களின் பண்டிகை நாளில் ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா நடத்தும் தேர்வு- உடனடியாக மாற்றுத்தேதியை அறிவித்திடுக – மே பதினேழு இயக்கம்


ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா நாடு முழுவதுமுள்ள தங்களது வங்கி கிளைகளில் காலியாக உள்ள ஜீனியர் அசோசியட்ஸ் பதவிகளுக்கு தகுதியான நபர்கள் விண்ணப்பிக்கலாமென்றும், இரண்டு கட்ட தேர்வுக்கு பிறகு அதில் வெற்றி பெறுபவர்கள் வேலைக்கு சேர்த்துக் கொள்ளப்படுவார்கள் என்றும் கடந்த 07.09.22 அன்று பத்திரிக்கைகளில் செய்தி வெளியிட்டிருந்தது. இதனையடுத்து முதல்கட்டத்தேர்வுகள் முடிவடைந்த நிலையில், அதில் தேர்ச்சி அடைந்தவர்களுக்கு அடுத்த கட்ட தேர்வுகளுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டிருக்கிறது.


அந்த தேர்வு தமிழர்களின் பண்டிகையான பொங்கல் அன்று சனவரி 15ஆம் தேதியில் வைத்திருக்கிறார்கள். பொங்கல் என்பது தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் மாநிலங்களில் வாழும் தமிழர்கள் கொண்டாடும் ஒரு பண்டிகை. அந்த நாளில் தேர்வை வைத்திருப்பது திட்டமிட்டு தமிழர்களின் பங்கேற்பை தடுக்கவேண்டுமென்கிற எண்ணத்திலும், தமிழர்களின் பண்டிகையான பொங்கலை தமிழர்கள் கொண்டாடக்கூடாது என்ற எண்ணத்திலும் வைக்கப்பட்டிருப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
ஏற்கனவே இதுபோலத்தான் 2017இல் பொங்கல் பண்டிகைக்கு விடுமுறைகிடையாது என்றும் பொங்கலை ஒட்டி காலம் காலமாக நடைபெற்றுவந்த சல்லிகட்டுக்கு தடை என்று ஒன்றிய பாசக அரசு சொன்னபோது தமிழ் இளைஞர்கள் தமிழ்நாடு முழுவதும் பெரும் கிளர்ச்சியில் ஈடுபட்டனர் என்பது கடந்த கால வரலாறு.


பண்டிகை காலங்களில் மக்கள் தங்களது சொந்த ஊர்களுக்கு செல்வார்கள் அதனால் கடுமையான போக்குவரத்து நெருக்கடி ஏற்படும் என்கிற சிறுபுரிதல் கூட இல்லாமலும், தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் தேர்வு நடக்கும்போது தேர்வை நடத்துபவர்களும் இந்த சிக்கலில் மாட்டிக்கொள்வதற்கு வாய்ப்பு அதிகம். ஆகவே தமிழர்களின் உணர்வுகளுக்கு மதிப்பழித்து இரண்டாம் கட்ட தேர்வுக்கான மாற்றுத்தேதியை உடனடியாக அறிவிக்கவேண்டுமென மே பதினேழு இயக்கம் வலியுறுத்துகிறது.


மே பதினேழு இயக்கம்
9884864010

Leave a Reply